இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
கொரோனா காரணமாக இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 12,984 வாக்குச்சாவடிகள் ஒட்டுமொத்தமாக 71 சதவிகித வாக்குகள் பதிவாகின. நேற்று காலை 7 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மதியம் 2 மணி முதல், முடிவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆரம்பம் முதலே, ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியிலேயே இருந்து வந்தது. தமிழர் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருந்து வந்தது. தற்போது ஒட்டுமொத்த முடிவுகளும் வெளியாகிவிட்டன.
மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சஜித் பிரேமதேசாவின் தலைமையில் போட்டியிட்ட, ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
Also Read: இலங்கையில் எம்.பி-க்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைபின் சார்பில் போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்துள்ளன. கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன.
ஒரு காலத்தில் இலங்கை அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்துவந்த, ஶ்ரீலங்கா சுதந்திரா கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல, வடக்கு மாகாண முன்னாள் முதல்வர், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கும் ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளன.
ராஜபக்சே தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்களைப் பெற இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்சே, வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு மகிந்த ராஜபக்சே, தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/srilanka-election-results-announced-rajapaksa-brothers-wins-landslide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக