Ad

சனி, 12 டிசம்பர், 2020

`டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் நக்சல், மாவோயிஸ்டுகள் ஊடுருவல்!’ - அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் `டெல்லி சலோ’ என்ற பெயரில் டெல்லியின் எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் வரலாறு காணாத இப்போராட்டமானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், இதனை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில்,`வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என்று விவசாயிகள் இரண்டாவது வாரத்தைக் கடந்து தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் பலரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பின் 93-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பியூஷ் கோயல்,

``டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டமானது, தனது தன்மையை இழந்துவிட்டது. விவசாயிகளுடன் மாவோயிஸ்ட், நக்சல் மற்றும் இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தைத் தவறான வழியில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக, போராட்டத்தின் நடுவே தேசத் துரோக குற்றத்துக்காக சிறையில் உள்ள தங்களின் தலைவர்களை விடுவிக்ககோரி விவசாயிகளுடன் இணைந்து அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். தங்களின் கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்காமல், இந்த போராட்டத்தின் மூலம் ஆதாயம் தேடுகின்றனர்.

தற்பொழுது, இவர்களின் பிடியில் விவசாயிகள் சிக்கியுள்ளதாலேயே விவசாய சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறியாமல் செயல்பட்டு வருகின்றனர். மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயத்துக்கான ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள 10-12 கோடி விவசாயிகள் பலனடைவர். இதனை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டின் விவசாயிகள் அமைதியை விரும்புவர்கள். அதனால், அவர்கள் இது போன்ற அமைப்பினரின் ஊடுருவுவலை விரும்ப மாட்டார்கள். மாவோயிஸ்ட், நக்சல்களின் பிடியிலிருந்து விலகினால், அவர்களுக்கு இதன் நன்மைகள் புரியவரும். அதற்குப் பிறகும் விவசாயிகளுக்கு இது குறித்த சந்தேகங்கள் இருந்தால் அரசு தெளிவுபடுத்த தயாராகவுள்ளது” என்று தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன்

இதேபோல் மத்தய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஊடங்களிடம் அளித்த பேட்டியில், ``மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்த புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகள் தேவையில்லாமல் அச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு இது குறித்த தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் கண்டிப்பாக நிர்ணயிக்கும்.

ஆனால், அமைதியாக நடைபெற்று வரும் போராட்டத்தினை சமூக விரோதிகள் கைப்பற்றத் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அவர்கள் போராட்டத்தைத் தவறான வழியில் திசைதிருப்பி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/farmer-protest-infiltrated-by-maoist-elements-said-by-minister-piyush-goyal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக