Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

தேனி: கர்ப்பிணி மனைவி கொலை - அ.தி.மு.க பேரூராட்சி முன்னாள் தலைவருக்குத் தூக்கு!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள காந்திநகர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் சுரேஷ் (வயது 36). அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு மேகமலை ஹைவேவிஸ் பேரூராட்சித் தலைவராக இருந்துள்ளார். சுரேஷுக்கும், கற்பகவள்ளி என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கற்பகவள்ளி மூன்றாவதாக கருவுற்றுள்ளார். அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கணவர் சுரேஷ், கற்பகவள்ளியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், அவரை சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Also Read: தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது

சுரேஷ் மற்றும் சின்னமனூர் போலீஸார்

இந்நிலையில், 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி பிற்பகலில், தனது வீட்டில் இருந்த மனைவி கற்பகவள்ளியை தாக்கிய சுரேஷ், சிகிரெட்டால், அவரது மார்புப் பகுதியில் சூடு வைத்துள்ளார்.

மேலும், வயிறு மற்றும் பிறப்புறுப்பில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில், கற்பகவள்ளியின் 5 மாத கரு கலைந்து ரத்தப்போக்கு ஏற்பட்டது. அப்போதும் அவரைத் தொடர்ச்சியாக தாக்கிய சுரேஷ், தாலிக்கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வரவே, கற்பகவள்ளி தற்கொலைக்கு முயன்றதாக பொய் கூறி, அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் சுரேஷ்.

Also Read: தேனி: போலீஸாரை அலறவிட்ட `டிக்டாக்’ திவ்யா! - என்ன நடந்தது?

சுரேஷ்

மேல் சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் இருந்து, தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் கற்பகவள்ளி. அங்கே அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கற்பகவள்ளியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் கொடூரமாக தாக்கப்பட்டு, அவரை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது தெரியவந்தது. அதனை அடுத்து சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்த சின்னமனூர் போலீஸார், அவரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று, நீதிபதி அப்துல்காதர், சுரேஷ் செய்த குற்றம் உறுதியானதால், அவரை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிட்டார். மேலும், கருச்சிதைவு செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Theni Court

Also Read: தேனி: சுருளி அருவியில் கல்வெட்டை மறைத்து ரூ.5 லட்சத்தைச் சுருட்டிய வனத்துறை அதிகாரி!

மற்றொரு வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த மொக்கை, அவரது மகன்கள் உதயகுமார், முத்து ஆகிய மூவரும், கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி, அதே தெருவில் வசித்துவந்த அழகர் மனைவி ராமாயி என்பவரை முன்பகை காரணமாக அரிவாளால் வெட்டினர்.

இதில், சம்பவ இடத்திலேயே ராமாயி உயிரிழந்தார். மூவரையும் தடுக்க வந்த ராமாயி மருமகள் லெட்சுமியும் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்தார். இது தொடர்பாக தேவதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.

தேனி நீதிமன்றம்

Also Read: தேனி: `பெண்களுக்கு முன்னுரிமை; சொல்லும் தந்தை எம்.எல்.ஏ., மகனோ எம்.பி’ - ஓ.பி.எஸ்ஸை சீண்டிய கமல்

இந்த வழக்கு, தேனி மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. விசாரணை முடிவடைந்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கினார். ராமாயியைக் கொலை செய்த குற்றத்திற்காக, மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. லெட்சுமியைக் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக, 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் மூவரும் தலா ரூ.10,000 வீதம், காயமடைந்த லெட்சுமிக்கு அபராதத் தொகையாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தார் நீதிபதி.

ஒரே நாளில், தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது, நீதிமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/social-affairs/crime/theni-court-awards-death-sentence-to-admk-official-over-wife-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக