ரங்கு கச்சேரிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் பயணத்துக்கான முஸ்தீபில் இருந்ததை அங்கே இருந்து வெளிபட்ட சத்தம் உணர்த்தியது. சட்டங்கள் மனிதர்களை அறிவிக்கும் மணியோசை. பெட்டிக்குள் கட்டாயம் வேஷ்டி சட்டைகள் எடுத்து வைத்துக் கொள்கிறானோ இல்லையோ பெட்டியை அத்தர், புனுகு, ஜவ்வாது, வெளிநாட்டுச ஸ்பிரே வகைகள் இந்நேரம் அடைத்துக் கொண்டிருக்கும். வாசனை! ரங்குவை வரையச் சொன்னால், ப்ரீதி இப்படித்தான் வரைவாள்.
ஒரு வட்டம். தலை. இருபுறமும் காதுகள். குச்சி குச்சி உடம்பு. பட்டு டாலடிக்கும் ஜிப்பா. பட்டு வேஷ்டி புடவை ஜாக்கெட் அலைச்சலுக்கு கொஞ்சமும் குறையாத அலைச்சல். ரங்கு கடை கடையாக ஏறி இறங்கி, சட்டையின் சந்தன நிறத்துக்கு ஏற்ற வேஷ்டியை தேர்ந்தெடுக்க அரைநாளை செலவழித்ததை கூடவே இருந்து பார்த்தவள் ப்ரீதி. ஆகையால் ஒரு நிறத்தில் சட்டை வரைந்து வேஷ்டி வரைந்து அவற்றில் இருந்து ஆவி ரூபமாக 'வாசனை' புறப்படுவதாக அவள் படம் வரைவாள்.
தஞ்சாவூருக்கு போகிறேன் என்று நேற்று ராத்திரி அவன் சொன்னான். அனுமார் கோயில் உற்சவம் என்றான். ஆண்டுதோறும் அங்கு கச்சேரி இல்லாமல் அனுமார் கோயில் உற்சவம் நடக்காதே.ஒரு தகவலாக தான் இதை சொல்லி இருந்தானே தவிர, வருகிறாயா என்று கேட்கவில்லைதான். இவளும் நான் வருகிறேன் என்று சொல்லவில்லை. மனம் ஏதோ கல்லாகிக் கொண்டிருக்கும் வஸ்து மாதிரி இருக்கிறது தனக்கு என்று எண்ணிக்கொண்டாள் ப்ரீதி. இரண்டு வருஷத்துக்கு முன்னால் என்றால் வாய்விட்டு கேட்டிருப்பாள். அதிகாரத்துடன் இப்படிச் சொல்லியிருப்பாள்.
சரி,திருச்சி பாஸஞ்சரில் ரெண்டு ஃபர்ஸ்ட் கிளாஸ் எடுத்துடு... என்ன? ஏ.ஸி வேணாம். உள்ளே நுழைந்ததுமே தொண்டை கட்டிக்கிடறது சாமி.
அப்போதெல்லாம் ரங்கு சுலபமானவனாக இருந்தான். மேஜை மேல் இருக்கிற பேப்பர் வெயிட் மாதிரி.எப்போதும் எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொள்ளலாம். 'சில்' உள்ளங்கையில் மயிலிறகு ஐஸ் கட்டியில் தோய்ந்து உருகுவது போல இருக்கும் பேப்பர் வெயிட். அப்போதெல்லாம் வேறு ஊருக்கு கச்சேரிக்கு என்று அவன் புறப்படுகிற போதெல்லாம் முந்தின நாள் இரவு இருவருமே அமர்ந்து கச்சேரியில் என்ன என்ன பாடுவது என்று தீர்மானம் செய்வார்கள். ரங்கு ஒரு பேப்பரையும் பால்பாயிண்ட் பேனாவை எடுத்துக் கொண்டு அமர்வான்.வாய் நிறைய வெற்றிலை அடைத்துக் கொண்டிருக்கும்.
ம்....ழொல்லு...... என்பான் அண்ணாந்து கொண்டு ரங்கு. தலையணையில் முழங்கையை ஊன்றி கொண்டு அவள் சொல்வாள்-
பாம்பணையின்மேல் பள்ளிகொள்ளும் சேலை கட்டிய ரங்கநாதர் நீ....என்பான் ரங்கு.
ம்... எழுதுமேன் என்பாள் அவள், கட்டளையிடும் தோரணையில்.
ஏதாவது ஒரு வர்ணம்...அது உம்ம சாய்ஸ்.... சதஸைக் கவனியும். என்ன பாடினால் நிறக்கும்னு நீரே முடிவெடும். சில கீர்த்தனைகள் அப்புறம்.. எந்தரோ மகானுபாவுலு கட்டாயம். தஞ்சாவூர் பெரிய ஞானவான்கள் இருக்கிற இடம். இது எடுபடும். அப்புறம் விரிவான ஆலாபனை.... என்ன பாடறீர்? போன வருஷம் என்ன பாடினது.... கம்போதின்னா. அப்படின்னா இந்த வருஷம் சங்கராபரணம். நிரவல், கல்பனா ஸ்வரம் என்று ஒன்றிரண்டு கட்டாயம் ராகம் தாளம் பல்லவி...இந்த வாட்டி கல்யாணியை எடுத்துக்குங்கோ... லயத்தில் தனி. அப்புறம் இருக்கவே இருக்கு ஜாவளி, பதங்கள், ஷேத்ரக்ஞரை எடுத்துக்கும். வெற்றிலை போட்டு சிவந்த வாய் மாதிரி நிறக்க இருக்கும். தில்லானா என்ன எடுத்துக்க போறீர்? லால்குடி தான் எமன் மாதிரி நிறைய பண்ணி வச்சிருக்கே அழகழகா....ஒண்ணை எடுத்துக்கிறது. ராகமாலிகா வில் ராமலிங்கசாமி கட்டாயம் இருக்கோணும். மனசோட ஈரத்தைத் தொடற வார்த்தை களாச்சுதே ராமலிங்கசாமி. அப்புறம் திருப்புகழ். கச்சேரின்னா இத்தனையும் இருக்கணும்... எப்படி இருக்கு ரங்கு?
கைத்தட்டல் சத்தம் இப்பவே காதிலே விழறது என்பான் ரங்கு.அவனுக்கு ப்ரீதி ஒரு பெருமை. அவள் சங்கீத ரசனை ஒரு பெருமை.அவளுடைய லௌகீகம் ஒரு பெருமை. அவளது பிரகாசம் ஒரு பெருமை.
சமையலை முடித்துவிட்டு வெளியே வந்தாள் ப்ரீதி. இரண்டு பெரிய பிரீஃப் கேம்கள் ஹாலில் இருந்தன. ரங்கு வெளிப்பட்டான். ஜீன்ஸும் தொளதொள என்று பனியனும் அணிந்திருந்தான் இதுவும் ப்ரீத்தி அவனுக்கு கற்றுக் கொடுத்ததுதான். கடைக்கு போகும்போது மட்டும் வேஷ்டி ஜிப்பா அணிந்து கொண்டால் போதுமே.ரங்குவும் அதை ஏற்றுக் கொண்டான்.
சங்கீதத்தில் என்று மட்டுமல்ல எல்லாவற்றிலும் அவன் அவள் சிஷ்யன். ரங்கு அப்போதெல்லாம் சொல்வான்..
ப்ரீதி குருகுலத்தில் இருக்கிற மாதிரிஇருக்கேனு தெரியுமா? நல்லதுதானே அப்படியே இரு ரங்கு.அது உனக்கு நல்லது. ஆனா நீ ஒரு காரியம் செய்யணுமே.
என்ன சொல்லு
குருகுலம்னா சிஷ்யாளெல்லாம் குருவோட வேஷ்டிகளை தோய்ச்சு போடுவாளாமே. இங்க நான் குருன்னு நீ ஒப்புக்கிட்டேயானா என் புடவைகளையும் நீ தோய்ச்சுப் போடணுமே?
கொடு இப்பவே தோய்ச்சுறேனே என்றபடி அவன் துரத்த அவள் ஐயோடியம்மா என்று ஓட ஒரே ரகளை...
சிரித்துக்கொண்டாள் பிரீதி என்ன சிரிப்பு நான் புறப்படுகிறேன் ப்ரீதி என்றான் ரங்கு.
சுகமா போய்வா... நல்லா பாடி ஜனங்களை ஜெயிச்சுட்டு வா...
அவன் புறப்பட்டான். சிஷ்யர்கள் வேறு எதற்காக இருக்கிறார்கள். சபேசன் பாய்ந்து பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு குருவை பின் தொடர்ந்தான். வாசல் கதவு வரைக்கும் வந்து நின்றாள்.புதிதாக வாங்கியிருக்கும் கார், கில்ட் செயினை போல் ஆபாசமாக பளபளத்துக்கொண்டிருந்தது. டிரைவர் கார் கதவை மிகவும் மென்மையாக சாத்துவதிலேயே தன் மரியாதையை வழிய விட்டார். அவன் கையை அசைத்து விடை பெற்றான்.
திரும்பி உள்ளே வந்த ப்ரீதி இரவு குளியலை வழக்கம்போல் முடித்துக் கொண்டாள். தலையிலுள்ள ஈரத்தைத் துடைத்து எடுத்தவள். ஜன்னல் வழி வந்த காற்றை அதன் ஈரத்தை அனுபவித்தாள். அவளுக்கு பாட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. வரதுவின் கேஸெட்டுதான் அவளுக்கு என்னவோ பாட்டு கேட்க வேண்டும் என்று தோன்றுகின்ற போதெல்லாம் வரது கேஸட்டுதான் அவள் கைக்கு வந்தது. எடுத்துப் போட்டாள்.
மாதுளம்பழத்தை பிட்டுக்கொண்டு கசிவதை போல ஸ்ருதி இழைந்தது. வராது கூட்டுக்குள் இருக்கும் குருவி! தலையை மட்டும் காட்டி வானத்தை அளப்பது போல பாடத் தொடங்கி இருந்தான். அவள் வேறு எதுவும் செய்ய தோன்றாமல் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தாள். ரிக்கார்டு பிளையேரின் சிவப்புக் கோடுகள் அதிர அதிர.. போவதையும் வருவதையும் பார்த்தவாறு சங்கீதத்தில் தன்னை கரைத்துக் கொண்டாள். உருண்டு உருண்டு ஒரு மாம்பழம் போல் வந்து கொண்டிருந்தது வராளி... அதற்கு என்றே அமைந்திருக்கிற ஜோடனைகளோடு. ப்ரீதி தலையை உதறிக் கொண்டாள். இழை இழையான பட்டுத்துணி காற்றில் பறக்கிறது. வைர ஜாரிகைகள் வாரிக் கொட்டி வைத்த நட்சத்திரங்கள் போல பின்னிக் கொண்டிருக்கின்றன.
ஓடையில் ஓடும் நீரின் சலசலப்பு ஓசை... கூழாங்கற்களை புரட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது வரதுவின் வராளி.
ப்ரீதி திடுமென வீட்டுக் கூடத்தில் சம்மணம் போட்டு கொண்டு அமர்ந்திருக்கிறாள். பக்கத்தில் ஊர்மிளா சக மாணவி. சக மாணவன் வராது. ஒல்லிக்கொத்தவரை. அம்மா அப்படித்தான் சொல்வாள். அம்மாவின் சிஷ்யன் தான் வரது.சிவப்பு பச்சை என்று கரை போட்ட வேஷ்டியோடு நெளி நெளியான கிராப்புடன் வருவான் வராது. வெண்ணாற்றங்கரையில் இருந்து ஒரு பழைய டப்பா போன்ற சைக்கிளில் வந்து இறங்குவான். அதன் கேரியரில் சின்ன சோப்பு டப்பா மாதிரியான டிபன் பாக்ஸ் இருக்கும். இங்கேயே சாப்பிட்டுக்கோயேண்டா வரது. உன் நாலு கவளச்சாதத்துக்கு நான் ஒஞ்சிபோயிடப்போறேனா பையா என்பாள் அம்மா.
இருக்கட்டும் மாமி நான் ஜீவிக்கறதே உங்க பிச்சையில் தானேஎன்பான் வராது. வாய் வார்த்தைகள் கல்கண்டு. காலையில் வந்தவன் மாலை இருட்டும் வரைக்கும் வீட்டிலேயே இருப்பான். அம்மா டியூஷனை முடித்துக் கொண்டால் அதற்கப்புறம் அவன் அம்மாவுக்கு பணியாளன்.
நாடார் கடைக்கு போய் நெத்தா ஒரு தேங்காய் வாங்கிட்டு வரியாடா வராது? என்பாள் அம்மா. வரது கடைக்குப் போய்க் கொண்டிருப்பான். கடுகு சீரகம் கருப்பு புள்ளி எது தேவைப்பட்டாலும் அம்மா வரதுவை ஏவல் கொள்வாள். பெண் குழந்தையை இதற்கெல்லாம் ஏவல் செய்யக் கூடாது என்பாள் அம்மா.
ஏன் நான் போனால் என்ன? என்பாள் ப்ரீதி
எவனாவதுது சிறை எடுத்துண்டு போயிட்டா என்ன பண்றதுன்னு மாமி பயப்படுறா என்பான் வரது.
ஊரே கெட்டு கிடக்கிறது அவனுக்கு பின்பாட்டு பாடுவாள் அம்மா.
சீ போடா என்பாள் ப்ரீத்தி
சிறை எடுக்கிறது என்றால் என்ன? என்னத்துக்கு சிறை எடுக்கிறார்கள் என்றெல்லாம் புரியாத வயசு தான்.
அம்மா ஒரு முறை வரதுவும் ப்ரீத்தியும் இருக்கிறபோது சொன்னாள்.
அது ஒரு காலம்டி. உன் அப்பா நரசிம்ம அவதாரம்னா சரி. அப்படி ஒரு கோபம். ஞானசூனியம்னா அப்படி ஒரு சூன்யம். ஒரு நாள் என்னத்தையோ அம்மியிலே போட்டு அரச்சுகிட்டு இருந்தேன். இந்த மனுஷன் எங்கேயோ வெளியே போயிருந்தார். வீட்டில் யாரும் இல்லைங்கிற சுவாதினத்தோடு நான் வாய் திறந்து பாடிக்கிட்டு இருந்தேன். இப்பவும் நல்ல ஞாபகத்துல இருக்கு.தேகே தோடியிலே ஒரு கீர்த்தனை. அன்னைக்கு இருந்த மனோபாவத்தில அது தோணுச்சு. ரூகலு பதிவேலுன்னா சோரகு.....நானா மாலை மாலையா அழுதுண்டே பாடிக்கிட்டு இருக்கேன். அய்யாவாளும் அப்படித்தானே பாடியிருப்பார்.
ஓ,மனசே பதினாயிரம் ரூபாய்கள் இருந்தாலும் வயிறு நிரம்புவதற்கு ஒரு கைப்பிடி நொய் போதுமே. ஆயிரம் புடவைகள் இருந்தாலும் ஒன்றைத்தானே கட்டிக் கொள்ள முடியும். ஒருத்தன் ஊராள்பவனாகவே இருக்கட்டுமே. படுக்க மூன்று முழ நீள இடம் போதுமே. பலகாரங்கள் நூறு கிடைத்தாலும் வாய் நிறையும் வரையில் தானே சாப்பிட முடியும். ஆறு நிறைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் பாத்திரம் அளவுதானே நீரை மொள்ள முடியும்?...
என்ன காரணத்துக்காக நான் அழுதேன்னு எனக்கு இன்னும் தெரியலை. பாட்டு ருசியே தெரியாத ஒருத்தனண்டை மாட்டிக்கிட்டேனே அதை நினைத்து அழுதேனா? ஒரு பூவை ரசிக்க தெரியாத மூடன், புல் மெத்தையை மிதிக்கறமேன்னு மனசு குறுகுறுக்காக ஜடம். இதுங்கிட்டே நாம் வந்து வாழும்படி பண்ணிட்டானேன்னு அழுதேன் போல. இப்ப தோண்றது ஏதோ காத்தடிச்சு ஜன்னல் கதவுகள் படார்னு அடிச்சு நம்மை திகைக்க வைக்குமே, ஏன் அது மாதிரி ஒரு சத்தம்.எதிரே இவள் அப்பன் நிக்கறான். கண்ணிலே ஒவ்வொண்ணிலேயும் ஒரு படி நெருப்பு. அசூயை. அந்த நாய் என்னை பார்த்து சத்தம் போடறது.
என்னடி பாடினாயா?
ஆமாம்
இப்போ தனியா பாடுவே அப்புறம் நாலு பேருக்கு முன்னால் பாடுவே. அப்புறம் ஆடணும்னு ஆசை வரும். தேவடியாள் மாதிரி ஊருக்கு ஊர் கிளம்பிடுவே. டக்கு முக்கு தாளத்தை தூக்கிண்டு, அதுக்குத்தானே ஒத்திகை செஞ்சாறது.
நான் அரச்சதை வழிச்சு.விட்டுண்டு சொன்னேன்.
தேவடியாத்தனம் பண்ணனும்னா பாடியும் ஆடியும்தானா பண்ணனும். இப்பவே தெருவில் சித்தே கொஞ்சம் இறக்கி விட்டுண்டு நின்னா வரிசை வரிசையா வரமாட்டானா என்ன? எல்லா ஆம்பளைகளும் உங்களை மாதிரி இருப்பா, கையாலே ஆகாம?
அந்த ஆள் பேய் மாதிரி குதித்தான். வானத்துக்கும் பூமிக்கும் சாமி வந்தது மாதிரி. அடிக்க வந்தான்.
தொட்டியானா தெரியும் சங்கதி பல் இருக்காதுன்னுட்டேன்.
அதோடு ஒழிஞ்சது சனியன். அப்புறம் சங்கீதம்தான் தொழிலாச்சு. ஜட்ஜ் வீட்டு குட்டிகள்,பெரிய பெரிய வீட்டுப் பெண்கள், பெருமைக்கு சங்கீதம் சொல்லுகிறவர்கள் பிழைப்புக்கு சொல்லிக்கிறவர்கள்னு ரெண்டு ஜாதிக்கும் நான்தான் குரு. ஏதோ எனக்கு தெரிஞ்சதை கொடுத்து, உப்பு, மிளகாய், பருப்பு வாங்கி பிழைப்பை தள்ளறேன் வரது. எனக்கென்னவோ என் பேரை நீ தான் முழக்குவேன்னு தோன்றது. பாப்பம்.பகவானை வேண்டிக்கோ....
அம்மா வரதுவை எதிர்பார்த்தாள். ப்ரீதி வரதுவை நேசித்துக் கொண்டிருந்தாள்.
வராளி ஒரு மைனா குருவியைப் போல தத்தித் தத்தி நடந்து கடந்து ஒரு வழியாக முடிந்தது. என்னவோ ப்ரீதிக்கும் பாட வேண்டும் போல இருந்தது. பாடித்தான் எத்தனை நாள் ஆச்சு? கதவு ஜன்னலை எல்லாம் அடைத்தா ள். வெளிக்கதவை தாழ்ப்பாள் போட்டாள். கூடத்து ஹால் மற்றும் சமையல் உள் விளக்குகள் அனைத்தையும் அணைத்தாள். படுக்கை அறைக்குள் நுழைந்து விடி விளக்கை மட்டும் போட்டாள். என்னவோ நினைத்துக்கொண்டு அதையும் அணைத்தாள்.ஒரு மெழுகை மட்டும் எடுத்து தீ மூட்டினாள்.அம்மா வைத்துக்கொள்ளும் குங்கும பொட்டை போல அது சுடர் விட்டது. தம்புராவை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.
தம்புராவை மீட்டும் வரைக்கும் என்ன பாடுவது என்பது அவள் மனசில் இல்லை. மனசு அளிக்கப்பட்ட சிலேட்டைப் போல சுத்தமாக இருந்தது. ஸ்ருதியின் ரிங்காரத்திலேயே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து கொண்டிருந்தவளுக்கு சட்டென்று அட்சரம் புறப்பட்டது. வராளியின் சுவடு. குழந்தையின் தலை வெளி வந்தது. ரத்தச்சேறு நிணநீர் அருவி. சதசதவென்று புதைச்சேறு. ஒரு ஒற்றை செடி. ஒரு தண்டு. உச்சியில் ஒரு உயிர் அல்லது கொழுந்து....
கன கன ருசிரா. - கனக வசன நின்னு...
வழி புலப்பட்டுவிட்டது. வெட்ட வெளி ஆள் அரவம் அற்ற வெளி. அவள் மட்டும் அவளது பாத சுவடுகளை பார்த்துக்கொண்டு நடக்கிறாள். தொலைதூரம் ஒரு லட்சம் ஒரு கோடி மைல் தூரங்களை அவள் கடக்கிறாள். அவள் ஒரு முகத்தை காண விரும்புகிறாள். ஒரே ஒரு முகம். சிவப்பும் பச்சையும் என கரை வேஷ்டி கட்டுகிற அந்த ஒரு மனிதனை, நடுவில் வகிடு எடுத்துக்கொண்டு தலை வாருகிற வரதுவை.
ஆச்சரியம். வரது அவள் முன்னால் பிலத்தை உடைத்துக்கொண்டு மண்ணுக்குள்ளே இருந்து தோன்றுகிறான்.
அவன் உடம்பிலே தும்பிக்கை முளைத்திருக்கிறது.
வரது எங்கிருந்து வருகிறாய்? எங்கு போனேனோ அங்கிருந்துதான் வருகிறேன். இருவரும் கைகளை பிணைத்துக் கொள்கிறார்கள். கைகள் அப்புறம் உச்சி, நெற்றி, கண், புருவம், கண்முடி, மூக்கு நுனி இதழ்கள் முகவாய் கழுத்து மார்பு வயிறு தொ டைகள் பாதங்கள் என சர்வாங்கமும் இணைகின்றன. பாம்பைப் போல் அவர்கள் முறுக்கிக்கொள்கிறார்கள்.
ப்ரீதி பாடுகிறாள்
உன்னை காணக் காண ருசி எனக்குள் அதிகரிக்கிறதடா தினமும் தினமும் அனுதினமும் உன்னை காண வேண்டும் என்கிற தகிப்பு என்னுள் அனல் விட்டு எரிகிறதடா! ஒளியை ஆடையாக அணிந்தவளே கழுத்தில் அணிவதால் மாலைகளுக்கு மவுசை தருகிறவனே, வாசனைகளால் என்னை கட்டுகிறாயடா...தினம் தினம் உன்னை காண்பதும் எனக்கு ருசியடா...
வியர்வையால் தெப்பலாக நனைந்து விட்டாள் ப்ரீதி.அவள் பிரமை உச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவளுக்கு எதையும் எல்லாவற்றையும் உடைக்க வேண்டும் போல இருந்தது. குடம் உடைத்து கொண்டது போல வெறியும் கிளர்ச்சியும் உடம்பு முழுக்கவும் பற்றிப் பரவி எரிந்தது. இரவு ஆடை அந்த தீயில் புகையும் என்று அவள் பயந்தாள். அதை கழற்றி வீசினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த சத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தட்...தட்....கூடவே அழைப்புமணி வேறு. கண்ணை சிரமப்பட்டு திறந்தாள் ப்ரீதி.தான் அறைக்குள் படுத்து கிடப்பதை உணர்ந்து கொள்ள அவளுக்கு பல நிமிஷங்கள் பிடித்தன. அப்போதுதான், தான் நிர்வாணத்தில் இருப்பதை அறிந்தாள். இரவு ஆடையை அணிந்துகொண்டாள். அழைப்புமணி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஜன்னலை திறந்தாள். சூரியன் வெளியே கனன்று கொண்டு இருந்தது.ஹாலை கடந்து வந்து தெருக்கதவை திறந்தாள்.
ஆச்சர்யம்.... சாதாரண வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை ?
வெளியே வரது நின்று கொண்டிருந்தான்.
என்ன ப்ரீது தூக்கத்தை கலைச்சுட்டேனா, மன்னிச்சுடு.
உள்ளே வா. ஆச்சரியமா இருக்கு வரது. நேற்று ராத்திரி தான் உன் பாட்டைக் கேட்ட படியே தூங்கிட்டேன். விடிஞ்சா நீ வந்து நிக்கறே.
பரவாயில்லை தூக்க மாத்திரைக்கு பதிலா என் பாட்டா?
அவள் சிரித்தாள். வரது கையில் சின்ன பெட்டியுடன் வந்திருந்தான்.ஹாலில் சோபாவில் அமர்ந்தார்கள்.
ரங்கு இன்னும் எழுந்திருக்கலையா?
அது தஞ்சாவூர் போயிருக்கு அனுமார் கோயில் உற்சவம்.
மறந்துட்டேன். ரங்குவுக்கு அங்கே எவ்வளவு ரசிகர் கூட்டம். ப்ரீது போன வருஷம் நானும் பாடினேன். அங்கு ஜெயக்கொடி நாடினான். அன்னிக்கு என்னம்மா பாடினான்? அருமையான பாட்டு. ரொம்ப உசத்தி.
இதுதான் வரது என்று எண்ணிக் கொண்டால் ப்ரீதி
என்னமா ஒரு பாட்டுக்காரனா இருந்துண்டு இன்னொருத்தர் பாட்டை உன்னாலே புகழ முடியறது வரது?
வரது சிரித்தான்
பாட்டுங்கறது என் பிதுரார்ஜித சொத்தா ப்ர்து? அது ஒரு மகாசமுத்திரம். அலைகள் மாதிரி காலத்தில ஒருத்தர் வர்றோம். அரியக்குடி, மகாராஜபுரம், சித்தூர், செம்மங்குடி, டி.என்.ஆர், முசிறி, மதுரை மணி, டைகர் மாலின்னு காலத்துக்கு ஒரு அலை. இப்போ நான், ரங்கு சோமுன்னு இருக்கோம். பையன்கள் நிறைய பேர் வந்திருக்கா. இதிலே யார் உத்தி யார் மட்டம்? சங்கீத தேவதையோட தராசுல நான் எங்கே? எங்கே வித்வத் இருக்கோஅதை பாராட்ட வேண்டியதுதானே? கலையைப் பாராட்டாமே இருக்கிறது ஒரு வகையான அயோக்கியத்தனம் இல்லையா?.
ப்ரீதி சிரித்துக்கொண்டாள். இந்த ஞானம் ஏன் ரங்குவிடம் இல்லை. வரது என்று சொன்னாலே ரங்குவின் முகம் விழுந்து விடுகிறதே. எதனால்? அசூயை, பொறாமை. பொறாமை ஒரு அழகான வார்த்தை இருக்கே தமிழில். அழுக்காறு. ஆறுன்னா வழி. நடை. இடம் அழுக்கான இடம். அழுக்காறு.
ரங்குவுக்கு ஏனோ உன்னை புரிஞ்சுக்க முடியலை வரது.
இருக்கட்டுமே எல்லோரும் எல்லாத்தையும் புரிஞ்சுக்கறோமா? புரிஞ்சுக்கணும்னு என்ன அவசியம்? சரி வா. காபி போடலாம் நான் போட்டு உனக்கு தர்றேன். குளிச்சிட்டு சமத்தா நல்ல சமையல் பண்ணலாம் நானே இன்னைக்கு சாம்பார் கறி பண்றேன். என்ன? வா வா என் சமத்துப் குட்டியோ இல்லையோ...
கூந்தலைக் கொண்டை போட்டுக் கொண்டு சமையல் உள்ளுக்கு ஓடினாள்.
மணக்கிற தொண்டைக்குழிக்குள் கசக்கற நெஞ்சுக்குள் இறங்குகிற போது சுகம் தருகிற, குடித்து அரை மணிக்கப்புறமும் மனசுக்குள் சுகவாசம் ஸ்தாபிக்கிற காபி, வயது போடும் காபி.
ஒரு மிடறு சாப்பிட்டு ப்ரீதி சொன்னாள்...
பிரம்மா உனக்கு ரெண்டு வாரம் தந்திருக்கார் வரது. ஒன்று சங்கீதம் இரண்டு காபி.
அருந்தி முடித்து விட்டு அவள் கேட்டாள்...
வரது ஏன் நீ கல்யாணம் பண்ணிக்கலை?
பண்ணிண்டேன்.
ஐயோ... யாரை?
"வராளியை..."
அவள் குளித்துவிட்டு வந்தாள். வரது சன்னத்தொண்டையில் பாடிக்கொண்டு சமையல் பண்ணிக்கொண்டிருந்தான்.
என்ன பண்ணலாம் ப்ரீது?
"உனக்கு பிடிச்சது "
வெங்காயம் போட்டு கார குழம்பும் கத்தரிக்காய் கறி என்ன?
அருமை ஆமா, என்ன பாடினே?
"மாஜானகி..."
கொஞ்சம் வாயை திறந்து தான் பாடேன். சமையல் கூடத்துக்குள் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள் ப்ரீதி. ஈரத்தலையில் இருந்து நீர் முதுகையும் மார்பையும் நனைத்துக் கொண்டிருந்தது. துவட்டிக்கொண்டே பாட்டை கேட்டாள்.
மா ஜானகி, செட்ட பட்டக மஹாராஜா வைதிவி..
எங்கள் ஜானகியின் கரம் பற்றியதால் தானே ராமா நீ மாமன்னனாக, மகாராஜனாக விளங்குகிறாய். இராவண ஹதம் எங்கனம் சாத்தியப்பட்டது. எங்கள் ஜானகியின் மணாளன் என்பதால் அல்லவா உன் பலம்?...
சாப்பிட்டார்கள்
சந்தோஷமா இருக்கியா ப்ரீது.?
இருக்க முடியுமா அப்படி?
அவன் சிரமப்பட்டு பேச்சை மாற்றினான்.
பேசேன் உனக்கேன் சங்கடம்?
என்னவோ முடியலை ஒரு ஆம்பிளையையும் ஒரு பொம்பிளையையும் இணைச்சு வைக்கிறது எது? எந்த கயிறு? எந்த பந்தம்? அது எப்போ எதனாலே அ றுந்து போறது? ஏன் அறுந்து போகணும்? ஒன்றும் தெரியலை. சம்சாரம் பண்றது ஆச்சரியமா இருக்கு. பண்ணாமே உன்னை மாதிரி தனியா குஷியா இருக்கிறது தேவைலைனு படறது.
அவன் அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தான்
என்ன திடீர்னு வருகை வரது
இன்னிக்கு பத்மா என்னமோ புதுசா அரங்கேற்றம் பண்றாராளாம். அவசியம் வரணும் அண்ணான்னு போன் மேல போன் பண்ணா. எனக்குத்தான் பத்மா மேலே பிரியம். உனக்கு தெரியுமே. அதனாலே வந்துட்டேன்.
உன்னையும் பார்க்கணும்னு தோணுச்சு.
என்னையும் பார்க்கணும்னா?
அவன் பேசாமல் இருந்துவிட்டு சொன்னான்.
நான் தப்பா சொல்லிட்டேன். உன்னைப் பார்க்கணும்னு தோணுச்சு.
"எனக்கும்தான்"
வரது மாடிக்கு தூங்கப் போனான். கீழே தன் அறைக்குள் வந்து படுத்துக்கொண்டாள் ப்ரீதி.
இந்த வரதுவை ஏன் ரங்கு பகைக்கிறான்?.தொடக்கத்தில் அவன்கூட வராதுவை சிலாகிக்க்றவனாகத்தானே இருந்தான். திடும் என்று என்ன கோபம்? ஒரு நாள் பேச்சுவாக்கில் அவள் சொன்னாள்...
இந்த தலைமுறை பாட்டுக்காரர்களிலே வரது தான் உசத்தி.பரங்கிமலை விராலி மலை கல்வராயன் மலைக்கு மத்தியிலே அவன் இமயம். வராளி ஒன்று போதும் அவன் மேதமையை காட்ட.. இல்லை ரங்கு.?
அது எப்படி சொல்ல முடியும்? நீ சொல்றது உண்மையானா, அவன் கச்சேரிக்கு சபாவில் ஏன் சான்ஸ் தர மறுக்கிறா?
சபாக்காரன் ஒன்னும் சங்கப்பலகை இல்லையே. மகா வித்வான்களை எல்லாம் கேவலப்படுத்துகிறவன் இல்லையா, சபாகாரன். ராஜமாணிக்கத்தோட, கோபாலகிருஷ்ணனோட வில்லும் மற்றவாளோட வில்லும் ஒண்ணா? அதுகள் ஞானவில்லாக்கும். இது சர்க்கஸ். திறமைசாலி வேற கலைஞன் வேறே ரங்கு, புரிஞ்சுக்கோ...
என் பாட்டைப் பற்றி என்ன சொல்றே?
உன் பாட்டு ஜூஸ். டப்பாவிலே எசன்ஸ் போட்டு வாசனையா தர்றாளே ஜூஸ். அது.
வரதுப் பாட்டு...?
அது கெட்டி மாம்பழம். ரொம்ப இயற்கையா பழுத்தது. கொம்பிலே கனிஞ்சது. அணில் கடி படாதது. வெளியே இருந்து உள்ளே போகிற பயணம் அது. அவன் பாட்டு அழுக்கை எல்லாம் அடிச்சு துவைக்கிற பாட்டு.
நான் போலிங்கறே?
" இல்லை. உன் சங்கீதத்துல சில்லறை சத்தம் கேட்குது. வெள்ளிக்காசு சத்தம். அவன் பாட்டுல அது இல்லை. ஆத்மார்த்தமா இருக்கு. கோயில் நந்தியாவட்டை மாதிரி அவன் மணக்கிறான்.
அவன் வாசனைகூட உனக்கு தெரியறதே?
விழித்துக் கொண்டாள் ப்ரீதி. ரத்தம். ஊசியால் குத்துகிற வலி. தொடர்ந்து குத்திக்கொண்டே இருந்தான் அவன். இதயத்தின் நடுப்பகுதியில்.
ரயில் அழுக்கைக் கழுவி சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்தான் ரங்கு.
கச்சேரி பிரமாதமா வாச்சுடுச்சு. ஒரே அப்ளாஸ். வாரிண்டேன். திருச்சி மதுரை ராமநாதபுரம்னு சபாகாரன், கல்யாண கச்சேரின்னு நிறைய பேர் அட்வான்ஸ் கொடுக்க வந்துவிட்டான்.
அப்படியா என்றான் ப்ரீதி
அடையாறுல ஒரு பிளாட் வாங்கலாம்னு இருக்கேன்.
நமக்குத்தான் இந்த வீடு இருக்கே. அப்புறம் என்னத்துக்கு பிளாட்?.
வாடகைக்கு விடுவோம். சொத்தும் சேர்க்கத்தானே வேண்டியிருக்கு.
வயது வந்திருந்தான்.
எப்போ?
நேத்து காலையிலே. ராத்திரிதான் போனான். பத்மா நாட்டியமாம்.
எப்படி இருக்கான் உருப்படாதவன்.
"இருக்கான் சந்தோஷமா இருக்கான்"
நல்லா ஜாலியா பொழுது போயிருக்குமே?
ஆமா... ரொம்ப ஜாலியா.வரது என்னைப் பாடச் சொல்லிக் கேட்டான். நானும் ரொம்ப நாளுக்கு பிறகு பாடினேன். மனம் திறந்து எல்லாத்தையும் கொட்டிட்டேன்.
அவன் எழுந்து கை கழுவிக் கொண்டு மாடிக்கு போனான்.
அவள் தனிமையில் விடப்பட்டாள். தனிமை பயம் தந்தது. அவளுக்கு பாட ஆசையாக இருந்தது.வரது இருந்தால் கேட்பான். ரசிப்பான். சுகிப்பான். ஆனால் வரது போய்விட்டானே! சுகிப்பவன் இல்லாமல் என்ன சங்கீதம்? ப்ரீத்திக்கு கோபம் கனன்றது.
- பிரபஞ்சன்
source https://www.vikatan.com/arts/literature/ananda-vikatan-classic-short-story-by-prapanchan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக