தேசிய அளவிலான இசைப் போட்டியில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வசிக்கும் பாரம்பர்ய இசைக் குடும்பத்தைச் சேர்ந்த மணிசங்கர் - ஜெயந்தி தம்பதியின் மகள் அமிர்தவர்ஷினி, தனித்தவில் வாசித்து தேசிய அளவில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தமிழகத்தின் தொன்மையான இசைகளில் நாதஸ்வரம் மிகவும் மதிப்புக்குரியதாக, கோயில்களிலும் சமுதாயத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளிலும் முக்கிய இசையாக இசைக்கப்படுகிறது. இந்த இசைக் கலையில் நாதஸ்வரம் வாசிப்பதற்கு நிறைய பெண்கள் இருக்கின்றனர். ஆனால், அதோடு இணைந்த மேளத்தை வாசிக்க பெண்கள் முன்வரவில்லை. பெண்களுக்கு எட்டாத இசைக் கருவி மேளம் என ஒதுங்கிவிடுகின்றனர்.
இந்த எண்ணத்தை மாற்றி, மேளத்திலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்த மணிசங்கர் - ஜெயந்தி தம்பதி தங்கள் மகள் அமிர்தவர்ஷினிக்கு 4 வயது முதலே மேளம் இசைக்கக் கற்றுத் தந்தனர். தகுந்த ஆசான்களை அமைத்து வழிநடத்தினர். அதை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்த அமிர்தவர்ஷினி, சுமார் 200 மேடைகளுக்கு மேல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேடைக் கச்சேரிகளில் பங்கேற்று புகழ் பெற்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வி துறையினரால் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான இசைப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே மனித வள மேம்பாட்டுத் துறையினரால் நடத்தப்படும் கலா உத்சவ் கலைப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ்நாட்டு மாணவியான அமிர்தவர்ஷினி மணிசங்கர், தவில் இசைக் கருவியை வாசித்து முதல் பரிசைப் பெற்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இதைப் பாராட்டி நேற்றைய முன்தினம் (21.12.2020) தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் அமிர்தவர்ஷினிக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவித்தார். அதைத் தொடர்ந்து கல்வித் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ஆகியோரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
source https://www.vikatan.com/events/music/thavil-player-amirthavarshini-manishankar-won-first-prize-in-national-level-competition
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக