கடந்த மார்ச் மாதத்திலிருந்து, இன்று வரை கொரோனா கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் உயிர் பலி, பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்பு எனப் பல்வேறு பாதிப்புகள் உண்டாகியிருக்கின்றன.
இந்தியாவில் நீண்ட காலமாகவே வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வருடங்களாகப் புதிய வேலைவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக உருவாகவில்லை. இதுபோன்ற சூழலில் திடீரென தோன்றிய கொரோனா வைரஸ், இருக்கும் வேலைவாய்ப்புகளையும் பறித்துவிட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 120 மில்லியன் பேர் இந்தியாவில் வேலையை இழந்துள்ளனர்.
இந்த நேரத்தில்தான் வேலையை இழப்போருக்கு ஆதரவாகக் காப்பீட்டுத் திட்டம் ஏதேனும் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. இதைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டது. அடுத்தகட்டமாக இதை எவ்வாறு செயல்படுத்துவது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு வாரியம் மற்றும் பொது காப்பீட்டு கவுன்சில் ஆகிய இரண்டு அமைப்புகளிடமும் மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது.
முதல் `ஜாப்லாஸ்' இன்ஷூரன்ஸ்!
இந்த நிலையில், பாலிசிபஜார்.காம் நிறுவனம் எஸ்.பி.ஐ ஜெனரல், ஶ்ரீராம் ஜெனரல், யுனிவர்சல் Sompo மற்றும் ஆதித்யா பிர்லா இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து `ஜாப்லாஸ்' இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டமானது இரண்டு வெவ்வேறு நிபந்தனைகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கிறது. முதலாவது வேலையிழப்பு அல்லது பணிநீக்கம் காரணமாக வருமான இழப்புக்கு பாதுகாப்பு வழங்குவது. இரண்டாவது நிரந்தர இயலாமை அல்லது இறப்பு காரணமாக வேலையிழப்பால் வருமானம் இழந்தால் பாதுகாப்பு வழங்குவது.
இந்த பாலிசியை வைத்திருபவர்களுக்குத் திடீரென வேலையிழப்போ, பணிநீக்கமோ நிகழ்ந்தால், அந்தச் சூழ்நிலையில், 3 மாதங்கள் வரை கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்துவதற்கான தொகையை க்ளெய்ம் மூலம் பெறலாம். ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து காரணமாக மரணம், பகுதி அல்லது நிரந்தர இயலாமை அல்லது ஊனமுற்றல் காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வருமானம் இழந்தால், காப்பீட்டாளர் 2 ஆண்டுகள் வரை வார சம்பள சலுகைகளைப் பெறலாம். இந்த பாலிசிக்கான பிரீமியம் தொகைக்கு 80டி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெற்றுக்கொள்ளலாம். பாலிசிக்கான பிரீமியம் தொகை, பாலிசிதாரர்களின் வயது, அவரின் ஆண்டு வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
நடுத்தர வர்கத்தினருக்கு ஏற்றது!
``திடீர் வேலையிழப்பால் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சம்பளதாரர்கள்தாம். கொரோனாவால் வேலை பறிபோயிருக்கும் பலரும், தங்களின் அவசரகால நிதிச் சேமிப்பை எடுத்து செலவு செய்திருக்கிறார்கள். இன்னும் பலர் வீட்டு அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட கடன் வாங்கி செலவு செய்திருக்கிறார்கள். இதுபோன்ற நிலைமையை மீண்டும் சந்திக்காமல் இருக்க மக்களுக்கு ஜாப்லாஸ் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவைப்படுகிறது. இந்த இன்ஷூரன்ஸை எடுத்து வைத்திருக்கும் பட்சத்தில் மாதம்தோறும் செலுத்தக்கூடிய இ.எம்.ஐ தேவைகளை க்ளெய்ம் தொகையின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும். வருமானத் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் பாலிசிபஜார்.காம் தலைமை நிர்வாக அதிகாரி சர்ப்வீர் சிங்.
இன்ஷூரன்ஸ் தேவை அதிகம்!
இந்தியாவில் `ஜாப்லாஸ்' இன்ஷூரன்ஸ் மீதான் தேவை எப்படி இருக்கிறது என்பது குறித்து, இன்ஷூரன்ஸ் ஆலோசகர் கமலேஸ் பட்டிடம் பேசினோம்.
``அமெரிக்க நாடுகளில் வேலையிழப்போருக்கான ஜாப்லாஸ் இன்ஷூரன்ஸ் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு விஷயம். அங்கு கொரோனா நோய்த்தொற்று பரவலாகக் காணப்பட்டபோது, வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அப்போது பலர் ஜாப்லாஸ் இன்ஷூரன்ஸ் மூலம் க்ளெய்ம் செய்து, அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டனர். ஆனால், இந்தியாவில் அதுமாதிரியான பாலிசிகளை எந்தவொரு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் வழங்கவில்லை.
Also Read: காஸ் சிலிண்டர் விபத்துக்கும் இன்ஷூரன்ஸ் பெறலாம் தெரியுமா... க்ளெய்ம் பெறுவது எப்படி?
கொரோனாவுக்குப் பிறகு ஜாப்லாஸ் இன்ஷூரன்ஸ் தேவையின் மீதான கவனம் இந்தியாவில் அதிகரித்திருப்பதால், இதைக் கருத்திக் கொண்டே பாலிசிபஜார்.காம் நிறுவனம் ஜாப்லாஸ் இன்ஷூரன்ஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கான தேவை அதிகம் இருப்பதால், பாலிசிபஜார்.காம் நிறுவனத்தைப் போல, அனைத்து ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் `ஜாப்லாஸ்' இன்ப்ஷூரன்ஸ் பாலிசியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இதற்கு ஐ.ஆர்.டி.ஏ.ஐ அவசியம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளின் வரிசையில் வேலைக்குச் செல்பவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பாலிசியாக `ஜாப்லாஸ்' இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருப்பது நலம்!
source https://www.vikatan.com/business/insurance/what-is-job-loss-insurance-and-how-it-will-help-if-you-get-laid-off
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக