Ad

வியாழன், 24 டிசம்பர், 2020

இனி அன்பானவர்களுக்கு பரிசளிக்க `பசுமை பரிசு பெட்டகம்’... தோட்டக்கலை துறையின் அசத்தல் முயற்சி!

புத்தாடைகளும் இனிப்புகளும் மனதுக்குப் பிடித்த பரிசுப் பொருள்களும்தான் விழாக்காலங்களை வண்ணமயமாக்குகின்றன. பிரியமானவர்களுடன் நம் அன்பை பரிமாறிக்கொள்வதற்கு என்ன பரிசுப் பொருள் வாங்கலாம் என்ற கேள்வி எல்லோருடைய மனதுக்குள்ளும் எழும். அப்படியானவர்களுக்கு ‘பசுமை பரிசு பெட்டகம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை.

பசுமை பரிசு பெட்டகம்

அதென்ன பசுமை பரிசு பெட்டகம் என்கிறீர்களா!

‘பூச்செடி அல்லது அலங்கார செடி அல்லது துளசி உள்ளிட்ட மூலிகை செடி, 'டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட்' மற்றும் காய்கறி விதைகள் அடங்கிய விதை பாக்கெட் ஆகியவை அடங்கியதுதான் பசுமை பரிசு பெட்டகம். இந்த பெட்டகத்தின் விலை 100 ரூபாய். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, அடையாறு கஸ்துாரிபாய் நகர் நல சங்க அலுவலகம், அண்ணாநகர் தோட்டக்கலை மூலிகை பண்ணை, மாதவரம் தோட்டக்கலை பண்ணை மற்றும் செயல் விளக்க பூங்கா, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மாலை, 5 மணி வரை இந்த பசுமை பரிசு பெட்டகம் விற்பனை செய்யப்பட்டவிருக்கிறது. அதிகமான பரிசு பெட்டகங்களை மொத்தமாக வாங்குபவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று தோட்டக்கலை துறை இயக்குனர் சுப்பையன் அறிவித்துள்ளார்.

பசுமை பரிசு பெட்டகம்

இதுகுறித்து தோட்டக் கலைத்துறையின் உதவி இயக்குனரான ஆர்த்தியிடம் பேசியபோது, “விழாக்காலங்களில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பரிசுகள் வழங்கவேண்டும் என்பது எல்லோருக்குள்ளும் தோன்றும் பொதுவான உணர்வு. அப்படி வழங்கும் பரிசுகளின் பட்டியலில் செடிகளும் விதைகளும் இருந்தால் பசுமை தழைத்தோங்கும் என்று எங்கள் துறை சார்பாக எடுக்கப்பட்ட முடிவின் வெளிப்பாடுதான் இந்த பசுமை பரிசு பெட்டகம். விதைகள், செடிகள் மட்டுமல்லாமல் எங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகளும் வழங்குவதால் அது இன்னும் ஸ்பெஷலான வித்தியாசமான பரிசாக மாறுகிறது. எனவே இந்தத் திட்டம் மிகுந்த வரவேற்பு பெறும் என நாங்கள் நம்புகிறோம். இயற்கைமீது அக்கறை கொண்ட இளைஞர்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு தாராளமாக இந்த பசுமை பரிசுப் பெட்டகத்தைப் பரிசளிக்கலாம்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tn-horticulture-dept-launched-green-celebration-packs-ahead-of-festival-season

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக