Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புதுச்சேரி:`கொரோனா நெகட்டிவ்... ஆனா, தப்பு நடந்துபோச்சி' - அதிர்ச்சி கொடுத்த அரசு மருத்துவமனை

பிணவறையில் மாயமான உடல்:

புதுச்சேரி, வில்லியனூர் மனவெளி பகுதியில் வசிப்பவர் யோகநாதன். மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி குணவேலிக்கு வயது 43. கடந்த சில வருடங்களாக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த இவருக்கு ஞாயிற்றுகிழமை மூச்சு திணறல் அதிகமானது. அதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் யோகநாதன். ஆனால் மருத்துவமனையின் வாசலிலேயே உயிரிழந்தார் குணவேலி. அதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக தனது மனைவியின் உடலை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் யோகநாதன். அங்கு குணவேலியின் உடலை கொரோனா சோதனைக்கு உட்படுத்திவிட்டு, பிணவறையில் வைத்தனர் மருத்துவமனை ஊழியர்கள்.

உயிரிழந்த குணவேலி

நேற்று காலை குணவேலியின் உடலுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்த நிலையில், உடலை வாங்குவதற்காகச் சென்றிருக்கிறார் யோகநாதன். ஆனால் பிணவறையில் வைக்கப்பட்ட குணவேலியின் உடலைக் காணவில்லை. குணவேலியின் கணவர் யோகநாதனிடம் பேசினோம். “நாமக்கல் மாவட்டத்துல இருக்கற காளிப்பட்டிதான் என் சொந்த ஊரு. பாண்டிச்சேரிலதான் சிறுதொழில் பண்ணிக்கிட்டு இருக்கேன். ரெண்டு வருஷமா தோல்நோய்க்காக என் மனைவிக்கு சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தோம். நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்ததால அவங்களுக்கு மூச்சுப் பிரச்னை வந்தது. சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் எடுத்ததுக்கு அப்புறம் கொஞ்சம் சரியானாங்க. ரெண்டு மூனு நாளைக்கு முன்னாடி திடீர்னு மறுபடியும் மூச்சுத் திணறல் வந்துச்சி. ஏற்கெனவே டாக்டர் கொடுத்த மருந்தையும், நெபுலைசரயும் வெச்சப்புறம் சரியானாங்க.

’என் கையை புடிச்சிக்கிட்டே அவ போயிட்டா’

ஞாயிற்றுக்கிழமை மதியம் மறுபடியும் மூச்சுத் திணறல் வந்துச்சி. ஹாஸ்பிட்டலுக்கு போலாம்னு நான் சொன்னப்போ, ‘வேணாம் மாமா ஞாயித்துக்கெழமை டாக்டருங்க இருக்க மாட்டாங்க. நான் தாங்கிக்கறேன். நாளைக்கு காலைல போலாம்னு சொன்னாங்க’. ஆனால் அன்னைக்கு நைட் அவங்களுக்கு ரொம்ப முடியாம போயிடுச்சி. உடனே எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கற தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டுப் போனேன். அங்க செக் பண்ண டாக்டருங்க ஆக்ஸிஜன் கம்மியா இருக்குன்னு சொல்லி ஜிப்மர் ஹாஸ்பிட்டலுக்கு போகச் சொன்னாங்க. ஐயோ அவ்ளோ தூரம் இப்போ போக முடியாது. எதாவது பண்ணுங்க டாக்டர்னு அழுதுப் பார்த்தேன். அப்புறம் என்ன பண்றதுன்னு தெரியாம பக்கத்துல இருக்கற இன்னொரு தனியார் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிக்கிட்டு போனேன்.

குணவேலியின் கணவர் யோகநாதன்

அங்க போனதும் டாக்டருங்க உடனே ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வந்தாங்க. ஆனால் என் மனைவியால காரை விட்டு இறங்க முடியல. என்ன பண்ணுதுன்னு டாக்டருங்க கேட்டாங்க. அப்போ என் கையை புடிச்சிக்கிட்டு ‘என்னால ரொம்ப முடியல மாமா’னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே உசுரு போயிடுச்சி. எப்படியாவது காப்பாத்திடனும்னு அவ வாயில் என் வாயை வச்சி ஊதிப்பாத்தேன். ஆனால் என் கையை புடிச்சிக்கிட்டே அவ போயிட்டா. டாக்டருங்களும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியல. மூச்சுப் பிரச்னை இருந்ததால கொரோனா டெஸ்ட்டுக்கு இந்திராகாந்தி கவருமெண்ட் ஹாஸ்பிட்டலுக்குத்தான் உடம்பை அனுப்புவோம்னு சொல்லிட்டாங்க. நேத்து காலைல (திங்கள் கிழமை) 6.15 மணிக்கு கதிர்காமம் ஹாஸ்பிட்டல்ல கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு மார்ச்சுவரில உடம்பை வச்சிக்கிட்டாங்க.

குணவேலியின் உடலுக்கு நடந்தது என்ன ?

நான் உசுருக்கு உசுரா நெனச்ச என் மனைவிகூட வாழதான் எனக்கு கொடுத்து வைக்காம போயிடுச்சி. கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ்னு வந்துட்டா இத்தனை வருஷம் என்கூட வாழ்ந்த அவ உடம்பைக் குடுக்க மாட்டாங்களேன்னு ராத்திரிபூரா தவிச்சிட்டு இருந்தேன். இன்னைக்குக் காலைல 6 மணிக்கே வந்து பாத்தப்ப கொரொனா ரிசல்ட் நெகட்டிவ்னு இருந்துச்சி. சொந்த ஊருக்கு உடம்பை எடுத்துட்டுப் போறது எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டேன். 11 மணிக்கு போலீஸ் வந்து தேடுனப்போ மார்ச்சுவரில என் மனைவி உடம்பு இல்லை. இன்னும் தேடிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதுவரைக்கும் கிடைக்கல. எனக்கு இப்போ என் மனைவி வேணும். எனக்கு வேற எந்த சமாதானமும் வேணாம். என் மனைவி உசுரு பிரியற வரைக்கும் அவ உசிரு போயிடக்கூடாதுன்னு கவலையா இருந்துச்சி. உசிரு போனதுக்கப்புறம் உடம்பை நம்மகிட்ட குடுத்துடனுமேன்னு கவலையா இருந்துச்சி. கவருமெண்டு சொல்ற ரூல்ஸை மக்கள் கடைப்பிடிக்கும்போது, எங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கனும்ல சார்? என் எதிரிக்குக் கூட இந்த நிலைமை வந்துடக் கூடாது” என்று கதறி அழுகிறார்.

கொரோனா நெகட்டிவ் ரிசல்ட்

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தன்னார்வலர்கள்தான் அடக்கம் செய்து வருகின்றனர். உறவினர்கள் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் உடலை தன்னார்வலர்களிடம் ஒப்படைப்பார்கள் மருத்துவமனை ஊழியர்கள். அதன்படி நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஆனந்தாயியின் (70) உடலுக்கு பதிலாக கொரோனா தொற்று இல்லாத குணவள்ளியின் உடலை எடுத்துச்சென்று எரித்துவிட்டார்கள். மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமும், பிணவறையில் அதிகளவில் குவிந்துவரும் உடல்களும்தான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்:

மருத்துவமனைக்கு வந்த உதவி ஆட்சியர் சுதாகர், "தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக புகார் கொடுத்தால் அரசு சார்பில் விசாரணை நடத்தப்படும்" என்று உறுதி அளித்தார். இதுகுறித்து விளக்கம் கேட்க மருத்துவமனையின் இயக்குநர் மாணிக்கதீபனை தொடர்புகொண்டபோது, “விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். முடிந்தவுடன் விளக்கமாகக் கூறுகிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

Also Read: `கொரோனா தொற்றால் இறந்த தொழிலதிபர்' - கீழக்கரைக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவரின் உடலை சவக்குழிக்குள் தூக்கி வீசிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம். இந்நிலையில் உடலை மாற்றி ஏரித்திருக்கும் விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/womans-dead-body-which-was-placed-for-corona-test-has-missed-in-mortuary-at-puducherry-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக