”வெங்காய விவசாயத்தை நம்பி கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளோம்” திருகல் நோய் பாதிப்பால் கண்கலங்கும் விவசாயிகள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் முக்குடி, செங்குளம், எம்.பறையங்குளம், எருக்களை வெள்ளூர், காஞ்சிரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்ட்டிருந்த நிலையில் இதில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் புரவிப் புயலில் ஏற்பட்ட மழையால் திருகல் நோய் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளதாகவும் அதை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலாளர் பழனிவேல் கூறுகையில், "திருப்புவனம் வட்டத்தில் குறிப்பா முக்குடி, செங்குளம் உள்ளிட்ட 8 கிராமங்களில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நன்கு பயிர் விளைச்சல் கொடுத்த சமயத்தில் புரவிப் புயலில் ஏற்பட்ட கடுமையான மழையால் வெங்காயங்கள் மீது திருகல் நோய் ஏற்பட்டு மடிந்துவிட்டன.
இதனால் பல்வேறு விவசாயிகள் பாதித்துள்ளனர். இப்பகுதி விவசாயிகள் வெங்காய விதைகளை மதுரை சென்று தேர்வு செய்து வாங்கி வருகின்றனர். விற்பனைக்கு மதுரை மொத்த மார்கெட்டை தான் அதிகளவு நம்பி இருப்பார்கள். இப்படி போக்குவரத்து செலவுகளைக்கூட கணக்கில் கொள்ளாமல் விவசாயம் செய்கின்றனர். ஆனால் முதலுக்கே மோசம் ஏற்படும் படி மழையால் பாதித்துவிட்டது. எனவே அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் நிவாரணம் வழங்கவேண்டும்” என்றார்.
இதுகுறித்துப் பேசிய விவசாயி குருநாதன், "விதை வெங்காயம் 10 கிலோ 900 ரூபாய்க்கு வாங்கி தான் பயிர் செய்கிறோம். ஏக்கருக்கு ரூ.45,000 முதல் 65,000 வரை செலவு ஏற்படுகிறது. வெங்காயம் நல்ல விளைச்சல் இருந்தால் சீசனை பொருத்து நல்ல விலை கிடைக்கும். தற்போது திருகல் நோயால் எந்த புரோஜனும் இல்லாமல் போய்விட்டது. திருகல் நோய் காரணத்தால் வெங்காய செடிகள் சுருண்டு விடுகின்றன. இதனால் செடியின் தாள்கள் கருகி மடிந்துவிடுகின்றன. வெங்காய விவசாயத்தை நம்பி கடன் வாங்கிச் சாகுபடி செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய பயிரிட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார்.
source https://www.vikatan.com/news/agriculture/sivaganga-farmers-suffers-from-loss-of-onion-crops-because-of-disease
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக