Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

``நானும் இயற்கை விவசாயிதான்!'' - தன் மாடித்தோட்ட அனுபவம் பகிரும் சுஹாசினி

கொரோனாவுக்குப் பிறகு, இயற்கை விவசாயத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இயற்கை விவசாயிகளுடன் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. பிரகாஷ் ராஜ், கிஷோர், ஜெயராம் உள்ளிட்ட சிலரைத் தொடர்ந்து, சினிமா கலைஞர்கள் பலரும்கூட இயற்கை விவசாயத்திலும் மாடித்தோட்டம் அமைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் நடிகை சுஹாசினியும் இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
மாடித்தோட்டத்தில் சுஹாசினி

பல ஆண்டுகளாக மாடித்தோட்டப் பராமரிப்பில் ஈடுபட்டுவரும் சுஹாசினி, ஹைட்ரோபோனிக்ஸ் என்ற மண்ணில்லாத வேளாண் முறையில் சிறிய மாடித்தோட்டம் ஒன்றைப் புதிதாக அமைத்திருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார். மாடித்தோட்ட அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.

``என் பூர்வீகமான பரமக்குடியில செடி வளர்ப்புக்கெல்லாம் போதிய வாய்ப்பு கிடைக்கலை. சென்னை வந்த பிறகு, எங்க வீட்டு பூச்செடிகளுக்கான பராமரிப்புக்குக் குறிப்பிட்ட நேரம் செலவிடுவேன். அரிசி கழுவின தண்ணி உட்பட கிச்சன் கழிவுகளைத் தவறாம செடிகளுக்கு அம்மா உரமா பயன்படுத்துவாங்க. அதனால செடிகளோட வளர்ச்சி சிறப்பா இருக்கும். இதையெல்லாம் பார்த்துதான் எனக்கும் செடி வளர்ப்பில் ஆர்வம் அதிகரிச்சது. ஆனா, அதன் பிறகு சினிமாவுல பிஸியாகிட்டதால தோட்டப் பராமரிப்புல பெரிசா கவனம் செலுத்த முடியலை. கல்யாணத்துக்குப் பிறகு மாடித்தோட்டப் பராமரிப்புல ஓரளவுக்கு கவனம் செலுத்தினேன்.

சுஹாசினி

கேரளாவைச் சேர்ந்த நண்பர் ஆன் சஜீவ் பல வருஷமா இயற்கை விவசாயம் செய்யுறார். இயற்கை விவசாயத்தையும் அதன் மூலம் விளைஞ்ச விளைபொருள்களையும் மக்கள்கிட்ட பிரபலப்படுத்த உதவணும்னு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கேட்டார். அவர் பணிகளுக்குத் தூதுவர் மாதிரி சில காலம் இருந்தேன். அப்போதான் இயற்கை விவசாயம் பத்தின அடிப்படை விஷயங்களைக் கத்துகிட்டேன். ஆழ்வார்பேட்டையில அப்பார்ட்மென்ட் வீட்டுல வசிக்கிறோம். மொட்டைமாடியில 200 சதுர அடியில மட்டும் மாடித்தோட்டம் அமைச்சிருக்கேன். அதில், துளசி, கறிவேப்பிலை, கீரை வகைகள், காய்கறிகள், அலங்காரச் செடிகள், மூலிகைகள் உட்பட சில செடிகளை வளர்த்தேன். சாதக, பாதக அனுபவங்கள் நிறைய கிடைச்சது.

மாடித்தோட்டப் பராமரிப்புக்கு அதிக நேரம் செலவிடணும், கூடுதலான செடிகளை வளர்க்கணும்ங்கிற ஆசை இந்த கொரோனா காலத்துலதான் சாத்தியமாச்சு. வீட்டைவிட்டு வெளிய போக முடியாத சூழல்ல, தினமும் மொட்டைமாடியில அதிக நேரம் செலவிட்டேன். தக்காளி, வெண்டை, கத்திரி, கொத்தவரங்காய், காராமணி, பச்சைமிளகாய், வெள்ளரி உள்ளிட்ட சில காய்கறிகளையும் கீரைச் செடிகளையும் புதுசா வளர்க்க ஆரம்பிச்சேன். கிச்சன் கழிவுகளை ஓரளவுக்குச் செடிகளுக்கு உரமா பயன்படுத்துவேன்.

சுஹாசினி

மாடித்தோட்டம் அமைச்சிருக்கிற நண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்டுப்பேன். தினமும் குறைவான அளவுலதான் காய்கறிகள் கிடைக்குது. ஆனா, நானே வளர்த்து ஆளாக்கிய செடியில காய்கறிகளைப் பறிச்சு சமையல் செய்யறதுல விவரிக்க முடியாத சந்தோஷம் கிடைக்குது” என்பவர் புதிதாக அமைத்துள்ள ஹைட்ரோபோனிக்ஸ் முறை செடி வளர்ப்பு குறித்துப் பேசினார்.

``எங்க மொட்டைமாடியில இன்னும் அதிகமான செடிகளை வளர்க்க முடியும். ஆனா, செடிகளுக்கு விடும் தண்ணி கசியிறதால சில பிரச்னைகள் ஏற்படுது. அதனாலதான், குறைவான தண்ணியில மணலே இல்லாம செடி வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையைத் தேர்ந்தெடுத்தேன். சோதனை முயற்சியா ஒரு மாசத்துக்கு முன்புதான் இந்த முறை செடி வளர்ப்பை ஆரம்பிச்சேன். செலவு அதிகம்னாலும், இந்த முறை செடி வளர்ப்புல நீர் கசிவு சுத்தமா இருக்காது. வழக்கமான முறையைவிட இதுல தண்ணி மிகக்குறைவாதான் தேவைப்படும். வெறும் 40 சதுர அடியில 240 செடிகளை மட்டுமே வெச்சிருக்கேன்.

Suhasini

சாலட் டிஷ்ஷூக்குத் தேவையான இலைகள், சில கீரை வகைச் செடிகளை இந்த முறையில வளர்க்கிறேன். இதுக்காகப் பசுமைக்குடிலும் அமைச்சிருக்கேன். தினமும் செடிகளைப் பராமரிக்கப் போறப்போ ஃபிரெஷ் இலைகளைப் பறிச்சு சாப்பிடுவேன். அந்த இலைகள்ல செய்யற சாலட்டை என் கணவர் மணி சாரும் விரும்பிச் சாப்பிடுவார். சாதகமான அனுபவம் கிடைச்சிருக்கிறதால, இந்த முறை செடி வளர்ப்பை விரைவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கேன். வெயில் குறைவா இருந்தா உடனே மாடித்தோட்டத்தைக் கவனிக்கப் போயிடுவேன். வீட்டுல நான் இல்லைன்னா, எங்கயும் தேட மாட்டாங்க. உடனே மாடிக்கு வந்திடுவாங்க. யோகா, தியானத்துக்கு இணையான புத்துணர்ச்சியை மாடித்தோட்டப் பணிகளும் கொடுக்குது.

விவசாய ஆர்வம் அதிகரிக்கும் வேளையில, எங்க உணவு முறையிலும் படிப்படியா மாற்றங்கள் செய்யுறேன். வீட்டுல சமையல் முடிவுகள் எல்லாம் என்னுடையதுதான். வாரத்துல ஒருநாள்தான் உருளைக்கிழங்கு பயன்படுத்துவோம். வாழைக்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு அதிகம் சேர்க்க மாட்டோம். புடலை, பீர்க்கன், கீரைகள், செளசெள, பரங்கிக்காய், பூசணியெல்லாம் எங்க உணவுல அதிகம் எடுத்துப்போம். முடிஞ்ச வரைக்கும் ஆரோக்கியமான உணவுகளையே அதிகம் பயன்படுத்தறோம்” என்று புன்னகையுடன் கூறுபவர், கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் சொந்த விளைநிலத்தில் பணியாளர்களைக் கொண்டு விவசாயமும் செய்கிறார்.

மாடித்தோட்டத்தில் சுஹாசினி

Also Read: மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் நீங்களும் பண்றீங்களா?! - வீட்டுக்குள் விவசாயம் - 6

``கொடைக்கானல்ல எங்களுக்குத் தோட்டத்துடன்கூடிய வீடு இருக்கு. சம்மர் நேரத்துல ரெண்டு மாசம் அங்க இருப்பேன். அப்போ தோட்டத்து வேலைகள்ல அதிக நேரம் செலவிடுவேன். முள்ளங்கி, கேரட், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சூப்பரா விளையும். பேரிக்காய், கொய்யா மரங்கள்ல அதிகளவுல காய்கள் கிடைக்கும். ஆப்பிள் மரம் ஒண்ணு வெச்சிருக்கோம். அங்க நிறைய குரங்குகள் இருக்கும். அவைதான் எங்க தோட்டத்துப் பழங்களை அதிகம் சாப்பிடும். அதைப் பார்த்து ரசிக்கிறதெல்லாம் அலாதியான அனுபவம். கொடைக்கானல் போகவும் இப்போ போதிய நேரம் கிடைக்கிறதில்லை.

பொள்ளாச்சியிலயும் நிலம் இருக்கு. அதில் தென்னை, மா மரங்கள்தான் அதிகம் வளருது. பணியாளர் பார்த்துக்கிறார். அங்க எப்பயாச்சும்தான் போக முடியுது. அதுவும் ஒருநாள், அரைநாள்தான் அங்க நேரம் செலவிட முடியும். ஓய்வுக்காலத்துக்குப் பிறகு கணவரும் நானும் அங்கயே போய் விவசாய வேலைகளைக் கவனிக்கலாம்னு திட்டமிட்டிருக்கோம். காலம் என்ன மாற்றங்களை நிகழ்த்தப்போகுதுனு பொறுத்திருந்துதான் பார்க்கணும். நான் நிர்வகிக்கிற `நாம்’ அமைப்பின் அலுவலகத்துலயும் தோட்டம் இருக்கு. அதில் சில காய்கறிகளை விளைவிக்கிறோம். அந்த வேலைகளை சில பெண்கள்தாம் பார்த்துக்கறாங்க.

மாடித்தோட்டத்தில் சுஹாசினி

Also Read: மாடித்தோட்டத்துல காய்கறிகள் மட்டுமல்ல; பூக்களும் நிச்சயம் இருக்கணும்... ஏன்? - வீட்டுக்குள் விவசாயம்

ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகள், இயற்கை விவசாயத்தின் அவசியமெல்லாம் புரியும் அதேவேளையில, விவசாயிகள் படும் கஷ்டங்களும் நல்லா புரியுது. என்னதான் வளர்ச்சி, தொழில்நுட்பம், நாகரிகம் பெருகினாலும், நம்ம வாழ்க்கைக்கும் உடல்நலனுக்கும் எப்போதுமே விவசாயிகளே முக்கிய ஆதாரமா இருப்பாங்க. இதை எப்போதும் மறக்காம, விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் ஆதரவா இருக்கணும்” என்று மகிழ்ச்சியுடன் முடித்தார்.



source https://www.vikatan.com/news/agriculture/suhasini-maniratnam-speaks-about-her-passion-in-organic-farming-and-terrace-garden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக