Ad

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

விழுப்புரம்: கந்துவட்டிக் கடனை அடைக்க ஆன்லைன் சூதாட்டம்? - ஒரே குடும்பத்தில் 5 பேரை பலிகொண்ட கொடூரம்

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன் (40). தச்சுப் பட்டறைவைத்து நடத்திவரும் இவருக்கு விமலேஸ்வரி (38) என்ற மனைவியும், ராஜ்யஸ்ரீ, விஜயஸ்ரீ, சிவபாலன் என மூன்று குழந்தைகளும் இருந்தனர். சென்னையில் தச்சுத் தொழில் பார்த்துவந்த மோகன், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக வளவனூரிலேயே தச்சுத் தொழிலைச் செய்ய முடிவெடுத்து அதற்காகக் கடன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

தற்கொலை

இந்தச் சூழலில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் முடங்கியது. இந்தச் சூழலில் கடன் கொடுத்தவர்கள், அசலையும் வட்டியையும் கேட்டு நெருக்கடி கொடுக்க, மோகன் கடனைக் கொடுக்க முடியாமல் தவித்திருக்கிறார். ஏற்கெனவே சூதாட்டப் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த மோகன், இந்தக் காலகட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட்டத்திலும் பணத்தை இழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடன் தொகை எகிறியிருக்கிறது.

வழக்கமாக காலை 9 மணிக்கு முன்பதாகவே தச்சுப் பட்டறையைத் திறக்கும் மோகன், இன்று நேரம் தாண்டியும் கடையைத் திறக்காத காரணத்தால், மோகனின் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, கதவைத் தட்டிப் பார்த்திருக்கிறார். அப்படியும் யாரும் கதவைத் திறக்காததால் சந்தேகத்தின்பேரில் அக்கம் பக்கத்தினர் உதவியை நாடினார். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ராஜ்யஸ்ரீ, விஜயஸ்ரீ, சிவபாலன்

மூன்று குழந்தைகளும் ஒரே தூக்குக் கயிற்றிலும், மோகன் மற்றும் அவரது மனைவி தனித்தனியாகவும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உடனடியாக போலீஸாருக்கும் இது தொடர்பாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், ஐந்து பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரனை மேற்கொண்டுவருகிறார்கள்.

மோகன் வாங்கிய கடனை அடைக்க ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டாரா அல்லது ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடக் கடன் பெற்றாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். கடன் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு குடும்பமே பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

ஆன்லைன் ரம்மி

கடந்த வருடம் டிசம்பர் மாதம், 13-ம் தேதி, விழுப்புரம் மாவட்டத்தில் நகைத் தொழிலாளி அருண் என்பவர் ஒன் நம்பர் லாட்டரி பழக்கம் காரணமாக கடன் ஏற்பட்டு கந்துவட்டிக் கொடுமை காரணமாக, தனது மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சையனடு அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியிருப்பது விழுப்புரம் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது!

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ உடனடியாகக் கீழ்க்காணும் அவசர உதவி மையம் எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 104



source https://www.vikatan.com/news/crime/couple-killed-their-own-kids-and-suicide-after-debt-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக