Ad

செவ்வாய், 15 டிசம்பர், 2020

போன் ஆடியோவால் கைதான ஹேமந்த் - நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் திருமணமாகி சில மாதங்களே ஆவதால், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேமந்த்திடமும் ஆர்.டி.ஓ விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.

நடிகை சித்ரா

இந்தநிலையில், சித்ராவின் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே நடந்த பிரச்னை குறித்த தகவல்கள், சித்ராவும் அவரின் மாமனார் ரவிசந்திரனும் பேசிய போன் ஆடியோ ஆகியவை போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. அதன்அடிப்படையில் ஹேமந்த்திடம் மீண்டும் விசாரணை நடத்த நசரத்பேட்டை போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர். டிசம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை ஹேமந்த்திடமிருந்து சித்ராவின் தற்கொலை தொடர்பான தகவல்களைப் பெற உதவி கமிஷனர் சுதர்சனனும் இன்ஸ்பெக்டர் விஜயராகவனும் கிடுக்குப்பிடி கேள்விகளால் ஹேமந்த்தை துளைத்திருக்கின்றனர். அதன்பிறகே ஹேமந்த், தகவல்களை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கியிருக்கிறார்.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீஸார் கூறுகையில், ``சித்ராவும் ஹேமந்த்தும் தங்கியிருந்தது ஷூட் அறை. அந்த அறையில் ஏசி வசதியைக் கொண்டதாக இருந்தாலும் மின்விசிறியும் இருந்திருக்கிறது. சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்திருக்கிறது. காதலித்து கரம் பிடித்த ஹேமந்த்தைக் கைவிட சித்ராவுக்கு மனம் இல்லை. அதனால், பல்வேறு சிரமங்களை அவர் சந்தித்திருக்கிறார். அதையெல்லாம் அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. நெருங்கிய நண்பர்களிடம்கூட பகிரவில்லை.

Also Read: நடிகை சித்ரா தற்கொலை செய்துகொள்ளும் முன் நடந்தது என்ன?- கைதான ஹேமந்த் அளித்த அதிர்ச்சித் தகவல்

நடிகை சித்ரா

இந்தச் சமயத்தில் டிசம்பர் 8-ம் தேதி காலை சந்தோஷமாக அவர் ஷூட்டிங்குக்குச் சென்று நடித்திருக்கிறார். வழக்கமாக சித்ரா ஷூட்டிங் சென்றால், அவரின் அம்மா விஜயாதான் உடன் செல்வார். திருமணத்துக்குப் பிறகு சித்ராவுடன் ஹேமந்த் செல்லத் தொடங்கியிருக்கிறார். அதனால், சித்ராவின் அம்மா விஜயா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்வதில்லை. இவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கில் காலை முதல் இரவு வரை நடித்த சித்ரா, அங்கிருந்து தன்னுடைய ஆடி காரில் ஹேமந்த்துடன் விடுதிக்குத் திரும்பியிருக்கிறார். காரில் வரும்போதுதான் சித்ராவுக்கும் ஹேமந்த்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அந்தத் தகராறு விடுதி அறைக்குச் சென்றபிறகும் தொடர்ந்திருக்கிறது. அப்போது சித்ராவைப் பார்த்து ஹேமந்த் கூறிய வார்த்தைகள்தான், அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியிருக்கிறது. அறையை விட்டு ஹேமந்த் வெளியில் வந்த சமயத்தில் உள்பக்கமாகப் பூட்டிக்கொண்ட சித்ரா, தன்னுடைய பட்டுப்புடவையில் மின்விசிறியில் தற்கொலை செய்துக் கொண்டார். அறைக் கதவை சித்ரா திறக்காததால், சந்தேகமடைந்த ஹேமந்த் விடுதியின் ஊழியரிடம் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்திருக்கின்றனர். அப்போது, சித்ரா தூக்கில் தொங்கியதைப் பார்த்ததும் ஹேமந்த், விடுதி ஊழியர் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

நடிகை சித்ரா

உடனடியாக சித்ராவை ஹேமந்த்தும் விடுதி ஊழியரும் சேர்ந்து கீழே இறக்கி முதலுதவி அளித்திருக்கின்றனர். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சித்ராவைப் பரிசோதித்த பிறகுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நசரத்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்குச் சென்று சித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தோம். சித்ராவின் மரணம் தொடர்பாக விடுதி ஊழியர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரித்தபோது அவர்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர்.

அதே தகவலைத்தான் ஹேமந்த்தும் எங்களின் விசாரணையின்போது தெரிவித்தார். இதற்கிடையில் சித்ராவின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் தெரிவித்தனர். அதற்கு பிரேதப் பரிசோதனையில் விடை கிடைத்தது. அதனால், சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற கோணத்தில் விசாரித்தோம். ஆரம்பத்திலிருந்தே ஹேமந்த் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அவர் சித்ராவுடன் நடந்த தகராறைச் சொல்லாமல் மறைத்து வந்தார்.

நடிகை சித்ரா

Also Read: சித்ரா மரணம்: `செல்போன் பதிவுகள்; சிசிடிவி காட்சி! -தாய், சக நடிகர்களிடம் விசாரிக்க போலீஸ் முடிவு

இதற்கிடையில் சித்ரா, ஹேமந்த் ஆகியோரின் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரித்தோம். சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு, அந்த இரண்டு செல்போன்களிலிருந்து சில தகவல்கள் கிடைத்தன. அதில் சித்ராவும் ஹேமந்த்தின் அப்பாவான ரவிச்சந்திரனும் பேசிய ஆடியோ எங்களுக்கு கிடைத்தது. அதில்தான் சித்ரா, ஹேமந்த் தொடர்பான முக்கிய தகவல்களைக் கூறியிருந்தார். அந்த ஆடியோ அடிப்படையில் விசாரித்தபிறகுதான் ஹேமந்த், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

அறைக்கு வந்தபிறகு சித்ராவைப் பார்த்து ஹேமந்த், கூறிய வார்த்தைகள் அவரைக் கடும் மனவேதனையில் தள்ளியிருக்கிறது. அதன்பிறகுதான் சித்ரா, தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், எந்தவிதக் கடிதமும், வீடியோவையும் பதிவு செய்யவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் சித்ரா இருந்திருந்தால் நிச்சயம் அதைப் பதிவு செய்திருப்பார்" என்றனர்.

ஹேமந்த்

சித்ராவின் மரணத்தில் ஹேமந்த், கைது செய்துள்ள நிலையில் ஆர்.டி.ஓ விசாரணைக்காக வந்திருந்த ஹேமந்த்தின் அப்பா ரவிசந்திரன், ``யாரையோ திருப்திப்படுத்த சித்ரா வழக்கில் என் மகனை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். வரதட்சணையாக சித்ராவின் குடும்பத்தினரிடம் எதுவும் கேட்கவில்லை’’ என்று கூறினார்.

ஹேமந்த்தின் அப்பாவும் அம்மாவும், சித்ராவைத் தங்களின் மகளாகவே பார்த்ததாக போலீஸ் விசாரணையிலும் ஆர்.டி.ஓ விசாரணையிலும் கூறியிருக்கின்றனர்.

சித்ராவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னமும் முழுமையாக போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. அது வந்தபிறகுதான் சித்ரா மரண விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்கிறார்கள் போலீஸார்.



source https://www.vikatan.com/news/crime/actress-chitra-death-case-police-arrested-husband-over-phone-audio-record

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக