Ad

திங்கள், 14 டிசம்பர், 2020

"15 நிமிடங்களில் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்துங்கள். இல்லையென்றால்..." - மாவீரனின் கதை! #AUSvIND

அடிலெய்டு... ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இங்கேதான் வரும் வியாழன் தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டி என்பதோடு மட்டுமல்லாமல் பகல் இரவுப் போட்டி என்பதால் எதிர்பார்ப்புகள் எகிறுகிறது. அடிலெய்டை ஆஸ்திரேலியர்களின் பேட்டை என்பார்கள். ஆனால், காலத்தைப் பின்நோக்கி ஓட விட்டால், "இது உங்கள் பேட்டையல்ல என் கோட்டை" எனப் பட்டையைக் கிளப்பிய டிராவிட் கண் முன் வருவார்!

இதே அடிலெய்டில் ஆதிக்க நாயகராய், 2003 டிசம்பரை ஆஸ்திரேலியர்களுக்கு டிசாஸ்டர் டிசம்பராக்கி, சாதனைச் சரித்திரம் எழுதினார் இந்தியாவின் பெருஞ்சுவர் ராகுல் டிராவிட். ஆழ்ந்த உறக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட, இந்திய ரசிகர்கள் தங்களது டாப் 5 ஃபேவரைட் டெஸ்ட் போட்டிகளில் இதனை நிச்சயம் குறிப்பிடுவார்கள்.

"டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழு வெற்றிகளில் இதுவும் ஒரு வெற்றி, அவ்வளவுதானே" என மிகச் சாதாரணமாய், இதைக் கடந்து போய்விட முடியாது, ஏனெனில் இந்த வெற்றிக்கான இந்தியர்களின் காத்திருப்பு மிக நீண்டது.

ராகுல் டிராவிட்

1981-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைச் சுவைத்திருந்த இந்தியா அதன்பிறகு அதற்காக பல ஆண்டுகள் காத்திருந்தது. 1999-ம் ஆண்டு, இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வென்று, இந்தியாவை அவமானப்படுத்தி அனுப்பிவைத்தது ஆஸ்திரேலியா. போதாக்குறைக்கு, இந்தத் தொடருக்கு முன்பு இந்தியா, துணைக் கண்டத்துக்கு வெளியே விளையாடி இருந்த 18 டெஸ்ட் தொடர்களிலும் தோல்வியைச் சந்தித்திருந்தது. மூச்சுமுட்டும் தோல்விச் சேற்றை விட்டு வெளியே வருவதற்கு ஆக்ஸிஜனாய் இந்தியாவுக்கு ஒரு பெரும் வெற்றி தேவைப்பட்டது‌. அது நடந்தது அடிலெய்டில், அதுவும் யாருமே எதிர்பார்க்காத வகையில்!

பான்ட்டிங்கின் இரட்டைச்சதம், அகர்கரின் ஆறு விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் வீழ்த்திய அந்த முக்கிய இரண்டு விக்கெட்டுகள் என நினைவுகூரப்பட வேண்டிய பல விஷயங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டது டிராவிட்டின் ஆட்டம்.

பான்ட்டிங்கின் இரட்டைச்சதத்தால் 556 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. பான்ட்டிங் 242 ரன்கள் அடித்தார். இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் ஸ்கோர் போர்ட் 66 ரன்களை காட்டியபோது ஆகாஷ் சோப்ரா அவுட். ஒன் டவுன் பேட்ஸ்மேனாக வீரேந்திர ஷேவாக்கோடு இணைந்தார் ராகுல் டிராவிட்.

அவர் உள்ளே வந்த சில ஓவர்களுக்குள் ஷேவாக் அவுட். அடுத்து சச்சின் அவுட், கங்குலி அவுட் என முப்படைத் தளபதிகளையும் இழந்தது இந்தியா! 85 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்துவிட்டதால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர். "இன்னைக்கு ஃபாலோ ஆன்தான் போல" என கமென்ட்டேட்டர்களும் முணுமுணுக்க ஆரம்பித்த நேரத்தில்தான் அந்த அதிசயம் நிகழ ஆரம்பித்தது. ஸ்டேடியத்தில் இருந்து வெளியேற நினைத்தவர்கள், டிவியை ஆஃப் செய்ய நினைத்தவர்களுக்கு, "நான் இன்னும் இங்கதான் இருக்கேன்" என்றுசொல்லி எல்லோரையும் போட்டியைப் பார்க்கவைத்தார் டிராவிட். பார்த்தவர்கள் பாக்கியவான்கள்!

டிராவிட்

உள்ளே வந்த அந்த கணத்திலிருந்து, போட்டியைத் தன் பேட்டுக்குள் பூட்டிக் கொண்ட டிராவிட், சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்து, சூரியனுக்கே சவால் விடும் அக்னிப் பறவையாய் ஜொலித்தார். அச்சமூட்டும் ஆஸ்திரேலிய பெளலிங்கோ, மறுபக்கம் வீழ்ந்த விக்கெட்டுகளோ எதுவுமே அந்த மாவீரனின் நிழலைக் கூடத் தீண்டவில்லை. 'கில்லர் இன்ஸ்டிங்க்ட்' எனச் சொல்லப்படும் வெற்றிக்கான பசியும், இலக்கை அடையத் தேவையான அசைக்க முடியா ஒரு மன உறுதியும் அவரிடம் நிரம்பவே இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கிரிக்கெட் அகராதியில் உள்ள அத்தனை கிளாசிக்கல் ஷாட்ஸுக்கும் சொந்தக்காரரை அவ்வளவு எளிதாய் வீழ்த்தி விட முடியுமா என்ன? இவருக்கு எப்படிப் பந்து போடுவது, ஃபீல்டிங் செட்டிங் எப்படிச் செய்வது என குழம்பிப் போயினர் ஆஸ்திரேலியர்கள்.

கில்லெஸ்பியின் பந்து வீச்சு எந்த அளவுக்கு பேட்ஸ்மேனின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது பந்திலேயே சிக்ஸருடன் சதத்தைத் தொட்டு சிரிப்பார் பாருங்கள், விஜய் சேதுபதி ஸ்லாங்கில் சொல்ல வேண்டும் என்றால் 'அப்படியே அள்ளும்!'

கவர் டிரைவ், ஸ்ட்ரெய்ட் டிரைவ், லெக் கிளான்ஸ் என ஒவ்வொரு ஷாட்களையும் கொஞ்சமும் ஆர்ப்பட்டமில்லாமல் அற்புதமாய் ஆடி அசத்தினார் டிராவிட். ஒரு பேட்ஸ்மேனாக டிராவிட் பெளலர்களின் உயிரை உருவிவிட்டு உலவ விட்டார். போதாக்குறைக்கு லட்சுமணன் வேறு கை கோக்க, இந்தக் கூட்டணி, 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் செய்ததை அடிலெய்டில் செய்ய ஆரம்பித்தது.

பாலுக்கு பின் பால், ஓவருக்குப் பின் ஓவர், செஷனுக்குப் பின் செஷன்... டிராவிட், இதோ போய் விடுவார் அதோ போய் விடுவார் என எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இரண்டாவது நாள் தொடங்கிய அவரது ஆட்டம் நான்காவது நாள் காலை வரை தொடர்ந்தது. 594 நிமிடங்கள், அதாவது கிட்டத்தட்ட 10 மணி நேரங்கள், களத்தில் கொஞ்சமும் சோர்வின்றி அதே வைராக்கியத்துடன் நின்றார் அவர். பந்து வீசிய பெளலர்கள்தான் நம்பிக்கை இழந்தார்களே ஒழிய அவரை ஒரு சின்ன கவனச் சிதறல் செய்ய வைத்துக் கூட அவரது விக்கெட்டை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு தவஞானி போல், பொறுமையாய், நிதானமாய், ஒருமுகத்தன்மையோடு தொடர்ந்தது அவரது ஆட்டம்.

"முதல் 15 நிமிடங்களில் டிராவிட்டின் விக்கெட்டை வீழ்த்த முயலுங்கள், இல்லையென்றால் மற்ற பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைகளை குறிவையுங்கள்" என கேப்டன் ஸ்டீவ் வாக் கூறுமளவிற்கு தனிஒருவனாய், மொத்த ஆஸ்திரேலிய அணியையும் வெயிலில் போட்டு வாட்டி எடுத்து வெறுக்க வைத்து விட்டார் டிராவிட்.
டிராவிட்

உண்மையில், நான்காவது நாள், டிராவிட்டின் இரட்டைச்சதத்தைப் பார்ப்பதற்காக, பள்ளி, கல்லூரி, வேலை என அத்தனைக்கும் முழுக்குப் போட்டவர்கள் எத்தனையோ லட்சம் பேர்! 386 பந்துகளில் இரட்டைச் சதத்தை அவர் எட்டிய அந்தத் தருணம், இன்றைக்கும் பலரது விழித்திரையில் நிழலாடும்! படுபாதாளத்தில் இருந்த அணியை மீட்டெடுத்து, 66 ரன்களில் இருந்து, 523-க்கு எடுத்துச் செல்வதற்கு எவ்வளவு பெரிய மனோதிடம் வேண்டும்?! இதன் பிறகும் ஓய்ந்து உட்காரவில்லை அந்த மாவீரன்,. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா இன்னிங்ஸிலும் இரண்டு அபாரமான கேட்சுகளைப் பிடித்திருந்தார். அகர்கர் அற்புத ஸ்பெல்லால் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த, ஆல் அவுட் ஆகி, 230 ரன்களை இலக்காய் நிர்ணயித்தது ஆஸ்திரேலியா!

கடின இலக்குதான்... ஆஸ்திரேலிய பெளலிங்கை, அதுவும் இறுதி நாளில் எதிர்கொள்வது இந்தியாவுக்கு மிகச் சவாலானதாகவே இருக்கும், இந்திய வீரர்கள் போட்டியை டிராவாக்கவாவது முயல வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாய் இருந்தது. ஆனால் டிராவிட்டுக்குப் பிடிக்காத வார்த்தை டிரா.

ஐந்தாவது நாளில், போட்டி தொடங்கிய ஒருமணி நேரத்திலேயே, சோப்ராவின் விக்கெட் விழ, மறுபடியும் பேட்டிங் செய்ய உள்ளே வந்தார் டிராவிட். ஏற்கனவே நான்கு நாட்கள் மாற்றி மாற்றி ஃபீல்டிங் மற்றும் பேட்டிங் செய்த சோர்வு அவரிடம் சிறிதும் காணப்படவில்லை. 'த ஜாப் இஸ் நாட் டன் யெட்' என, திரும்பவும் ஒரு போருக்குத் தயாரானார். முதல் இன்னிங்ஸில் செய்ததைக் காட்டிலும் அணியை இலக்கை நோக்கி எடுத்துச் செல்வது இன்னும் சவாலான காரியமாக இருந்தது! மறுபக்கம் வந்தவர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்குத் திரும்பிக் கொண்டிருக்க, டிராவிட்டை மட்டும் ஆஸ்திரேலியர்களால் அசைக்கக் கூட முடியவில்லை! குறிப்பாய் இறுதி நிமிடங்களில், பார்த்திவ் படேலுடன் இணைந்து மிகப் பொறுமையாக, ஓவருக்கு ஒரு ரன், இரண்டு ரன் என எடுத்து, இலக்கை நோக்கி அணியை எடுத்துச் சென்றார் டிராவிட்.

இறுதியில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி எனும்போது, ஒரு ரன்னை மட்டும் எடுத்து விட்டு, வின்னிங் ஷாட் அடிக்க, ஸ்ட்ரைக்கை பார்த்திவிடம் கொடுக்கும்போது அவரது தன்னலமற்ற தன்மை வெளிப்படும். ஆனால், வின்னிங் ஷாட்டை டிராவிட் அடிக்கக் கூடாதா என அத்தனை பேரும் ஆசைப்பட, அதற்கேற்றாற்போல் பார்த்திவ் ஆட்டமிழந்து, ஓவரும் முடிவுக்கு வர, ஸ்ட்ரைக் மறுபடி டிராவிட்டிடம் வரும். அந்த ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரியுடன், 72 ரன்களைக் குவித்து, இந்தியாவை வெல்ல வைத்து அவரது கேப்பில் அவர் முத்தமிடும் அந்த கணம், போரை வென்று, நாட்டையும் காப்பாற்றி நிம்மதிப் பெருமூச்சு விடும் ஒரு தளபதியை நினைவூட்டும் தருணம். ரசிகர்களுக்கு ஒரு உலகக் கோப்பையை வென்றது போன்ற உணர்வை ஏற்படுத்தியது அந்தத் தருணம்!

ராகுல் டிராவிட்

முன்னின்று நடத்துவது, இக்கட்டான நிலைகளை இலகுவாக எதிர்கொள்வது, தனது அணியைச் சரிவிலிருந்து மறுபடியும் மறுபடியும் மீட்பது, இப்படி தனது அணிக்கான வலுவான கோட்டைச்சுவராய் அவர் இருந்ததால்தான் இந்தியப் பெருஞ்சுவராய் கொண்டாடப்பட்டார், கொண்டாடப்படுகிறார், எப்போதும் கொண்டாடப்படுவார்.

இது போன்ற அற்புதத் தருணங்களுக்காகத்தான் இன்னமும் டெஸ்ட் போட்டிகள் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன. எத்தனை ஐபிஎல், எத்தனை பிபிஎல் சீசன்கள் வந்தாலும், ஒரு இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிக்கு அது இணையாகாது. ஏனெனில் அது ஏற்படுத்தும் தாக்கம் வரலாற்றில் எப்போதும் நீடித்திருக்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் நினைவலைகள் தொடரும்!



source https://sports.vikatan.com/cricket/rahul-dravids-classical-innings-against-australia-in-adelaide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக