Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

#DhoniRetires ஓராண்டாகவே வெயிட்டிங்... இப்போது ஏன் ஓய்வை அறிவித்தார் தோனி?

2010 ஐபிஎல் சீஸன் அது. சென்னை சூப்பர் கிங்ஸுக்காக முரளி விஜய் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். சென்சுரி அடிக்கிறார், சிக்ஸர்கள் விளாசுகிறார் என பரபர ஃபார்மில் இருந்தவரைப் பேட்டி எடுப்பதற்காக சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் ஒரு மாலை வேளையில் நுழைந்தேன்.

சென்னை அணியின் மேலாளர் ரஸல், ''எல்லோரும் பிராக்டீஸில் இருக்கிறார்கள்... கிரவுண்டுக்குள்ளேயே பேட்டி எடுத்துக்கொள்ளலாம்'' எனச் சொல்ல, பவுண்டரி லைனை ஒட்டியபடியே நடக்க ஆரம்பித்தேன். ஒருபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியும், இன்னொருபக்கம் சென்னை அணியும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. ஒரு ஓரத்தில் சச்சின் டெண்டுல்கருடன் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன்.

Dhoni

அப்படியே அவரைக் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸின் பக்கம் போனேன். ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் வேகமாகப் பந்தை த்ரோ செய்ய அதை வேகமாக அடித்துக்கொண்டிருந்தார் தோனி. நான் முரளி விஜய்யை நெருங்கும் நேரத்தில் எல்லோரும் என்னைப் பார்த்து கத்துகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே புரியாமல் சட்டென நான் திகைத்துப்பார்க்க, என் மூக்கை உரசியபடி, மைக்ரோ செகண்ட் இடைவெளியில் தோனி அடித்தப்பந்து கடந்து சென்றது. அங்கே இருந்த அத்தனைப் பேரும் அதிர்ந்துவிட்டார்கள். தோனி அருகில் ஓடிவந்தார். அவர் என்ன கேட்டார் என்பது நினைவில் இல்லை. 'ஆர் யூ ஓகே' எனக்கேட்டிருப்பார் என நினைக்கிறேன். தோளில் ஒரு தட்டுத்தட்டிவிட்டு மீண்டும் பயிற்சிக்கு சென்றுவிட்டார். தோனியை மிக மிக அருகில் பார்த்த முதல் த்ரில் தருணம் அதுதான்.

2010 முதல் 2015 வரை ஐபிஎல் போட்டிகளின்போது நடக்கும் ப்ரீ அண்ட் போஸ்ட் மேட்ச் செய்தியாளர் சந்திப்புகளைத் தவறவிடவேமாட்டேன். காரணம் தோனி. மேட்சுக்கு முந்தைய பேட்டிகளுக்கு சில நேரம் ஃப்ளெம்மிங் வருவார். ஆனால், போஸ்ட் மேட்ச் செய்தியாளர் சந்திப்பு, அதுவும் சென்னை தோற்றால் அன்று தோனிதான் பிரஸ் ரூமுக்குள் இருப்பார்.

தன்னுடைய இருக்கையில் வந்து உட்கார்ந்ததுமே தன் முன்னால் ரெகார்ட் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் செய்தியாளர்களின் போன்கள், வாய்ஸ் ரெகார்டர்களை அழகாக ஒழுங்குபடுத்துவார். புதிய மாடல் போன், ஸ்டைலான போன் கவர்கள் கண்ணில்பட்டால் அதை கையில் எடுத்து கொஞ்சநேரம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் எங்கே வாங்கியது, என்ன விலை என்றெல்லாம் விசாரிப்பார். எல்லா செய்தியாளர்களும் அந்த அறைக்குள் வந்துசேரும்வரை காத்திருப்பார். சில நிருபர்களின் பேரைச் சொல்லி 'அவர் இன்றுவரவில்லையா.. நல்லவேலை தப்பிச்சேன்' என்பார். தன்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் அவ்வளவு கூர்ந்து கவனிப்பார். என்ன மாதிரியான கேள்விகள் அவரை நோக்கி வரும் என்பதை முன்கூட்டியே கணித்துவைத்திருப்பார் என்பது அவர் அளிக்கும் பதில்களின் மூலம் புரியும்.

தோனி

''ஆட்டத்தின் 13-வது ஓவரில், முரளிதரன் ஓவரின் நான்காவது பந்தில், நீங்கள் மிட் கவரில் ஏன் ஃபீல்டரை நிறுத்தினீர்கள்'' என்றெல்லாம் சில கேள்விகள் வரும். சிரித்தபடியே, ''அப்போது அது சரியெனத் தோன்றியது செய்தேன். இப்போது அதை மறந்துவிட்டேன்'' என்பார். எல்லா கேள்விகளுக்குமே தோனியிடம் இருந்து பதில் வராது. சில கேள்விகளுக்கு எந்த ரியாக்‌ஷனுமே இல்லாமல் உட்கார்ந்திருப்பார். அப்படியானால் அடுத்தக் கேள்விக்குத்தாவ வேண்டும் என்று அர்த்தம். சில நேரங்களில் ''இந்த கேள்வியை நீங்க கேட்கலையே'' என்பார். சில நேரங்களில் தான் ஏன் அந்த முடிவை எடுத்தேன், எதற்காக எடுத்தேன் என விரிவாக விளக்குவார் என தோனியின் செய்தியாளர் சந்திப்புகள் எப்போதுமே விசேஷமானவை.

2011-ல் உலகக்கோப்பையை வென்றபிறகு, அதே ஆண்டு ஐபிஎல் கோப்பையும் சென்னை சூப்பர் கிங்ஸ் கைப்பற்றுகிறது. மே 28, 2011. இறுதிப்போட்டி சென்னையில்தான் நடந்தது. பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை வெற்றிபெறுகிறது. களத்தில் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்ததும் செய்தியாளர் அறையில் எல்லோரும் தோனியின் வருகைக்காக காத்திருக்கிறோம். நள்ளிரவு நெருங்கிய நேரத்தில் தோனி உள்ளே வந்தார். ஆனால், வந்தவர் கிரிக்கெட்டைப் பற்றியோ, அன்றைய வெற்றியைப்பற்றியோ, சென்னையின் தொடர் சாம்பியன்ஷிப்பைப் பற்றியோ பேசவில்லை. கால்பந்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அதே இரவில் இன்னும் சற்று நேரத்தில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி தொடங்கயிருந்தது. பார்சிலோனாவும், மான்செஸ்டர் யுனைட்டெட் அணியும் மோதப்போகின்றன. மான்செஸ்டர் அணியின் ரசிகரான தோனி, அன்றையப் போட்டியில் மான்செஸ்டர் அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள், மெஸ்ஸியை எப்படி சமாளிக்கவேண்டும் என்றெல்லாம் பேசிவிட்டு, ''நிறைய கேள்விகள் கேட்காம விட்டீங்கன்னா போய் ஃபைனல்ஸ் பார்ப்பேன்'' என்கிறார். அதுதான் தோனி. சில மணி நேரத்துக்கு முன்னால் தன் தலைமையில் சிஎஸ்கே சாம்பியன்ஷிப் வென்றதையெல்லாம் மறந்துவிட்டு கால்பந்து ஃபைனலைப் பார்க்கத் தயாராகிவிட்டார்.

தோனி அணிக்குள் வந்தது, கேப்டன் ஆனது, உலகக்கோப்பைகளை வென்றது என எல்லா கதைகளும் எல்லோருக்குமே தெரியும் என்பதால் அதைப்பற்றியெல்லாம் இங்கே நான் விரிவாக எழுதப்போவதில்லை. தோனியின் கரியரில் நான் பார்த்து வியந்த, கேட்டு வியந்த சில தருணங்களை மட்டும் பகிரலாம் என நினைக்கிறேன்.

2007-ல் டி20 போட்டிகளின் மீது பெரிய ஆர்வமோ, ஆதரவோ ரசிகர்களிடம் இருக்காது. சச்சின், டிராவிட், கங்குலி என இந்திய அணியின் சீனியர்களே இந்த டி20 ஃபார்மேட்டை 'இதெல்லாம் கிரிக்கெட்டே இல்லை' எனப்புறக்கணித்த காலம்தான் அது. இதனால் 2007-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைக்கான அணித்தேர்வில் இருந்து தாங்கள் விலகுவதாகவும், இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் சீனியர்கள் அறிவித்தார்கள். அதனால், சீனியர்கள் இல்லாத, புதுமுகங்கள் நிறைந்த இந்திய அணிக்கு தோனி தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேப்டனாக தோனி எதிர்கொண்ட முதல் தொடரே உலகக்கோப்பைதான்.

Dhoni

டிராவிட்டோ, டெண்டுல்கரோ தென்னாப்பிரிக்காவுக்குப் போகாதது தோனிக்கு வசதியாகிப்போனது. இல்லையென்றால் தோனியால் கடைசி ஓவரை ஹர்பஜன்சிங்கிற்கு பதிலாக, ஜோகிந்தர் ஷர்மாவிடம் கொடுத்திருக்கமுடியுமா எனத்தெரியவில்லை. கோப்பையை வென்று, டி20 என்பது கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம் என்பதை இந்திய கிரிக்கெட்டுக்கு உணர்த்தினார் தோனி. அதன்பிறகுதான் ஐபிஎல் போட்டிகளுக்கான விதை ஊன்றப்பட்டது.

2007 டி20 உலகக்கோப்பை முடிந்ததுமே ஒருநாள் அணிக்கும் கேப்டனாக்கப்பட்டார் தோனி. அப்போது இந்திய அணிக்குள் முன்னாள் கேப்டன்கள் சச்சின், கங்குலி, டிராவிட் என மூவருமே இருந்தனர். இந்தியாவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்தான் கேப்டனாக தோனிக்கு முதல் தொடர். பான்ட்டிங்தான் ஆஸ்திரேலியாவின் கேப்டன். இந்தியாவைக் குறிப்பாக, தோனியை ரொம்பவே டீஸ் செய்தார் பான்ட்டிங். ''நீங்களெல்லாம் ஒரு டீமா, நீயெல்லாம் ஒரு கேப்டனா'' என்கிற ரேஞ்சில்தான் பான்ட்டிங்கின் செயல்பாடுகள் இருக்கும். இந்திய மண்ணில் 4-2 என ஆஸ்திரேலியா அந்தத் தொடரை வென்றது. தோனியின் ஒன்டே கேப்டன்ஸி கரியர் தோல்வியோடு தொடங்கியது.

சச்சின், கங்குலி, டிராவிட் என சீனியர்கள் யாருமே அந்தத் தொடரில் ஃபார்மில் இல்லை. எந்த சீனியரும் தோனிக்கு கைகொடுக்கவில்லை. அந்தத் தொடரின் முடிவுகள்தான் தோனியைத் தனக்கென தனி அணியை உருவாக்கவேண்டும் என யோசிக்க வைத்திருக்கும். தனக்கான அணியை உருவாக்க ஆரம்பித்தார் தோனி.

Dhoni

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இந்தியா வந்த பாகிஸ்தான் அணிக்கான தொடரில் இருந்து டிராவிட் நீக்கப்பட்டார். அடுத்து ஆஸ்திரேலியாவுக்குப் போனது இந்தியா. டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக அணில் கும்ப்ளேவும், ஒருநாள் தொடருக்கு தோனியும் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்கள். டெஸ்ட் தொடரில் விளையாடிய கங்குலி, ஒருநாள் தொடரில் விளையாடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் தோனி. கங்குலியால் டாட் பால்கள் அதிகரிப்பதையும், அவரின் மோசமான ஃபீல்டிங்கையும் காரணம் காட்டினார் தோனி. ஒருநாள் அணியில் கங்குலி சேர்க்கப்படவில்லை. அத்தோடு கங்குலியின் கரியரும் முடிந்தது.

தன்னுடைய அணி, தனக்கான அணி என்கிற கம்பீரத்தோடு ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிரான அந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்குத் தலைமைத்தாங்கினார் தோனி. இந்தியாவில் தன்னையும், தன் அணியையும் மிகவும் இழிவாக நடத்திய பான்ட்டிங்கிற்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்பதே தோனியின் மனதில் இருந்திருக்கக்கூடும். அது அவரின் செயல்பாட்டில் தெரிந்தது. 2008 பிப்ரவரியில் தொடங்கியது அந்தத் தொடர். அப்போதைய ஆஸ்திரேலிய அணி என்பது தோல்வியை மிகவும் அவமானமாக நினைக்கும். அதுவும் அவர்களின் மண்ணில் தோற்பதை உச்சபட்ச அவமானமாகக் கருதுவார்கள். எதிர் அணியினரின் வெற்றியை அவர்களால் ஒரு வெற்றியாகவே கருதமுடியாது. ஏதோ அதிர்ஷ்டத்தில் ஜெயித்துவிட்டதாகவே நினைப்பார்கள். இந்த ஆட்டிட்யூடைத்தான் மாற்ற நினைத்தார் தோனி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி ஆஸ்திரேலியாவின் கோட்டையான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை அன்று சம்பவம் செய்ததது. ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடன், பான்ட்டிங், கிளார்க், சைமண்ட்ஸ், ஹஸ்ஸி என பவர்ஃபுல் பேட்ஸ்மேன்கள் பலர் இருந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய பெளலர்கள் 159 ரன்களுக்குள் சுருட்டி வீசினார்கள். ஶ்ரீசாந்த், இஷாந்த் ஷர்மா, இர்ஃபான் பதான் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களின் துணைகொண்டு ஆஸ்திரேலியாவின் கதையை முடித்திருப்பார் தோனி.

தோனி - ரோஹித் ஷர்மா

160 ரன் சேஸிங்கில் வெற்றியை நெருங்கும் தருணத்தில் ரோஹித் ஷர்மாவோடு களத்தில் நிற்பார் தோனி. வெற்றிக்கு இன்னும் 10 அல்லது 12 ரன்கள் மட்டுமே அடிக்கவேண்டியிருக்கும். அந்த நேரத்தில் திடீரென பெவிலியனை நோக்கி கிளவுஸ் வேண்டும் எனக் கேட்பார். இப்படிப்பட்ட நேரங்களில் பெவிலியனைப் பார்த்து கிளவுஸோ, தண்ணீரோ கேட்டால் ஏதோ தகவல் பெவிலியனுக்குப் போய் சேரவேண்டியிருக்கிறது என்று அர்த்தம். கிளவுஸோடு தன் அருகில் வந்தவரிடம் அந்த செய்தியை சொல்லி அனுப்பினார் தோனி. ''வெற்றிபெற்றதும், ஓடிவருவதோ, கட்டிப்பிடிப்பதோ, ஸ்டம்ப்புகளைத் தூக்குவதோ கூடாது. இதை மிக மிக சாதாரண வெற்றிபோல கடந்துபோகவேண்டும். யாரும் ஓவராகக் கொண்டாடக் கூடாது'' என்பதுதான் தோனி அன்று சொன்ன செய்தி. களத்தில் உடன் நிற்கும் ரோஹித் ஷர்மாவிடமும் அதையேதான் சொல்லி செய்யவைத்தார்.

தோனி இந்த செயல் மூலம் பான்ட்டிங்கிற்கு உணர்த்த விரும்பியது ஒன்றே ஒன்றுதான். 'நாங்கள் ஏதோ வீழ்த்த முடியாத அணியை வீழ்த்திவிடவில்லை. இது எதிர்பாராமல் கிடைத்தவெற்றியும் இல்லை. இனி நாங்கள் இப்படித்தான்' என்பதைத்தான் பான்ட்டிங்கிற்கு சொன்னார். எதிரணியினரின் மனதோடு மோதுவதுதான் தோனிக்கு பிடித்த விஷயம். தோனியின் செயல்களால் பான்ட்டிங் கடுப்பாகி, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகப் பல தவறான முடிவுகளை எடுத்தார். இந்தியா பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை அதுவும் பெஸ்ட் ஆஃப் த்ரீ ஃபைனல்ஸில் 2-0 என ஆஸ்திரேலியாவை வென்றது.

90-களுக்குப் பிறகு கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவன் என்பதால் அசாருதின்தான் நான் பார்த்த முதல் கேப்டன். அசாருதினிடம் வெற்றிக்கான வெறியோ, ஆக்ரோஷமோ, பரபரப்போ எதுவும் இருக்காது. 'ஜெயிச்சா ஓகே... தோற்றாலும் ஓகே' என்கிற ஆட்டிட்யூடில் அணியை வழிநடத்தும் வேறு மாதிரியான கூல் கேப்டன் அவர்.

தன்னைப்போலவே அணியில் விளையாடும் 11 பேரும் உயிரைக்கொடுக்கவேண்டும் என நினைப்பார் சச்சின் டெண்டுல்கர். அணிக்குள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ரோல் இருக்கிறது என்பதை உணரமாட்டார். ஶ்ரீநாத் 5 விக்கெட்டுகள் எடுப்பதோடு, அரை சதமும் அடிக்கவேண்டும் என நினைப்பார். அதனாலேயே அவரது கேப்டன்ஸி எடுபடவில்லை.

அசாருதின், சச்சின் ஆகியோரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட கேப்டனாக இருந்தார் கங்குலி. இளைஞர்களை அணிக்குள் கொண்டுவந்து வெற்றிகளை நோக்கி ஓடவைத்தார். ஆனால், அவர் அணிக்குள் ஒரு சிஇஓ மனநிலையில் இருப்பார். யாராவது தவறு செய்துவிட்டால் ஃபையரிங் லைனில் கொண்டுபோய் நிறுத்திவிடுவார்.

ராகுல் டிராவிட்டிடம் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசையிருக்கும், ஆனால் தெளிவான செயல்திட்டம் இருக்காது. கேப்டனாக இருந்த 2 ஆண்டு காலமும் அவரால் இந்திய அணியின் வீரர்களை ஒற்றை நோக்கத்தோடு செயல்படவைக்க முடியவில்லை.

Dhoni

அணில் கும்ப்ளே ஸ்கூல் பிடி வாத்தியார் மனநிலையில் இருந்ததாலேயே அவரால் கேப்டனாக நீடிக்கமுடியவில்லை. இங்கேதான் வித்தியாசமான கேப்டனாக இருந்தார் தோனி. அவரிடம் தெளிவான கேம் பிளானும், அணியினரை ஒன்றுபடுத்தும் செயல்திட்டமும், கிரிக்கெட்டைப் பற்றிய அதீத புரிதலும், பதற்றம் இல்லாத பக்குவமும் இருந்தது. அதுதான் அவரை இந்தியாவின் நம்பர் 1 கேப்டனாக்கியது. இந்திய அணியை டெஸ்ட், ஒருநாள், டி20 என எல்லா ஃபார்மேட்டிலும் நம்பர் 1 அணியாக்கியது.

தோனியின் ப்ளேயிங் லெவனை எல்லாம் யாராலும் கணிக்கமுடியாது. காயம் காரணமாக இந்த வீரர் இன்று விளையாடமாட்டார் என செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும். ஆனால், அந்தப் ப்ளேயரை மேட்சுக்கு முந்தைய பயிற்சியில் ஈடுபடவைத்திருப்பார் தோனி. ''ஓகே, அப்ப அந்தப் ப்ளேயர் இன்று விளையாடுகிறார்'' என்று எதிரணி கேப்டன் முடிவெடுத்து அதற்கேற்றபடி தன்னுடைய ப்ளேயிங் லெவனை தயாரித்து டாஸுக்கு வரும்போது அந்தப் ப்ளேயர் இல்லை என அதிர்ச்சிக்கொடுப்பார்.

2008-ல் இங்கிலாந்துடனான தொடர் ஆரம்பிக்கும் முன்பாக அவர் தேர்வு கமிட்டியில் ஆர்.பி.சிங்கிற்கு ஆதரவாகப் பேசிய விஷயங்கள் அடுத்தநாள் செய்தித்தாள்களில் வந்துவிட்டது. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தார் தோனி. ஃபேவரிட்டிஸம் செய்கிறார் என்று அவரைப்பற்றிய செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. அந்த சம்பவம்தான் செய்தியாளர்களை விட்டு அவரை விலகவைத்தது. செய்தியாளர்களிடம் ஃப்ரெண்ட்லியாகக்கூட கிரிக்கெட் பற்றிப் பேசுவதை முழுவதுமாக தவிர்க்க ஆரம்பித்தார் தோனி. அன்று முதல் இன்றுவரை செய்தியாளர்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருக்கிறார்.

Dhoni

ஓராண்டாக ஓய்வு முடிவை அறிவிக்காமலேயே நீட்டித்துக்கொண்டுபோன தோனி, இப்போது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ஓய்வை அறிவித்திருப்பதற்கும் ஒருவகையில் செய்தியாளர்கள்தான் காரணம். சென்னைக்கு ஐபிஎல் பயிற்சிக்காக வந்திருக்கும் தோனி, க்ரவுன் ப்ளாஸா (பார்க் ஷெரட்டன்) ஹோட்டலில் தங்கியிருக்கிறார். 'பயோசெக்யூர் பபுள்' என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களைத்தவிர இங்கே யாருக்கும் அனுமதி கிடையாது. அதேப்போல் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள்ளும் செய்தியாளர்கள் நுழைய முடியாது. ஐபிஎல் நடக்கப்போகும் துபாயிலும் கொரொனா சூழல் காரணமாக செய்தியாளர் சந்திப்புகள் கிடையாது என்பதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவர் எந்த செய்தியாளரையும் நேரடியாக சந்திக்கப்போவதில்லை. எந்த விளக்கமும் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் இல்லை என்பதுதான் இந்த நேரத்தில் அவர் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கக்கூடும். அவருக்குத் தன்னைப்பற்றிப் பேசுவதும், தன்னிலை விளக்கங்கள் கொடுப்பதும் எப்போதும் பிடிக்காது.

தோனியின் ப்ளேயிங் லெவனை மட்டுமல்ல அவரின் பர்சனல் முடிவுகளையும் யாராலும் கணிக்கமுடியாது. தன்னுடைய திருமணம் முதல் ஓய்வு வரை அத்தனையையும் யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் நிகழ்த்திவிட்டு, சத்தம் இல்லாமல் கடந்துசெல்வதுதான் தோனியின் ஸ்டைல். தோனிக்கு முன்மாதிரிகளும் இல்லை. பின்மாதிரிகளும் இருக்கப்போவதில்லை.


source https://sports.vikatan.com/cricket/why-did-dhoni-announce-his-retirement-now

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக