Ad

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வேலூர்: `மக்களை எம்.எல்.ஏ சந்தித்து 4 ஆண்டுகளாகிறது!’ - சர்வே எடுத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி

தமிழக அரசியலில், புதிதாக உருவெடுத்துவருகிறது, தமிழ்நாடு இளைஞர் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, பலம் பொருந்திய அ.தி.மு.க, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பிலும் இளைஞர்கள் களம்கண்டனர். ``அரியணையில் அமர்வது எங்களது நோக்கமில்லை. இப்போதுள்ள சூழலில், மக்களுக்கான நல்லாட்சியைப் படித்த இளைஞர்களால் மட்டுமே கொடுக்க முடியும்’’ என்று அவர்கள் முன்வைத்த பிரசாரம் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தது. ஆனாலும், அது வாக்கு வங்கியாக மாறவில்லை. இருந்தபோதும், தொய்வடையாமல் ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களை அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தயாராகி வருகிறார்கள்.

சர்வே

இதன் முன்னோட்டமாக, தொகுதிகளின் களநிலவரத்தை தெரிந்துகொள்வதற்காக `சர்வே’ பணியில் ஈடுபட்டுள்ளனர். ``வேலூர் சட்டமன்றத் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வே முடிவில், எம்.எல்.ஏ-வின் பெயர்கூட பலருக்குத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது’’ என்கிறார்கள் தமிழ்நாடு இளைஞர் கட்சி நிர்வாகிகள். அக்கட்சியின் வடக்கு மண்டலத் தலைவரான நரேஷ்குமார் ராஜேந்திரன் தலைமையிலான நிர்வாகிகள் வேலூர் தொகுதி முழுவதும் இந்த சர்வே பணியில் ஈடுபட்டனர். ``தொகுதியின் எம்.எல்.ஏ பெயர் தெரியுமா? தேர்தலுக்குப் பின்னர் எம்.எல்.ஏ-வைப் பார்த்ததுண்டா? மக்கள் குறைகேட்கும் முகாம் நடத்தியுள்ளாரா? வரும் தேர்தலில் இளைஞர்கள் போட்டியிட்டால் ஆதரவு கொடுப்பீர்களா?’’ போன்ற கேள்விகளை முன்வைத்து மக்களைச் சந்தித்தனர்.

Also Read: வேலூர்: `குவியும் புகார்கள்; சொத்து மதிப்புகள் ஆய்வு’ - ரெட்கிராஸ் செயலாளரை நெருக்கும் விசாரணைக்குழு

இந்த சர்வே குறித்து தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வடக்கு மண்டலத் தலைவர் நரேஷ்குமார் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ``’பெரும்பாலானோர், எம்.எல்.ஏ-வைப் பார்த்தே நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஓட்டுக்கேட்க வந்தவர் நன்றித் தெரிவிக்கக் கூட வரவில்லை’ என்றார்கள். சிலரோ,`எம்.எல்.ஏ-வின் பெயர் கார்த்திகேயன். அவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். ஆனால், அவரை எங்களால் பார்க்க முடியவில்லை. எங்களுக்காகவும் அவர் எதுவும் செய்ததில்லை’ என்றனர். இன்னும் சிலரோ, `மாத்தி மாத்தி இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டுப்போட்டது போதும். படித்த இளைஞர்களும், 50 வயதுக்குட்பட்டவர்களும் ஆட்சிக்கு வரவேண்டும். எளிமையாக அணுகக்கூடியவர்களை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.

சர்வே

சினிமா வேறு, அரசியல் வேறு. ரஜினிக்கும், கமலுக்கும் வயதாகிவிட்டது. இருவரையும் ஏற்றுக்கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?’ என்றார்கள். மக்கள் என்ன சொன்னார்களோ, அதையேதான் நாங்களும் சொல்கிறோம். தமிழ்நாடு இளைஞர் கட்சி நிச்சயமாக ஓர் நாள் தமிழ்நாட்டில் பலம் பொருந்திய கட்சியாக மாறும். நான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டேன். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பணத்தைக் கொட்டி தேர்தலை சந்தித்தனர். இறுதியில் பணமே வெற்றிபெற்றது. இருந்தாலும், மனம் தளராமல் மக்களுக்காக சட்டமன்றத் தேர்தலிலும் வேலூர் தொகுதியில் நிற்கிறேன். தேர்தல் ஆணையம் எங்களுக்கு மோதிரம் சின்னம் வழங்கியிருக்கிறது. சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டுச் சென்று பிரசாரத்திலும் தீவிரமாக கவனம் செலுத்திவருகிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/politics/tn-youth-party-survey-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக