Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

`உங்களின் செல்போனுக்கு மெசேஜ் வந்திருக்கும்'- 8 தடவை ஏமாந்த மத்திய அரசு ஊழியர்!

சென்னையை அடுத்த ஆவடி, வீராபுரம், ஏ.கே.ஏ.நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (64). இவர் ஆவடியில் செயல்படும் கனரக வாகன தொழிற்சாலையில் (ஹெச்.வி.எப்) வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில் தனக்கு ஓய்வூதிய பணத்தை சேமித்து வைத்திருந்தார். கடந்த 4 - ம் தேதி மதியம் 2:00 மணியளவில் புஷ்பராஜின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

மோசடி

அதில் பேசியவர் தன்னை வங்கி அதிகாரி என இந்தியில் அறிமுகப்படுத்திக்கொண்டார். உடனே புஷ்பராஜும் இந்தியில் பதிலளித்துள்ளார். அப்போது வங்கி அதிகாரி போல பேசியவர், வங்கியிலிருந்து உங்களின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும். அந்த மெசேஜை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். எதற்கு என்று புஷ்பராஜ் கேட்டுள்ளார். உடனே உங்கள் வங்கி அக்கவுண்ட் அப்டேடுக்காக கேட்கிறோம் என்று வங்கி மேலாளர் போல பேசியவர் கூறியுள்ளார். `நீங்கள் மெசேஜ் சொல்லவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கை அப்டேட் செய்ய முடியாது. வங்கிக்குச் சென்றுதான் அப்டேட் செய்ய முடியும்’ என வங்கி மேலாளர் போல பேசியவர் கூறியுள்ளார். மேலும் அந்த நபர், புஷ்பராஜின் வங்கி அக்கவுண்ட் நம்பர், முகவரி என அனைத்து விவரங்களையும் சரியாகக் கூறியுள்ளார்.

Also Read: ஏ.டி.எம் கார்டு மோசடி... கமிஷன் ஆசையில் பணத்தை இழக்கும் அவலம்!

அதனால், வங்கி மேலாளர்தான் பேசுகிறார் என நம்பிய புஷ்பராஜும், தன்னுடைய செல்போன் நம்பருக்கு 8 தடவை வந்திருந்த ஓடிபி நம்பர்களை கூறினார். அதை குறித்துக் கொண்ட வங்கி மேலாளர் போல பேசியவர், இன்னும் சிறிது நேரத்தில் மெசேஜ் வரும் என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு புஷ்பராஜின் செல்போனுக்கு பணம் எடுக்கப்பட்டதாக தொடர்ந்து 8 மெசேஜ்கள் வந்தன. அதைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

வங்கி மோசடி

மொத்தம் 4.8 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. உடனே அது தொடர்பாக புகாரளிக்க புஷ்பராஜ் வங்கிக்குச் சென்றார். வங்கியில் உள்ளவர்களிடம் புஷ்பராஜ் விவரத்தைக் கூறியிருக்கிறார். தன்னுடைய செல்போன் நம்பருக்கு வந்த மெசேஜ்களையும் காண்பித்தார். அதைப்பார்த்த வங்கி ஊழியர்கள், புஷ்பராஜை யாரோ ஒருவர் ஏமாற்றி பணம் எடுத்திருப்பதை அவரிடம் விளக்கமாகக் கூறியதுடன் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி தெரிவித்தனர். இதையடுத்து புஷ்பராஜ் ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு புஷ்பராஜை ஏமாற்றியவரை தேடிவருகிறார்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சென்னையில் ஊரடங்கு காலக்கட்டத்தில் சைபர் க்ரைம் தொடர்பாக குற்றங்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன. வடமாநிலங்களைச் சேர்ந்த கும்பல், வங்கியிலிருந்து பேசுவதைப் போல போனில் பேசி ஓடிபி எண், ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு நம்பர்களை கேட்டு பணத்தை எடுப்பதை வாடிக்கையாக வைத்துவருகின்றனர். 10 போன்கால் செய்தால் ஒருவர் வடமாநில மோசடி கும்பலிடம் சிக்கிக் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே இந்தக் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும்.

சைபர் க்ரைம்

Also Read: திருநங்கைகளுடன் காதல்; நேவி ஆபீஸர்; சீட்டிங்! - தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி

இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பணத்தை ஏமாற்றிய பிறகு சிம் கார்டுகளை தூக்கி எரிந்து விடுகின்றனர். மேலும், ஏமாற்றிய பணத்தையும் பல வங்கி கணக்குகளுக்கு உடனே மாற்றிவிடுகின்றனர். வங்கி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, மோசடி கும்பல் பணத்தை மாற்றி வங்கி விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், இதில் நடைமுறைs சிக்கல்கள் உள்ளதால் பணம் மாற்றிய விவரங்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதற்குள் மோசடி கும்பலிடம் வேறு சிலர் சிக்கி ஏமாந்து விடுகின்றனர். வங்கி தரப்பில் எந்த வாடிக்கையாளர்களிடமும் ஓடிபி நம்பர், ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்பதில்லை என்று எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய பிறகும், ஒரு சிலர் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற போன் அழைப்பு வந்தால் அதைத் துண்டித்துவிட வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/retried-government-employee-lost-money-files-police-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக