இலங்கையில் நிழல் உலக தாதாவாக இருந்தவர் அங்கொட லொக்கா என்கிற மதுமா சந்தன லசந்தா பெரேரா. அங்கு கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல், ரியல் எஸ்டேட் மாஃபியா என்று கேங்ஸ்டராக வலம் வந்தவர். ஆரம்பத்தில் ஆட்சியாளர்களின் துணையோடு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த லொக்கா, பிறகு அதே ஆட்சியாளர்களால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
Also Read: `கெட் அப் மாற்றம்; விஷம் கொடுத்து கொலை?’ - இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண வழக்கு மர்மம்
இதையடுத்து, அவர் போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார். இங்கு, சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, பெங்களூரு என்று பல இடங்களில் சுற்றியுள்ளார்.
தன்னை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, கெட் அப்பை மாற்றி பிரதீப்சிங் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருந்தார் அங்கொட லொக்கா. இதனிடையே, இந்தியாவில் அங்கொட லொக்கா விஷம் வைத்து கொல்லப்பட்டாதாக இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தொடர்ந்து விசாரித்ததில், கோவையில் கடந்த மாதம் பிரதீப்சிங் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதும், மதுரையில் அவரது உடல் எரியூட்டப்பட்ட தகவலும் வெளியாகின. போலீஸ் விசாரணையில், அது பிரதீப்சிங் இல்லை அங்கொட லொக்கா என்றும், போலி ஆதார் கார்டு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக லொக்காவுடன் இருந்த இலங்கை பெண் அமானி தான்ஜி, அவர்களுக்கு உதவிய மதுரை வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இது சர்வதேச வழக்கு என்பதால், சி.பி.சி.ஐ.டி போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
லொக்கா கொல்லப்பட்டாரா? என ஒருபக்கம் கேள்வி எழுந்துள்ள நிலையில், மறுபக்கம் அவரின் மரணத்தை இலங்கையில் உறுதிப்படுத்தவில்லை. லொக்காவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தி, மீண்டும் வேறு நபராக இலங்கை செல்லத் திட்டம் போட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், பிரேதபரிசோதனையில் எடுக்கப்பட்ட உடல்பாகங்களின் மாதிரிகள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, லொக்காவின் கேங்ஸ்டர் நெட்வொர்க் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோவையில் இருந்தபடியே அவர், இலங்கையில் தனது நெட்வொர்க்கை இயக்கியுள்ளார். லொக்கா, இலங்கையில் இல்லாவிடினும், அவரது கேங்ஸ்டர் நெட்வொர்க் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டது தொடர்பான செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளியாகி வந்தன.
ஒரு சொத்துத் தகராறில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கூட்டாளிகளை வாட்ஸ் ஆப் காலில் வழிநடத்தி ஒரு கொலையை அரங்கேற்றியுள்ளார். அதேபோல, போதைப் பொருள் நெட்வொர்க்கையும் அவர் ஆன்லைனில் தொடர்ந்துள்ளார்.
லொக்கா, இந்தியாவில் தலைமறைவாகி பல ஆண்டுகளாகியும், அவர் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கழுகு கடந்த மாதம்தான் மீட்கப்பட்டது. அந்தக் கழுகு சராசரியாக 15 கிலோ போதைப்பொருளை தூக்கி செல்லும் ஆற்றலைக் கொண்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின்போது, அங்குள்ள தனியார் நிறுவனங்களை மிரட்டி சில கேங்ஸ்டர்கள் கலெக்ஷன் வாங்கியுள்ளனர். அதில், அங்கொட லொக்காவின் நெட்வொர்க்கும் ஒன்று.
அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், லொக்கா நெட்வொர்க் தொடர்ந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சராசரியாக ரூ.25,000 முதல் ரூ.60 லட்சம் வரை வசூல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனை தொடர்பான விபரங்களையும் சி.பி.சிஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீஸாருடன் ரா உளவுப்பிரிவு அதிகாரிகளும் கோவையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 2 மாத கர்ப்பிணியாக இருந்த அமானி தான்ஜி, கருச்சிதைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை முடிந்த அவர் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுபோன்ற வெளிநாட்டு கைதிகளை பராமரிக்க, புழல் சிறையில் தனிப்பிரிவு உள்ளதால் தான்ஜி, அங்கு மாற்றப்பட்டார் என போலீஸார் கூறியுள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/srilanka-don-ran-his-network-over-online
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக