Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

`திடீர் மயக்கம்; தண்டவாளத்தில் உடல்... மின்னல் வேக விபத்து!' - மீண்டெழுந்த பாடிபில்டர் கார்த்திகேயன்

அன்று வழக்கம்போல சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த கார்த்திகேயன், தண்டவாளத்தைக் கடக்க ஆயத்தமானார். பக்கவாட்டில் ரயில் வருவதை அறிந்தவர், அதற்குள் தண்டவாளத்தைக் கடந்துவிடலாம் என வேகமாக நடந்தார். திடீரென நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த கார்த்திகேயனின் கால்களில் மின்னல் வேகத்தில் ரயில் சக்கரங்கள் ஏறின. `உயிர்ப்பிழைப்பது கடினம்தான்’ என தானே தீர்மானித்துக்கொண்ட கார்த்திகேயன் காப்பாற்றப்பட்டார். ஆனால், இரண்டு கால்களும் நீக்கப்பட்டன.
கார்த்திகேயன்

`இனி சவாலான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும்' என்று முடிவெடுத்தவர், பாடிபில்டருக்கான பயிற்சியில் தீவிரமாகக் கவனம் செலுத்திவருகிறார். ஆணழகன் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முன்னணி வீரராக இருக்கிறார். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பிரபஞ்ச அளவிலான ஆணழகன் போட்டியில் வீல்சேர் பிரிவில் கலந்துகொள்ள தென்னிந்தியாவில் இருந்து இவர் மட்டுமே தகுதிபெற்றிருக்கிறார். அந்த விபத்து முதல் தற்போதைய நம்பிக்கை வாழ்க்கை வரையிலான கதையை புன்னகையுடன் கூறுகிறார் கார்த்திகேயன்.

``பூர்வீகம் சென்னைதான். ஏழ்மையான குடும்பம். அப்பா தனியார் ஆஸ்பத்திரியில ஆம்புலன்ஸ் டிரைவர். அம்மாவும் வேலைக்குப் போறாங்க. சினிமா துறையில வேலை செய்றது என் கனவு. 2016-ல் பி.எஸ்ஸி இரண்டாம் வருஷம் படிச்சுக்கிட்டிருந்தேன். திருமுல்லைவாயல்ல இருக்கும் எங்க வீட்டுல இருந்து கிளம்பி, வழக்கம்போல ஃபிரெண்ட் வீட்டுக்குப் போயிட்டு பட்டரவாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தேன். அப்போல்லாம் அங்க சப்வே, ஓவர் ப்ரிட்ஜ் எதுவும் கிடையாது. தண்டவாளத்தைக் கடந்தும், தண்டவாளத்துக்குப் பக்கவாட்டுல ஓரமா நடந்துபோயும்தான் நடைமேடைக்குப் போகணும்.

கார்த்திகேயன்

எனக்குக் கொஞ்ச தூரத்துலதான் புறநகர் மின்சார ரயில் வந்துச்சு. சீக்கிரமா தண்டவாளத்தைக் கடந்துடலாம்னு வேகமா நடந்தேன். அன்னிக்கு காய்ச்சலால் ரொம்பவே சோர்வா இருந்தேன். வெயிலும் அதிகம். திடீர்னு உடல்சோர்வு அதிகமாகி கீழ விழுந்துட்டேன். குப்புறக்கிடந்த நிலையில என் கால்கள் மட்டும் தண்டவாளத்துக்கு மேல இருந்துச்சு. கண்ணிமைக்கும் நேரத்துல அந்த ரயில் சக்கரங்கள் என் கால்கள் மேல ஏறிடுச்சு. இடுப்புக்குக் கீழ இருந்த சதைகள் தெறிச்சு ரத்த வெள்ளமா இருந்துச்சு. ரயிலின் கீழ்ப்பாகங்கள் உரசியதால முதுகுலயும் பலத்த காயம். என்னால கொஞ்சம்கூட நகர முடியல. `இனி நான் உயிர்வாழ வாய்ப்பில்லை’ன்னுதான் நினைச்சேன்.

வலி தாங்காம அப்படியே மயங்கிட்டேன். சிலர் என்னைத் தூக்கி, என்மேல ஏறிய அதே ரயில்ல படுக்க வெச்சிருக்காங்க. என் காலேஜ் ஐடி கார்டைப் பார்த்து அப்பாவுக்குத் தகவல் சொல்லியிருக்காங்க. அம்பத்தூர் ரயில் நிலையத்துல காத்திருந்த அப்பா, என்னைத் தூக்கிகிட்டு ஆம்புலன்ஸ்ல ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனார். அப்போ கண் முழிச்சேன். என் பக்கத்துல இருந்த அப்பா அழுதுகிட்டு இருந்தார். மீண்டும் மயங்கிட்டேன்” என்பவரின் உயிரைக் காப்பாற்ற ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் பெரிதும் போராடியுள்ளனர். வேறு வழியின்றி கார்த்திகேயனின் கால்கள் நீக்கப்பட்டன. அதன் பிறகு பாடிபில்டராகப் புதிய பரிமாணம் எடுத்திருக்கிறார்.

விபத்துக்குப் பிறகு செயற்கைக் கால்களுடன் கார்த்திகேயன்

``ஆஸ்பத்திரியில ரெண்டு வார சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆனேன். எனக்கு கால்கள் இல்லைங்கிறதை குடும்பத்தினரால ஏத்துக்கவே முடியலை. செயற்கைக்கால் வெச்சு என்னை மறுபடியும் நடக்க வெச்சுத்தான் வீட்டுக்குக் கூட்டிட்டுபோகணும்னு குடும்பத்தினர் தீர்க்கமா முடிவெடுத்தாங்க. முதுகுல காயம் ஆறாததால, என்னால திரும்பக்கூட முடியலை. துணியில படுக்க வெச்சுதான் சித்தி வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. கால் காயம் ஆறினதும் வீல்சேர்ல இருக்கப் பழகினேன். பல மாதங்கள் சித்தி வீட்டுலதான் இருந்தேன். பிறகு, என் வீட்டுல இருந்தபடியே காலேஜ் படிப்பையும் தொடர்ந்தேன். டாக்டர் ஒருவர் பெரிதும் உதவினதோடு எட்டு லட்சம் ரூபாய் பணம் திரட்டிக்கொடுத்தார்.

விபத்து நடந்து ஆறு மாசம் கழிச்சு ஹைட்ராலிக் செயற்கைக்கால் பொருத்தினாங்க. பிறர் உதவியில்லாம நடக்கவும், காலேஜ் போகவும் ஆரம்பிச்சேன். காலேஜ்ல என் க்ளாஸ் ரூம் முதல் தளத்துல இருந்துச்சு. என்னால படிக்கட்டுகள் ஏற சிரமம்னு எனக்காகவே தரைதளத்துல க்ளாஸ் ரூமை மாத்தினாங்க. வீட்டுலயும் காலேஜ்லயும் ரொம்பவே ஊக்கப்படுத்தினாங்க. அந்த நம்பிக்கையில சிரமப்பட்டாவது ஏதாச்சும் சாதிக்கணும், சவாலான வேலையைச் செய்யணும்னு முடிவெடுத்தேன். `போலியோ அட்டாக் உட்பட கால் இருந்தும் நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பாடிபில்டர் போட்டிகள்ல கலந்துக்கறாங்க. ஆனா, ரெண்டு கால்களும் இல்லாதவங்க யாருமே இந்தத் துறையில பெரிசா சாதிச்சதில்லை’ன்னு ஜிம் பயிற்சியாளர்கள் சிலர் சொன்னாங்க.

கார்த்திகேயன்

அதுவரைக்கும் ஜிம் பயிற்சிக்கெல்லாம் நான் போனதில்லை. ஆனாலும், கால்கள் இல்லாட்டியும் பாடிபில்டரா சாதிக்கணும்னு முடிவெடுத்தேன். நிறைய ஜிம் ஏறி இறங்கினேன். என்மேல நம்பிக்கையில்லாம, `உன்னால முடியாது’ன்னு பல பயிற்சியாளர்கள் என்னை நிராகரிச்சாங்க. கனகராஜ்ங்கிற மாஸ்டர்தான் என்னை நம்பினார். அவர் ஜிம்லயே என்னை ஆறு மாசம் தங்க வெச்சு பயிற்சி கொடுத்தார். தினமும் ஆறு மணிநேரம் வொர்க் அவுட் செஞ்சேன். அதுக்கேத்த மாதிரி உணவுப் பழக்கம், தூக்கம்னு அன்றாட வாழ்க்கை முறையை மாத்திகிட்டேன். வீட்டுலயே முடங்கியிருக்காம, வைராக்கியமா இருக்கானேன்னு குடும்பத்துலயும் என்மேல முழுமையா நம்பிக்கை வெச்சாங்க.

தினமும் சாப்பாடு, முட்டையெல்லாம் அப்பாதான் கொண்டுவந்து கொடுப்பார். டயட், உடற்பயிற்சினு கடுமையா பயிற்சி எடுத்தேன். போன வருஷம் ரெண்டு அசோஸியேஷன் நடத்தின மிஸ்டர் தமிழ்நாடு போட்டிகள்ல மாற்றுத்திறனாளிகள் பிரிவுல முதல் பரிசு வாங்கினேன். அடுத்து மிஸ்டர் இந்தியா போட்டியில கலந்துகிட்டேன். அங்க மாற்றுத்திறனாளிகளா இல்லாத இயல்பான பாடிபில்டர்களோடு சேர்ந்து போட்டிபோட்டேன். `டாப் 10' போட்டியாளர்கள் லிஸ்ட்ல இடம் பிடிச்சேன். மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டிக்கான தகுதித்தேர்வுல வீல்சேர் பிரிவுக்குத் தென்னிந்தியாவுல இருந்து நான் மட்டுமே செலக்ட் ஆகியிருக்கேன்.

இந்தப் போட்டி அடுத்த வருஷம் ஜூன் மாசம் பாங்காக்ல நடக்கவிருக்கு. அதுக்காகப் பயிற்சி எடுத்துகிட்டு இருக்கேன். இப்ப ஜிம் போறேன். தவிர, ஆவடியில மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தறேன். மிஸ்டர் ஒலிம்பியா போட்டியில கலந்துகிட்டு பதக்கம் வெல்றதுதான் என்னோட இலக்கு. அந்த நம்பிக்கை நிறைவேறும்னு உறுதியா நம்பறேன். கால் இல்லையேங்கிற வருத்தம் மனதளவுல எனக்கு சுத்தமா இல்லை. இந்த நிலையிலயும் பெரிசா சாதிக்கணும்ங்கிற வைராக்கியம் மட்டுமே எனக்குள் இருக்கு"

- உறுதியான மனப்பக்குவத்துடன் உற்சாகமாகக் கூறுகிறார் கார்த்திகேயன்!



source https://www.vikatan.com/news/general-news/differently-abled-bodybuilder-karthikeyan-shares-his-motivational-life-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக