Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

``ஒன் பிட்ச் கேட்ச்.. ஆஃப் சைட் ரன்..!’’ - எவர் கிரீன் Street கிரிக்கெட் நினைவுகள் #90s #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆட்டம் அது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். மொபைல் போன் பேசுவதற்கான சாதனம் என்ற புரிதலை தாண்டி அது கைக்கெட்டாத பருவம் அது. அந்நாட்களில் எல்லாம் வார விடுமுறை நாட்களில் எனக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு கிரிக்கெட் தான்.

“சப்பா…எங்கு பார்த்தாலும் கிரிக்கேட்…எதற்கெடுத்தாலும் கிரிக்கேட் தானா…சொல்வதற்கு வேறு விளையாட்டே இல்லையா?” என்று குமுறுபவர்களின் சத்தம் கேட்கிறது. இங்கு மற்ற விளையாட்டுகளை காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் ஒர் சிறப்பம்சத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

Representational Image

கிரிக்கெட் விளையாட்டில் மட்டும்தான் எந்தவோரு குறிப்பிட்ட விளையாட்டு சாதனம் இல்லாவிடினும் கிடைப்பதை கொண்டு மட்டை, பந்து , ஸ்டம்ப் ஆகியவற்றை நாமே உருவாக்கி விளையாட முடியும். அதுவும் விளையாடுவதற்கு, போதிய மைதான வசதி இல்லாத நீண்ட, குறுகிய தெருக்களில் சுமார் 5-6 பேர் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டாக கிரிக்கெட் மட்டுமே பரிணமித்து வளர்ந்து வந்திருப்பதாக நான் கருதுகிறேன். இதற்கான காரணம், கிரிக்கெட் மீதான மிகைப்படுத்தப்பட்ட எனது புரிதலா, அல்லது மற்ற விளையாட்டுகளைக் காட்டிலும் விளையாட்டு சந்தையின் வளர்ந்து வரும் ஏகபோகமாய் கிரிக்கெட் உருவாகி வருவதால் ஏற்பட்ட விளைவா என்றெல்லாம் தெரியவில்லை.

நாங்கள் அப்போது விளையாடிக்கொண்டிருந்த இடமோ சற்று குறுகலான தெருவைக் கொண்டது. இதன் காரணமாக, விளையாடும் போது பந்து அவ்வப்போது சில வீட்டுக்குள் சென்று விடுவதும் பின்னர் வீட்டாரிடம் வசவு வாங்கிக் கொண்டே விளையாடுவதுமாக இருந்தது எங்கள் விளையாட்டு. பின்னர், ஒரு நாள் எங்கள் தெருவில் காலியாக கிடக்கும் ஒர் முட்புதர் அடங்கிய இடத்தை சுத்தம் செய்து அதனை விளையாடுவதற்கு தயார்படுத்தினோம்.

y LumenSoft Technologies on Uns

அப்போது நாங்கள் விளையாடிய ஒர் கிரிக்கெட் போட்டி என் மனதெங்கிலும் நீங்கா இடம் பிடித்தது. வழக்கமான கிரிக்கெட் விதிகளுடன் கூடுதலாக, ஒன் பிட்ச் கேட்ச் மற்றும் ஆஃப் சைடில் & ஸ்ட்ரைட் போஸிஷன்களில் மட்டும் பவுண்டரி எல்லையை வகுத்திருந்தோம் (அந்நாட்களில் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் வழக்கமான விதிமுறைகளில் இவையும் சில…).

டீமுக்கு மூன்று நபர்கள் இடம்பெற்றிருந்தோம். முதலில் எதிரணி விளையாடியது. அந்த டீமைச் சேர்ந்த பேட்ஸ்மன்களான மணியும், தங்கமும் சேர்ந்து எங்கள் அணியின் பௌலர்களை வெளுத்து வாங்கினர். ஆறு ஓவர்கள் கொண்ட மேட்சின் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தனர்.

ஆறு ஓவர்கள்…. 81 ரன்கள்… சற்றே கடின இலக்கு தான். இருப்பினும் எங்கள் அணியின் ஒரே முக்கிய நம்பிக்கை நட்சத்திரம் எனது தம்பி(ஆகாஷ்) தான்.

இருக்கும் மூவரில் அவன் தான் சற்றே அடித்து ஆடக்கூடிய பேட்ஸ்மேன். ஆட்டம் துவங்கியது. முதல் ஒவரில் இரண்டு பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சேர்த்தோம். ஆட்டம் நம்பிக்கையளிக்கக்கூடிய வகையில் செல்வதாக தெரிந்தது. எதிர்பாரதவிதமாக, இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் எனது தம்பி அவுட் ஆக, வெற்றியின் நம்பிக்கை சற்றே தகர துவங்கியது. மற்றுமோரு பேரிடியாக, ஆட்டத்தில் அதே இரண்டாவது ஓவரில் மற்றுமோரு பேட்ஸ்மேனும் அவுட் ஆனார். வெற்றி வாய்ப்பிற்கான நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்து போனது எனக்கும் என் தம்பிக்கும்.

Representational Image

ஏனெனில், நான் ஒரு சுமாரான பேட்ஸ்மேன் தான். இலக்கு என்னவோ, 4 ஒவர்களில் 60 ரன்கள் என்பதாக இருந்தது. சரி தோல்வியின் ரன்கள் வித்தியாசத்தை ஆவது முடிந்த வரையில் குறைக்கலாம் என்ற எண்ணத்துடனே களத்தில் இறங்கினேன். ஆகாஷிற்கோ ஆட்டத்தில் தோல்வி உறுதி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. முதலில் பந்துவீச்சை எதிர்கொள்ளவே சற்று தடுமாறினேன். ஆஃப் சைடில் மட்டும் தான் ரன்கள் என்பதால், பவுலர்கள் லெக் சைடில் காலை குறித்து வீசியே எதிரணியை கட்டுக்குள் கொண்டு வர முடியும். எனக்கோ ஆஃப் சைடில் விளையாடிய பரிச்சயம் பெரிதும் இல்லை. எதிரணியின் பவுலரான தங்கமோ வேகமாகவும், துல்லியமாகவும் இலக்கு நோக்கி பந்துவீசக் கூடியவர்.

4 பந்துகள் எதிர்கொண்டு ஒரு ரன்னும் எடுக்கவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு லெக் சைடில் வீசிய இரு ஷார்ட் பிட்ச் பந்துகளை சற்று விலகி ஆஃப் சைடில் விளாசினேன். விளைவு 2 சிக்சர்கள். அப்போதுதான் என்னுள் நம்பிக்கை சற்றே உதயமானது. தொடர்ந்து ஒவ்வோரு ஓவரிலும் பவுண்டரிகளும், சிக்சர்களும் குறிப்பிட்ட இடைவேளியில் பறந்தன.

ஆட்டத்தின் இறுதி ஓவர். வெற்றிக்கு தேவை 14 ரன்கள். பந்துவீச வந்திருப்பவர் மணி, சூழற்பந்துவீச்சாளர். இவரை சமாளித்து இலக்கை சமாளிப்பதானது சற்றே கடினமான ஒன்று. கடைசி ஒவரின் முதல் நான்கு பந்துகளில் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தோம். 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை. 5ஆவது பந்தில் ஒரு சிக்சர். 1 பந்தில் நான்கு ரன்கள். எனக்குள் கடைசி பந்தை எப்படியாவது தூக்கி அடித்து சிக்சர் அடித்துவிட வேண்டும். தரையில் அடித்தால் நிச்சயம் பந்து பவுண்டரிக்கு செல்லாது என்று கணித்திருந்தேன். பவுண்டரி அருகே ஒரு பீல்டர்(தங்கம்), எனக்கு சற்று அருகே கேட்சிங் பொசிஷனில் ஒரு பீல்டர்(மாணிக்கம்). கடைசி பந்து நன்கு சுழன்று ஆஃப் சைடு நோக்கி வேகமாக திரும்பியது.

Representational Image

பந்தை அப்போது என்னால் ஆஃப் டிரைவ்(Off-drive) தான் செய்ய முடிந்தது. பந்து மாணிக்கத்தின் கால்களின் இடைவேளியில் தப்பித்து பவுண்டரி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பவுண்டரி லைனில் ஸ்டரைட் போசிஷனில் நின்றுகொண்டிருந்த தங்கம், பந்தை தடுக்க ஆஃப் சைடு நோக்கி வேகமாக ஒடினான். அப்போது பந்தை மட்டுமே என் கண்கள் உச்சகட்ட எதிர்ப்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்க,. இறுதியில், தங்கத்தை ஏமாற்றி பந்து பவுண்டரி சென்ற போது வெற்றி ஆராவாரத்துடன் கத்தினேன். அப்போது ஆகாஷை ஆர தழுவிக் கொண்டே வெற்றி களிப்பில் உதிர்த்த சொற்கள் இன்றும் என் நினைவில் மிதந்து கொண்டிருக்கிறது, ”மேட்ச் என்றால்…இதுதான் மேட்ச்…” !

அந்த கிரிக்கெட் மேட்ச்சில் இருந்து தான் எங்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் தங்கம், கார்த்தி, மணி, கோபி, சேசன், நான் மற்றும் ஆகாஷ் ஆகியோரை உள்ளடக்கிய ‘வின்னர் பாய்ஸ்’ எனும் அணி உதயமானது.

நிற்க… ஒரு கிரிக்கெட் மேட்சை வர்ணித்ததும் எங்களில் ஒருவரோ அல்லது நானோ பெரிய அளவில் கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த கட்டத்திற்கேல்லாம் செல்லவில்லை. மாறாக, இங்கு மேற்கூறிய வகையிலான ’ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஸ்வீட் மெமரீஸ்’ தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும், தெருக்களிலும் காணப்பெறும் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். அதற்கான ஒர் சிறிய உதாரணம் தான் இக்கதை. பத்து வருடங்களுக்கு முன்னர், நான் பத்தாவது படிக்கும் போது விளையாடிய விளையாட்டு யாவும் பத்தாண்டு பருவத்தேர்வுகளுடனே கரைந்து போயின. அதன்பிறகு, அணியில் இருந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையின் அடுத்த கட்ட நிகழ்வுகளான படிப்பு, வேலை, இடம்பெயர்தல் ஆகிய வாழ்க்கை அலையில் அடித்துச் செல்லப்பட்டோம்.

Representational Image

இன்று சரியாக பத்தாண்டுகளுக்கு பின்னர், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் ஏதோ ஒரு வேலையை செய்து வருகிறோம். இந்த பத்தாண்டுகளில் மேலும், பல வடிவங்களில், பல விலைகளில் வெளியான ஸ்மார்ட்போன்கள் மேலும் எங்களிடையேயான இடைவேளியை மேலும் அதிகரித்தது, விளையாடுவதையே அடியோடு நீர்த்துபோகச் செய்தது. வாழ்க்கையெனும் நீரோடையில் பல்வேறு சவால்கள், தடைகள் யாவற்றையும் கடந்து பயணித்து வரும் வேளையிலும் கூட, இன்றும் அன்று எந்தவோரு பேதமில்லாமல் பழகியது, ஒருவருக்கோருவர் விட்டுக்கொடுத்து நட்புறவாடியது ஆகியன நினைவுகள் யாவும் பசுமை மாறா நீங்கா என்னுள் நிறைந்திருக்கிறது.

பல்வேறு இடங்களில் பிரிந்திருந்த போதிலும், சமூக வலைதளத்தின் மூலம் மீண்டும் ஒன்றுசேர்ந்து ஒரு ரீயூனியன் மேட்ச்(Reunion match) காக ஏங்கி இருந்து அன்புடன் காத்திருக்கும்..

-வே.சுந்தர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/nostalgic-article-about-street-cricket

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக