மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய 3 வேளாண் மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும், என்று உறுதியாக இருக்கும் விவசாயிகளுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்தும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்து வரும் நிலையில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கிசான் சம்மேளன்' (விவசாயிகள் கூட்டம்) எனும் நிகழ்வு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 18 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்று (டிசம்பர் 14) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
விவசாயிகள் தாங்கள் போராடும் இடங்களிலேயே அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வார்கள் என்று விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரான குருனாம் சிங் சதூனி கூறியுள்ளார்.
இதையடுத்து, ஹரியானா-டெல்லி எல்லையான சிங்குவில் 33 உழவர் தலைவர்கள் உண்ணாவிரதம் உள்ளனர். உண்ணாவிரதம் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தெரிகிறது.
விவசாயிகளின் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "உண்ணாவிரதம் தூய்மையானது. நீங்கள் எங்கிருந்தாலும் தயவுசெய்து எங்கள் விவசாயிகளுக்காக விரதம் இருங்கள். அவர்கள் போராடும்போது அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இறுதியில் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்து அதன் கடிதத்தை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள போதும், அவரது கடிதம் அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்கப்படவில்லை.
இவர் 1989 முதல் 1994 ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி, அதன்பிறகு, பஞ்சாப் சிறைச்சாலைத் துறையில் 1994-ம் ஆண்டு துணை கண்காணிப்பாளராக இணைந்தார். தற்போது சிறைத் துறையின் துணைத் தலைவராக இருக்கிறார்.
தனது ராஜினாமா குறித்து பேசிய லக்மிந்தர் சிங் ஜாகர், “நான் முதலில் ஒரு விவசாயி. பின்னர்தான் ஒரு போலீஸ் அதிகாரி. இன்று எனக்கு எந்த பதவி கிடைத்தாலும், அதற்கு காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்தது தான். எனவே, நான் விவசாயத்திற்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார்.
விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் அதே நாளில் தனது விழிப்புணர்வு பிரசாரத்தை பா.ஜ.க தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
source https://www.vikatan.com/news/general-news/punjab-dig-who-resigned-in-protest-against-farm-laws
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக