கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் மூன்றுகட்ங்களாக நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தணம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி, இந்தத் தேர்தல் நடக்கிறது. `கொரோனா காலத்தில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அனைவரும் விழிப்புணர்வுடன் வாக்களிக்கச் செல்க வேண்டும்’ என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் கமிஷனும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில்கொண்டு ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்தல் சம்பந்தமாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பொதுமக்களும், அதிகாரிகளும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என எல்லோரும் ஒரேமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும். எல்லோரும் தங்களுடைய ஆரோக்கியத்தையும், மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓட்டு போடுவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு, மீண்டும் வீடு திரும்பும் வரை வாய், மூக்கு ஆகியவற்றை மறைக்கும்படி மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும். தெரிந்தவர்களைக் கண்டால் பேசுவதற்காக மாஸ்கை கீழே இறக்கக்கூடாது. யாராவது உங்களிடம் மாஸ்கை இறக்கி பேசினால், மாஸ்க்கை சரியாக அணிந்துகொண்டு பேசச்சொல்லுங்கள்.
குழந்தைகளை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து வரக்கூடாது. ரெஜிஸ்டரில் கையெழுத்து போடுவதற்கான பேனா கொண்டுவர வேண்டும். வரிசையில் நிற்கும்போதும், மற்ற சமயங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். வக்குச்சாவடிக்குள் செல்லும்போதும், வெளியே வந்ததும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். ஒரே சமயத்தில் மூன்று பேர்தான் பூத்துக்குக் செல்ல வேண்டும். சந்தேகத்தின்பேரில் முகத்தைக் காட்டவேண்டிய நிலை ஏற்பட்டால் மட்டுமே மாஸ்கைக் கழற்றவேண்டும்.
வாக்குப்பதிவுக்கு பத்து நாள்களுக்கு முன்பும் முதல், முந்தினநாள் 3 மணிவரை கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் வாக்களிக்க பூத்துக்கு செல்ல வேண்டாம். அவர்கள், சிறப்பு தபால் ஓட்டு போட்டுக்கொள்ளலாம். எதாவது சந்தேகம் என்றால் 1056 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டும்" இவ்வாறு கேரள சுகாதாரத்துறை வழிகாட்டியுள்ளது. காலை 7 மணி முதக் வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை 11.30 மணி நிலவரப்படி ஐந்து மாவட்டங்களிலும் 34.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் 34.35 சதவீதமும், கொல்லம் மாவட்டத்தில் 31.9, பத்தனம்திட்டா 35.92, ஆலப்புழா 36.59, இடுக்கி மாவட்டத்தில் 34.59 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஐந்து மாவட்டங்களிலும் 385 உள்ளாட்சிகளில், 6,911 பதவிகளுக்காக 24,584 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 10-ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ம் தேதியும் நடக்கிறது. வரும் 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
source https://www.vikatan.com/government-and-politics/election/kerala-local-body-election-first-phase-voting-underway-in-5-districts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக