முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தினை, தமிழகம் முழுக்க அ.தி.மு.கவினர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி அமைதியாக அனுசரித்தனர். ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் ஜெயலலிதாவின் நினைவு நாளில் கூட, உட்கட்சி பூசல் உக்கிரமாய் வெடித்திருக்கிறது. இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்..
ஈரோடு மாவட்டம், பெருந்துறை யூனியன் 4-வது வார்டில் கவுன்சிலராக இருப்பவர் ஜெயக்குமார். அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர், ஈரோடு புறநகர் மாவட்ட முன்னாள் அ.தி.மு.க மாணவரணிச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கும், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏவுமான தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே சமீபகாலமாக கடுமையான பனிப்போர் நடந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக தனியாக களமிறங்கி 4 கவுன்சிலர் சீட்டுகளைப் பிடித்துது, 2021 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் சீட் வாங்க தீவிரமாகச் செயல்பட்டு வருவது போன்ற ஜெயக்குமாரின் செயல்பாடுகள், தோப்புவை உக்கிரமாக்கியிருக்கின்றன. இதன் காரணமாக ஜெயக்குமாரின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் தோப்பு வெங்கடாசலம் நெருக்கடி கொடுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெருந்துறை தொகுதி முழுக்க ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி போஸ்டர்களை நேற்று முந்தினம் ஜெயக்குமார் ஒட்டியிருக்கிறார். விடியற்காலை அந்த போஸ்டர் அனைத்தும் கிழித்தெறியப்பட்டுக் கிடந்திருக்கின்றன. பெருந்துறை டவுன் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்களும் இதில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
‘தூய்மைப் பணியாளர்களை வைத்து அம்மாவினுடைய போஸ்டர்களை கிழிக்கச் சொல்லும் அளவிற்கு எந்த அதிகாரியும் உத்தரவிட்டிருக்க மாட்டார். நிச்சயமாக இது தோப்பு வெங்கடாசலத்தின் வேலையாகத் தான் இருக்கும்’என ஜெயக்குமார் தரப்பு கொதித்துப் போயுள்ளது. உடனே 100-க்கும் மேற்பட்டோருடன் திரளாகச் சென்று பெருந்துறை டி.எஸ்.பியைச் சந்தித்த ஜெயக்குமார் ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரளித்திருக்கிறார்.
மேலும் ஒரு பெரும் கூட்டத்துடன் அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து, ‘தான் ஒருத்தன் தான் பெருந்துறையில அரசியல் செய்யணும்னா, மற்ற கட்சிக்காரங்க எல்லாம் தேவையில்லையா. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தோப்பு வெங்கடாசலம் தொடர்ந்து பழிவாங்கும் நோக்கில் நடந்துக்கிட்டு வர்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும்’ என கோரிக்கை வைக்க இருக்கின்றனராம்.
லோக்கல் கட்சியினரோ, ‘அ.தி.மு.கவில் தனக்கு எதிராக அரசியல் செய்யுறவன், அம்மாவோட ஃபோட்டோவை ஒட்டுனா கூட, அதை கிழிச்சியெறிவேன்னு நடந்துக்கிறது எல்லாம் நாகரிகமான அரசியல் இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அம்மாவின் விசுவாசின்னு வெளிய சொல்லிக்கிட்டு, இப்படி தன்னோட பொலிட்டிக்கல் மைலேஜ்க்காக வாழ்க்கை கொடுத்த அம்மா ஃபோட்டோவையே கிழிச்செறியச் சொன்னார்னா, உண்மையிலே அம்மா ஆன்மா மன்னிக்காது’ என குமுறுகின்றனர்.
இது தொடர்பாக தோப்பு வெங்கடாசலம் ஆதரவாளர்கள் சிலரிடம் பேச முயற்சித்தோம். ஆனால் அவர்கள் நமது அழைப்பை ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-party-issues-in-erode
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக