Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

தமிழ்நாடு நாள், எழுவர் விடுதலை, 7.5% இட ஒதுக்கீடு; அ.தி.மு.க-வில் இணையக் காரணம் - கல்யாண சுந்தரம்

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, அணி மாற்றம், தலைவர்களின் குட்டிக்கரணங்கள், கட்சித் தாவல்கள் என குபீர் ஆச்சர்யங்கள் வரிசைகட்டும். அந்தவகையில், ஏற்கெனவே `நாம் தமிழர் கட்சி'யின் இளைஞரணிப் பொறுப்பில் இருந்துவந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம், அண்மையில் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். அவரிடம் பேசினேன்...

`சீமானிசத்தை ஏற்க முடியாது' என்று நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நீங்கள், அ.தி.மு.க-வில் இணைந்திருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?''

``அ.தி.மு.க அரசின் சமீபகால செயல்திட்டங்கள்தாம் என்னை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக `தமிழ்நாடு நாள்' அறிவிக்கப்பட வேண்டும்; அதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது தமிழ் தேசியவாதிகளின் 60 ஆண்டுக்கால கோரிக்கை. இதுவரை எத்தனையோ பேர் முதல்வர் பதவியில் இருந்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமிதான் இந்தக் கோரிக்கையைச் சத்தமே இல்லாமல் நிறைவேற்றித் தந்திருக்கிறார். ஏழு பேர் விடுதலை விவகாரத்திலும் `முருகன், பேரறிவாளன், சாந்தன்' மூவருக்கும் மரண தண்டனை என்ற ஒரு நிலை வந்தபோது, அந்த தண்டனையை நிறைவேற்ற முடியாத வகையில் தீர்மானம் இயற்றியது அ.தி.மு.க-தான். இதற்காக நாம் தமிழர் கட்சியில் இருந்தபோதே நாங்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறோம். இப்போதும் இவர்களுக்குத் தொடர்ச்சியாக 'பரோல்' வழங்கப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல், இயற்கைப் பராமரிப்புப் பணிகளும் தமிழ்த் தேசியவாதிகளின் நீண்டகால கோரிக்கைதான். அ.தி.மு.க ஆட்சியில்தான் 5,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. `நீட்’ தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் இட ஒதுக்கீட்டை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இந்தியாவிலேயே முன்னோடித் திட்டத்தை தந்திருக்கின்றனர். ஆக, எந்தெந்தக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியவாதிகள் போராடிக்கொண்டிருக்கிறோமோ, அதையெல்லாம் வாய்ப்பிருக்கும்போதே நிறைவேற்றித் தருகிற ஓர் அரசாக அ.தி.மு.க அரசு இருக்கிறபோது, அதை வலிமைப்படுத்துகிற இடத்தில் நாம் ஏன் இருக்கக் கூடாது என்றுதான் நான் பார்க்கிறேன். ஆக, 'திராவிடம்' என்ற பெயரைத் தாங்கி நிற்கிற கட்சியாக அ.தி.மு.க இருந்துவந்தாலும்கூட, தமிழ்த் தேசியவாதிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருகிற அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்.''

Also Read: சென்னை: `வெளிநாட்டு வேலை; கைநிறைய சம்பளம்' - ஆசைவார்த்தையால் பணத்தை இழந்த பட்டதாரி

``நாம் தமிழர் கட்சியில் நீங்கள் ஊழல் செய்திருப்பதாகவும், தற்போதும்கூட பணப் பேரத்தின் அடிப்படையிலேயே ஆளுங்கட்சியில் இணைந்திருப்பதாகவும் சொல்கிறார்களே..?''

``கல்யாண சுந்தரம், பணரீதியாக ஊழல் செய்தார் என்று சீமான் தன்னுடைய பேட்டியில் எங்கேனும் தெரிவித்திருக்கிறாரா... எனவே, இது அப்பட்டமான பொய்.

சீமான்

என் மீது இப்படியான குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் எல்லோருமே முகம் தெரியாத ஃபேக் ஐடிகளாகத்தான் இருக்கிறார்கள். குற்றச்சாட்டு சொல்பவர்கள் அதை நிரூபித்தால், `நடுத்தெருவில் நின்று தீக்குளிக்க நான் தயாராக இருக்கிறேன்' என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். எனவே, நாம் தமிழர் கட்சி இது குறித்து இன்றைக்கு என்னை விசாரணைக்கு அழைத்தாலும் நான் செல்வதற்குத் தயாராகவே இருக்கிறேன். பிரசாந்த் கிஷோரிடம் காசு வாங்கிவிட்டார், கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசிவிட்டார், பா.ஜ.க-வுக்கு போகப்போகிறார்... என்றெல்லாம்கூட என்னைப் பற்றிச் செய்திகள் வெளியாகின. இதையெல்லாம் எழுதியவர்கள்தான் இப்போது சிந்தித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்!''

Also Read: மதுரையில் கொடூரம் : `13 வயது சிறுமி; 3 வருடங்கள்..! - பாலியல் தொழிலில் தள்ளிய உறவினர்

``மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சீமான் போட்டியிட்டால் அது அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு மாதத்துக்கு முன்பே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பேட்டியளித்திருக்கிறீர்களே?''

``நாம் தமிழர் கட்சியிலிருந்து நான் வெளியே வந்த பிறகு, தனியாக இயக்கம் தொடங்குவதற்கான வேலைகளைத்தான் நான் செய்துகொண்டிருந்தேன். இதற்காகப் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்துக்கொண்டிருந்தேன்.

ஸ்டாலின்

அந்தப் பேட்டியின்போது, சீமான் அறிவிப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, `ஸ்டாலினுக்கு எதிராக சீமான் போட்டியிட மாட்டார். அப்படி அவர் போட்டியிட்டாலும் அது அவருக்குப் பயன் கொடுக்கப்போவதில்லை. தப்பாக அப்படிச் சொல்லியிருக்கிறார்' என்று சொல்லியிருந்தேன். மற்றபடி அந்தப் பேட்டி கொடுத்தபோதுகூட, அ.தி.மு.க-வில் இணையும் திட்டம் என்னிடம் இல்லை. அந்தப் பேட்டியை ஒளிபரப்பியதே சன் டி.வி-தான். ஆக, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக நான் பேசியிருந்தால், அதை அவர்கள் ஒளிபரப்பியிருக்க மாட்டார்களே... அ.தி.மு.க-வில் இணைவது குறித்து பரிசீலனையில் மட்டுமே வைத்திருந்தேன். கடந்த 15 நாள்களுக்குள்ளாகத்தான் உறுதியான ஒரு முடிவு எடுக்கப்பட்டது!''

இந்தப் பேட்டியின் தொடர்ச்சியை இன்று (டிசம்பர் 26-ம் தேதி) வெளியான ஜூனியர் விகடன் இதழில் வாசிக்கலாம்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/kalyanasundaram-speaks-about-joining-admk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக