''இடைப்பட்ட காலத்தில் வடிவேலு அவர்களுடன் 'குண்டக்க மண்டக்க' காமெடியில் கலந்துகட்டி நடித்தது ஒரு ஆக்ஷன் ஹீரோவாக இருந்த உங்கள் இமேஜை சற்று கீழிறக்கியது என்பதை மனம் திறந்து ஒப்புக்கொள்கிறீர்களா?''
- அதிரைபுகாரி, அதிராம்பட்டினம்
''அதிரடியா அதிரிபுதிரியா இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் எப்படி கேட்கிறீங்க... ஊர் பெயர்தான் காரணம் போலிருக்கே! நான் எப்பவுமே பெரிய ஆக்ஷன் ஹீரோவா இருந்ததில்லை. எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிப்பேன். திடீர்னு 'அழகி' படத்துலயும் நடிப்பேன். காமெடி என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அப்போது நான் மிஸ்டர் வடிவேலுவோடு சேர்ந்து நடித்த படங்கள் எல்லாமே அந்த நேரத்தில் மிகச்சாதாரணமாக தொடங்கப்பட்ட அல்லது இயல்பாக நடந்த விஷயங்கள்தான். இன்னைக்கு பாருங்க அப்படி ஒரு படம் பண்ணலாம்னு நினைச்சாகூட அதை செய்ய முடியல. அப்படி ஒரு உயர்ந்த நிலையில் மிஸ்டர் வடிவேல் இருக்கார். இன்னைக்கு காலைல கூட என் பையனோட பேசிட்டு இருக்கும்போது மிஸ்டர் வடிவேலுவோட சேர்ந்து நடிச்சா அதோட பிசினஸ், வியாபாரம் எல்லாம் வேற மாதிரியிருக்கும்னு பேசிட்டிருந்தோம். ஏதோ ஒரு வாய்ப்பு அப்ப கிடைச்சது. அதை செஞ்சிட்டோம். ஆக்ஷன் பண்ற ஹீரோக்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க அமைதியா இருக்கிற ஹீரோக்கள் நிறைய பேர் இருக்காங்க. ஆனா, காமெடி பண்றது பெரிய சவால். அதை மிகச் சரியான முறையில் பண்ணியிருக்கேன்ற எண்ணம் எனக்கு உண்டு. இனிமேல் வாய்ப்பு கிடைக்காத ஒரு விஷயத்தை எப்பவோ செஞ்சுட்டோம்கிற ஒரு சந்தோஷமும் எனக்கிருக்கு. உங்களுடைய குறை தீர்க்க சீக்கிரமே ஒரு ஆக்ஷன் படம் பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு ஒரு போட்டோஷூட் நடந்துச்சு. அந்த போட்டோஷூட் படங்கள் சீக்கிரம் வெளியில் வரும். கேலண்டர் மாதிரி வெளியிடலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். சீக்கிரமே பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அதை வெளியிடுவேன்.''
''நீங்கள் விற்ற ஆழ்வார்திருநகர் வீடு, ஒரு வேளை விற்பனைக்கு வந்தால், வாங்கும் அளவிற்கு பொருளாதார பலம் உங்களிடம் இருக்கிறதா?''
- கீதா ஷங்கர், சென்னை
''கீதான்னு எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க இருக்காங்க. நான் கேகே நகர் அலுவலகம் வாங்குறதுக்கு காரணமாயிருந்தவங்க அவங்கதான். அங்க இன்னும் என் குழந்தைகள் பெயரில் மூன்று ஃபிளாட்ஸ் இருக்கு. அதை இடிச்சிட்டு கட்டணும்னு முயற்சி பண்ணிட்டிருக்கோம். கீதா என்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு அவங்கதான் ஞாபகம் வந்தாங்க. பொருளாதாரத்தை சரி பண்ணிட முடியும்ன்ற நம்பிக்கை எனக்கிருக்கு. ஆனா, அவங்க என்ன விலை சொல்லப்போறாங்கன்னு தெரியல. ஒருவேளை என்னுடைய பழைய வீட்ல இருக்கிறவங்க, அதைவிட இன்னும் பெரிய வீட்டுக்கு போகணும்னு நினைச்சு அந்த வீட்டை விக்கிற மாதிரி இருந்தா நான் அந்த வீட்டை வாங்கிப்பேன். என் பசங்க வசதியாக வாழ்ந்த அடையாளம் அந்த வீட்டில் இருக்கு. ஆனா, திரும்பவும் சொல்றேன். அவங்க அந்த வீட்டைவிட இன்னும் பெரிய வீட்டுக்குப் போகப்போறாங்கன்னா மட்டும்தான். மத்தபடி வீடு விற்பனைக்கு வந்தா வாங்கிடலாம். கூடுதலா இன்னும் ரெண்டு படங்கள் நடிக்கணும். அவ்ளோதான்.''
''நான் உங்கள் தீவிர ரசிகர். என் நண்பர் நீங்கள் நிச்சயம் பாஜக-வில் சேருவீர்கள் என்கிறார். உண்மைதானா?''
- வினோத், சென்னை
''இது ஒரு விநோதமான ஜோதிடம்... உங்கள் நண்பர் வினோத் ஜோதிடம் பார்ப்பாரா? அவர் என்ன சொல்கிறார் எனத் தெளிவா சொல்லுங்க. நான் பிஜேபியில் போய் சேருவேனா, இல்ல பிஜேபி என் கூட வந்து சேருமா? இது எப்படி இருக்கு?''
''உங்களின் சில படங்களில் பெண்களை மட்டப்படுத்தும் விஷயங்கள் இருப்பதாகப் பார்க்கிறேன். 'ஒத்த செருப்பு' படத்தில்கூட பெண்தான் தவறு செய்வாள். ஆண், ஒழுக்கமானவாக இருப்பான். ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள்?''
- ஜெயரஞ்சனி, சேலம்
''உங்களின் கேள்வி ஒரு நீண்ட பதிலுக்குக் காரணமா இருக்கு. ஜனரஞ்சகமான படத்துல நாம குறைகளை கண்டுக்காமல் அது போற போக்கில் போயிட்டே இருப்போம். ஆனா, கருத்து சொல்ற படங்கள், கொஞ்சம் வித்தியாசமா எடுக்கப்பட்ட படங்களைக் கூர்ந்து கவனிப்போம். அந்த வகையில் 'ஒத்த செருப்பு' கூர்ந்து கவனிக்கப்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. மக்கள் திலகம் எம்ஜிஆர் 'இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பள'னு ஒரு பாடலையே பாடியிருக்கார். அதே மாதிரி ரஜினி சார் படத்துல 'ஒரு பெண் அதிர்ந்து பேசினா அந்த வீடு உருப்படாது... ஒரு பெண் இப்படித்தான் இருக்கணும்' என்பது மாதிரியான கருத்துகள் இடம்பெற்றிருக்கு. அதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனா, அந்த மாதிரி கருத்துகள் எல்லாம் படங்களில் வந்திருக்கு. 'புதிய பாதை' படத்துல அரக்கனா முரடான இருக்கிற ஒருத்தனை, பூ போல் இருக்கிற ஒரு பெண் எப்படி வந்து மாத்துறா அப்படின்றதுதான் கதை. என்னுடைய எந்தப் படத்திலுமே பெண்களைத் தவறா காட்டியதில்லை.பெண்களை மரியாதை குறைவா, மதிப்பு குறைவா சித்தரிக்கும் எண்ணம் என்னிடம் கிடையாது. 'ஒத்த செருப்பு'ல கூட மாசிலாமணி நல்லவன் கிடையாது. மூணு கொலை பண்ணியிருப்பான். அங்க அவனுடைய மனைவி உஷா, ஒரு உடல்நிலை சரியில்லாத குழந்தையை வளர்க்க ரொம்பவும் கஷ்டப்படுவாங்க. அந்த நேரத்துல அவங்களுக்கு நிறைய பிரஷர் வெளில இருந்து வரும். அப்பவும் அவங்க திருந்தி பழையபடி வாழணும்னுதான் விரும்வாங்க. ஆனா, புருஷன் மூணு கொலை பண்ணிட்டான். அடுத்துதான்தான்னு வரும்போது தன்னை காப்பாத்திக்க முயற்சி பண்ணுவாங்க. அப்பவும் மாசிலாமணி கேரக்டர் மனைவி மேல எவ்வளவு உயிரா இருக்கான்னுதான் படம் முழுக்க சொல்லிட்டே இருப்பான். அந்தக் கதையில் அந்த கேரெக்டர் அப்படி. அவ்வளவுதான். அதனால் யாரையும் புண்படுத்தும், நோகடிக்கும் நோக்கம் எனக்குத் துளியும் இல்லை.''
பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
Also Read: குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban
ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-clarifies-the-rumours-about-joining-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக