Ad

புதன், 16 டிசம்பர், 2020

சட்டப்பேரவைத் தேர்தல் 2021: ஒவைசி கூட்டணி.... தி.மு.க-வா, ம.நீ.ம-வா, நாம் தமிழரா?

அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் (அகில இந்திய மஜ்லீஸ்–இ-இட்டேஹதுல் முஸ்லிமீன்) கட்சி, பீகார் தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான தேர்தலிலும் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி சேர்வதற்கு ஒவைசி கட்சி முடிவுசெய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிவைக்கவும் ஒவைசி கட்சிக்குத் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன.

கமல்

ஹைதராபாத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒவைசி, ஹைதராபாத் தொகுதி எம்.பி-யாக இருக்கிறார். ஆந்திராவையும் தெலங்கானாவையும் மையமாகக்கொண்டு செயல்பட்டுவந்த ஒவைசியின் கட்சி, தற்போது மற்ற மாநிலங்களிலும் கிளைகளைப் பரப்பிவருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒவைசியின் கட்சி போட்டியிட்டது.

சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியின் பி.எஸ்.பி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற `மகா ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி' என்ற கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஒவைசியின் கட்சி ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. தேஜஸ்வி தலைமையிலான ஆர்.ஜே.டி கூட்டணியின் வெற்றியை ஒவைசியின் கட்சி தடுத்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. காரணம், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் ஆர்.ஜே.டி கூட்டணிக்குப் போகாமல், அவை ஒவைசி கட்சிக்கு விழுந்தன.

ஆந்திரா, தெலங்கானாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில் ஒவைசியின் கட்சிக்கு அமைப்புரீதியான கட்டமைப்பு இல்லை. ஆனாலும், இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்து அவர் தேர்தல் களத்தில் இறங்குகிறார். முதன்முறையாக 1960-ம் ஆண்டு ஹைதராபாத் நகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்று, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆந்திராவில் மட்டுமே இயங்கிவந்த இந்தக் கட்சிக்கு, பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குப் பிறகு ஆந்திராவையும் தாண்டி சில மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடைத்தது. காங்கிரஸ், ஆர்.ஜே.டி., சமாஜ்வாடி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருந்துவந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இந்தக் கட்சிகள் பாடுபடவில்லை என்ற பிரசாரத்தை ஒவைசியின் கட்சி முன்னெடுத்தது. காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற கருத்தை ஒவைசி முன்வைத்தார்.

ஸ்டாலின்

2015-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்ட ஒவைசி கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இந்த முறை அங்கு ஐந்து இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. இதுபோக, தற்போது மகாராஷ்டிராவில் ஒரு எம்.பி-யும் இரண்டு எம்.எல்.ஏ-க்களும், தெலங்கானாவில் ஏழு எம்.எல்.ஏ-க்களும் இரண்டு எம்.எல்.சி-க்களும், ஒரு எம்.பி-யும் இருக்கிறார்கள். சமீபகாலமாக ஒவைசி கட்சியின் செல்வாக்கு இஸ்லாமிய மக்கள் மத்தியில் அதிகரித்திருப்பதை இது காண்பிக்கிறது. 2016-ல் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றிபெற்ற மஜ்லீஸ் கட்சி, இந்தத் தேர்தலிலும் 44 வார்டுகளில் வென்று தன் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டது.

தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஒவைசி ஆர்வத்துடன் இருக்கிறார். 2021-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவற்றில் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் மீது ஒவைசிக்கு அதிக ஆர்வம். தமிழகத்தில் 2016 சட்டமன்றத் தேர்தலில், இஸ்லாமிய வாக்காளர்களை அதிகம்கொண்ட வாணியம்பாடித் தொகுதியில் மஜ்லீஸ் கட்சியின் வேட்பாளரான டி.எஸ்.வகீல் அகமது, 10,117 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை 25 தொகுதிகளில் களமிறங்குவது என்று மஜ்லீஸ் கட்சி முடிவுசெய்திருக்கிறது. இது குறித்து ஹைதராபாத்தில் மஜ்லீஸ் கட்சியின் தமிழக நிர்வாகிகளுடன் அசாதுதீன் ஒவைசி ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

சீமான்

ஏற்கெனவே, தி.மு.க கூட்டணியில் இடம்பெறுவது குறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தி.மு.க-விடமிருந்து சரியான பதில் வராததால் தனித்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாகவும் மஜ்லீஸ் கட்சி வட்டாரத்தில் சொல்லப்பட்டது. ஆனாலும், தி.மு.க கூட்டணில் சேர ஆர்வம் இருப்பதால், தி.மு.க-வுடன் மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு மஜ்லீஸ் கட்சி முயன்றுவருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மஜ்லீஸ் கட்சியின் மாநிலத் தலைவர் டி.எஸ்.வகீல் அகமதுவிடம் பேசியபோது, ``தி.மு.க கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறோம். ஒருவேளை தி.மு.க கூட்டணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் நீதி மய்யம் போன்ற பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துபோட்டியிடுவோம்” என்றார்.

ஒவைசியுடன் வகீல் அகமது

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி என எட்டுக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மஜ்லீஸ் கட்சி இஸ்லாமியர் வாக்குகளைப் பிரித்துவிடும் என்று சொல்லப்பட்டாலும், அதற்காக அந்தக் கட்சியைத் தன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் முடிவை தி.மு.க எடுக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது.

Also Read: `சமூகநீதியை ஒழிக்க முயற்சி’... ரஜினி மீது அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்வது ஏன்?

தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஒவைசி கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை” என்று தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்த அளவில் அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. எனவே, நாம் தமிழருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை.

மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்கள் கட்சிக்கு வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். `கழகங்களுடன் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே, மக்கள் நீதி மய்யத்துடன் மஜ்லீஸ் கட்சி கூட்டணி சேரலாம்.

ஒவைசி

இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளரான முரளி அப்பாஸிடம் கேட்டபோது, ``கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து இப்போது வெளிப்படையாகக் கூற முடியாது. மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி என்பது வெளியே சொல்லப்படும் தகவல்தான். அந்தக் கட்சியுடன் அதிகாரபூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை. எங்களுடன் ஒத்துவருகிற எந்தக் கட்சியுடனும் கூட்டணிவைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது” என்றார்.

பா.ஜ.க-வின் `பி டீம்’ என்று மக்கள் நீதி மய்யம் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் அந்த விமர்சனத்துக்கு எதிராக கொந்தளித்து ஒரு ட்வீட் போட்டார் கமல்ஹாசன். பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, பா.ஜ.க-வின் ’பி டீம்’ என்று விமர்சிக்கப்பட்டார் ஒவைசி. `பெரிய கட்சிகள் எங்களைத் தீண்டத்தகாதவர்கள்போல நடத்தின’ என்று ஒவைசி கொந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/with-whom-is-the-azaduddin-owaisi-party-allied-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக