Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

வானத்தில் இருந்து கொட்டிய வெள்ளம்…! - பரவசத்தை ஏற்படுத்திய 'நயாகரா' நீர்வீழ்ச்சி பயணம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கீழிருந்து பார்த்தால் நீர் எங்கிருந்து விழுகிறது என்று தெரியாமல் விழும் நீர் வீழ்ச்சிகளை ஆகாச கங்கை என்று சொல்வாகள். அது போன்ற நீர் வீழ்ச்சிகள் பல உண்டு. ஆனால் கங்கை நதியில் வரும் பெரு வெள்ளம் சுமார் 175 அடி உயரத்திலிருந்து விழுந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட நீர்வீழ்ச்சி தான் 'நயாகரா'. ஈரி ஏரியிலிருந்து (Lake Eerie) வழிந்தோடும் நீரே நயாகரா நதியாக பாய்ந்து பபலோ (Buffalo) என்ற இடத்தில் நயாகரா நீர் வீழ்ச்சியாக (Niagara Falls) அமெரிக்கா மற்றும் கனடா என்ற இரு பெரிய நாடுகளுக்கு இடையில் கொட்டுகிறது.

Niagara Falls

இதற்கு முன்பு யாராவது நயாகரா பற்றி எழுதி இருக்கிறார்களா தெரியவில்லை. ஆனால் இந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவமாகவே (Unique Experience) இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நதி நிறைந்து வெள்ளமாக ஓடும் காட்சியை பார்க்கும்போது ஒரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். என்னுடைய ஊரிலிருந்து காவேரி ஆறு மிக அருகில் ஓடுவதால் (நான்கு கிலோ மீட்டர் தொலைவில்) நான் மழை காலங்களில் பலமுறை சென்று இருகரை தொட்டு குதித்தோடும் நீரை ரசித்திருக்கிறேன். ஒரு நதிக்கு அழகே நீர் நிறைந்து துள்ளி ஓடும்போதுதான். ஆற்றில் நீரில்லாத காலங்களில் வறண்டு மணல் படுகையாக காட்சி அளிக்கும் பொது உள்ளுக்குள் மிக வருத்தமாக இருக்கும்.

Niagara Falls

ஆனால் நயாகரா நீர் வீழ்ச்சியை பார்க்கும்போது உங்களுடைய பரவசம் இரட்டிப்பாகும் என்றால் அது மிகையில்லை. வேறு தேசத்திலிருந்தாலும் அங்கு சென்று மேலிருந்து மடை உடைந்த வெள்ளமாக கீழே கொட்டும் அழகை கண்ட பின்பு அது எல்லாம் உங்களுக்கு மறந்து விடும். ஆனால் பூமி பந்தில் உள்ள அனைத்துமே பூமிக்கு சொந்தம் என்பதினால் நாம் வேறு தேசத்திலிருக்கிறோம் என்ற நினைவு சில கணங்களாவது நீங்கள் மறந்து அதன் அழகிலும் பிரமாண்டத்திலும் உங்களை கரைத்து கொள்வீர்கள் என்பது என்னுடைய எண்ணம்.

நான் முதல் மூன்று முறை பணி நிமித்தமாக அமெரிக்கா சென்ற பொழுது அங்கு செல்வதற்கான வாய்ப்பு அமைய வில்லை. அமெரிக்காவில் வாகனம் ஒட்டி பழக்கமில்லாத காரணத்தால் யாரேனும் அங்கு வாகனம் ஒட்டி பழகிய நண்பர்கள் இருந்தால் மட்டுமே இது சாத்திய படும். ஒவ்வொரு முறை அமெரிக்கா சென்று திரும்பி வரும்போது இந்த முறையும் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கமும் ஒருமுறையாவது அங்கு சென்று வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

Niagara Falls

அந்த வாய்ப்பு 2017 ஆம் ஆண்டு நான்காவது முறை சென்ற போது கிடைத்தது. நான் ஓஹியோ மாகாணத்திலுள்ள க்ளீவ்லேண்ட் (Cleveland City in Ohio State) எனும் நகரத்திற்கு மூன்று வாரங்கள் வேலை நிமித்தமாக சென்றிருந்தேன். என்னுடன் வேலை செய்த நண்பர்கள் வினோத்குமார் மற்றும் மஞ்சுநாத் காண்டலா(Manjunath Gandla) ஆன் ஆர்பர் (Ann Arbor) எனும் நகரத்திற்கு அதே கால கட்டத்தில் பயணம் செய்திருந்தனர். ஒரு வெள்ளி மாலை அவர்கள் ஆன் ஆர்பரிலிருந்து (மூன்று மணி நேர தூரம்) நான் இருந்த க்ளீவ்லாண்டிற்கு வந்தார்கள்.

சனிக்கிழமை காலை ஏழு மணி அளவில் நாயகராவிற்கு புறப்பட்டு செல்வதாக திட்டம். அதே போல வழியில் உண்பதற்காக சில உணவு மற்றும் பிஸ்கட் போன்றவற்றை எடுத்து கொண்டு சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு நயாகரா நோக்கி எங்கள் பயணத்தை (மூன்று மணி நேர தூரம்) தொடங்கினோம். இடையில் ஓரிடத்தில் மெக்டொனால்ட் (McDonald) உணவகத்தில் நிறுத்தி ஒரு ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் மட்டும் வாங்கி கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.

பபலோ (Buffalo) அருகில் ஒரு ஐம்பது மைல் தொலைவுக்கு ஈரி ஏரிக்கரை ஓரமாகவே சாலை அமைந்திருக்கும். அதில் பயணம் செய்வது ஒரு இனிமையான அனுபவம். பதினோரு மணியளவில் நயாகரா சென்றடைந்தோம். எங்கள் காரை பார்க்கிங் தேடி நீர் வீழ்ச்சி அருகிலேயே நிறுத்திவிட்டு நீர்வீழ்ச்சி நோக்கி நடக்க தொடங்கினோம்.

Niagara Falls

அங்கே ஒரு சிறப்பு அனுமதி சீட்டு உண்டு. அங்கு உள்ள அனைத்து முக்கிய இடங்களுக்கும் செல்வதற்கு ஒரே அனுமதி சீட்டு (இருபத்தியைந்து அல்லது முப்பது டாலர் என நினைக்கிறன்) அதை வாங்கி கொண்டு முதலில் நீர் வீழ்ச்சியின் கீழே செல்வதற்காக வரிசையில் காத்திருந்தோம். நீர் வீழ்ச்சியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவு வரை பெர்ரி (Ferry) எனப்படும் ஒரு படகில் அழைத்து செல்வார்கள். ஒரு முறைக்கு சுமார் ஒரு நூறு பேர் வரை அந்த படகில் செல்ல முடியும். எதிர் கரையில் இதே போன்று கனடா நாட்டின் படகு சவாரி உண்டு.

அந்த படகு துறைக்கு செல்வதற்கு ஒரு லிப்ட் (Automatic Lift) உண்டு. மேலிருந்து ஒரு நூற்றைம்பது அடி கீழே செல்ல வேண்டும். மொத்தம் ஆறு லிப்ட்கள் இயங்குவதாக ஞாபகம். ஒரு வழியாக படகு துறைக்கு சென்ற பின்பு அங்கே நம்முடைய உடை நனையாமல் இருக்க ஒருமுறை உபயோக படுத்த கூடிய பொலித்தீன் (Polythene) உடை (அமெரிக்க பகுதியில் நீல நிறத்திலும் கனடிய பகுதியில் சிவப்பு நிறத்திலும்) ஒன்றை கொடுக்கிறார்கள். அதை நாம் நம் உடை மேலே அனைத்து கொள்ளவேண்டும். நாங்களும் படகில் ஏற நீர் வீழ்ச்சி நோக்கிய பயணம் ஆரம்பித்தது.

Horseshoe Niagara falls

நயாகரா நீர்வீழ்ச்சி மூன்று பகுதிகளாக இருக்கும். அதன் ஒரு பகுதி கனடா எல்லையில் இருப்பதினால் அங்கு செல்ல அனுமதி கிடையாது (நீங்கள் கனடா நாட்டிற்கு செல்வதற்கான விசா வைத்திருக்க வேண்டும்). அந்த பகுதி நீர் வீழ்ச்சிக்கு குதிரை லாட (Horseshoe) நீர் வீழ்ச்சி என்று பெயர். ஆனால் எங்கள் படகு அமெரிக்க பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சிக்கு அருகில் தான் செல்ல முடியும். இரு கரை தொட்டு ஓடும் நீரில் கூட எல்லை வகுக்க பட்டிருந்ததை அங்கு தான் பார்த்தேன்.

எங்கள் படகு நீர் வீழ்ச்சியின் முதல் பகுதிக்கு அருகில் செல்ல ஆரம்பிக்க நீர்வீழ்ச்சியிலிருந்து கொட்டும் நீரின் வேகத்தில் தெறிக்கும் நீர் துளிகள் மேலே வந்து விழ எதோ பூந்தூரலாக மழை பொழிவது போன்ற உணர்வு. ஆனால் அதை விட அற்புதம் முதல் பகுதியிலிருந்து (Bridal Veil Falls) ஏதோ வானத்திலிருந்து நீர் வெள்ளம் பாய்ந்து வருவது போன்ற காட்சியை பார்த்து ஆவென வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தோம்.அதை ரசித்துக் கொண்டிருக்கும் போதே நீர் வீழ்ச்சியின் மத்திய பகுதி (American Falls) தெரிய ஆரம்பித்தது. அது இதை விட பிரமாண்டமாக இருந்தது. நீர்வீழ்ச்சியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவு வரை மிக நெருக்கமாக படகு செல்கிறது.

Bridal Veil Falls

மேலே நான் வானத்திலிருந்து கொட்டுவதாக எழுதியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் நீர் வீழ்ச்சியிலிருந்து சிதறும் நீர் துளிகள் ஒரு புகை போன்று மேலே சென்று மேகத்துடன் இணைவதை நீங்கள் பார்க்கமுடியும். அது ஏதோ மேகத்துக்கும் நீர்வீழ்ச்சிக்கு இடையேயான ஒரு இணைப்பு போல தோன்றும். இதை நீங்கள் அவென்ஜ்ர்ஸ் (Avengers) படத்தில் பூமிக்கும் வானத்திற்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி அங்கிருந்து வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வருவதற்கு வழி ஏற்படுத்துவர்களே அது போல இருக்கும்.

குறிப்பிட்ட இடம் வந்தவுடன் சில நிமிடங்கள் மட்டும் அங்கேயே நிறுத்தி வைக்கின்றார்கள். அந்த இடத்திலிருந்தே கனடியன் பால்ஸ் (Canadian Falls) என்று அழைக்கப்படும் குதிரை லாட (Horseshoe) நீர் வீழ்ச்சியை பார்த்து ரசித்தோம். ஒருவாறாக அனைவரும் அதை ரசித்து தங்களுடைய கைபேசியிலோ அல்லது காமெராவினாலோ தங்கள் நினைவுகளை பதிவு செய்து கொண்டிருக்கும் போதே சட்டென்று கனவு கலைந்தது போல நீர்வீழ்ச்சியை விட்டு படகு விலக ஆரம்பிக்கிறது. படகு விலக விலக அந்த அற்புதமான காட்சியை நெடுநேரம் ரசிக்க முடியாத வருத்தத்துடன் மனம் அந்த அருவியின் அழகில் நிற்க உடல் மட்டும் படகுடன் திரும்புகிறது.

Niagara falls

அங்கே இந்திய உணவகங்கள் இருக்கின்றன. விலை மிக அதிகம் ஒரு தட்டு (One Plate Lunch) மதிய உணவு பதினெட்டு டாலர்கள் (நம்ம ஊர் மதிப்பில் 1250 ருபாய்). அரை மனதுடன் அந்த மதிய உணவை உண்டுவிட்டு அதன் பிறகு கேவ் ஆப் விண்ட்ஸ் (Cave of Winds) என்ற இடத்திற்கு நாங்கள் சென்றோம். அதே போல வரிசையில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் காத்திருந்து, மேலிருந்து 150 அடி கீழே லிப்ட் ல் சென்றால் ஒரு சிறிய கிளை அருவியில் சென்று நாம் குளிக்க முடியும். சிறிய அருவி என்று குறிப்பிட்டாலும் கீழே சென்று பார்த்தால் அதுவே பெரிய அருவியாக தெரிகிறது. மிக அற்புதமான ஆனந்த அனுபவம் அது.

இந்த அனுபவத்தை நான் எப்படி விவரித்தாலும், நாம் நேரடியாக சென்று அதை அனுபவிக்கும் வரை அதை நம்மால் உணர்ந்து கொள்ளவே முடியாது (It cannot be explained until you experienced). பிறகு படிகள் வழியாக மேலே ஏறி மிக நெருக்கமாக அருவியை பார்த்து விட்டு மறுபடியும் லிப்ட் வழியாக மேலே வந்தோம்.

பனிக்காலத்தில் இந்த அருவியும் நதியும் முழுவதுமாக உறைந்து விடும் என்று கேள்வி பட்டிருக்கிறேன். இந்த மொத்த அழகும் உறைந்த நிலையில் பார்த்தால் எப்படி இருக்கும் என எண்ணி பார்க்கிறேன். பனிக்காலத்தில் செல்ல நேர்ந்தால் ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/an-experience-of-travel-to-niagara-falls

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக