கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்தக் கோரிய வழக்கில், 'இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில், நடைபெறும் குடமுழுக்கு விழாக்களில் தமிழ் மொழியிலும் கண்டிப்பாக நடத்த வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டது தமிழ் வழி ஆன்மிக பக்தர்ளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இக்கோரிக்கையை இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவர் சித்தர் மூங்கிலடியார், வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளராக உள்ள கருவூர் சித்தர் தமிழ் வழிபவழிபாட்டுப் பேரவையினர் உட்பட பல்வேறு தமிழ அமைப்புகள் வலியுறுத்தி வந்தது.
கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``எங்கள் பகுதியில் கொங்கு மண்டலத்தின் முதல் கோயிலான கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. 900 ஆண்டுகள் பழமையான இக் கோயிலில் எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வழிபட்டு வருகிறோம். இக்கோயிலின் குடமுழுக்கு விழாவில் தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம் திருவாசகம் ஓதப்பட வேண்டும் என எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயில் உதவி ஆணையரிடம் வலியுறுத்தினோம். எங்கள் தரப்பில் கடந்த நவம்பர் 23-ல் உதவி ஆணையாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தில் மனு அளித்தோம். ஆனால், அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
பாரம்பரியமிக்க எங்கள் கோயிலில் தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம் வாசிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கோயில் நிர்வாகம் தரப்பில், "குடமுழுக்கு விழாவுக்காக 25 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் வழியிலும் நடத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாக்களில் கண்டிப்பாக தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடத்துவது குறித்து எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தமிழ் மொழியிலும் கண்டிப்பாக இனிவரும் காலங்கள் குடமுழுக்கு நடத்த வேண்டும்.
இனி இதுபோன்ற வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கலானால், கோயில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
source https://www.vikatan.com/government-and-politics/judiciary/high-court-madurai-bench-order-on-temple-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக