Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

சென்னை: `நம்பி சொன்னேன்; முழுசா ஏமாத்திட்டாங்க...!' - கதறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

சென்னை கோட்டூர்புரம், எல்லையம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம் (65). இவர் டிஎன்பிஎஸ்சியில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. இவரின் செல்போனுக்கு 16.8.2020-ல் போன் கால் வந்து வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை வங்கி மேனேஜர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். அதை சதாசிவமும் முழுமையாக நம்பியுள்ளார். பின்னர் அந்த நபர், வழக்கம் போல உங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகிவிட்டது. அதனால் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.

மோசடி

அதனால், உங்க ஏடிஎம் கார்டில் உள்ள நம்பர்களை சொல்லுங்க என்று கூறியுள்ளார். அதைக்கேட்ட சதாசிவமும் ஏடிஎம்கார்டின் முன்பக்கம், பின்பக்கத்தில் உள்ள நம்பர்களைக் கூறியுள்ளார். அதன்பிறகு ஆதார் கார்டு நம்பர்களை அந்த நபர் கேட்டதும் அதையும் சதாசிவம் தெரிவித்துள்ளார். அடுத்து உங்களின் செல்போனுக்கு வரும் எஸ்எம்எஸ்களில் உள்ள நம்பர்களைச் சொல்லும்படி மர்மநபர் கூறியுள்ளார். அதையும் சதாசிவம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ்கள் தொடர்ச்சியாக செல்போனுக்கு வந்துள்ளன. அதைப்பார்த்து சதாசிவம் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடம் சதாசிவம் கூறியபோது, உங்களிடம் பேசியது வங்கி மேலாளர் அல்ல, வங்கி மோசடி கும்பல் என அவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு சதாசிவம், தான் ஏமாந்ததை உணர்ந்தார். பின்னர் அவர் தன்னுடைய செல்போனுக்கு வந்த எஸ்எம்எஸ்களோடு கோட்டூர்புரம் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறி புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து 1,03,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பட்டுள்ளார். புகாரின்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து வங்கி மோசடி கும்பலைத் தேடிவருகின்றனர்.

மோசடி

சதாசிவத்தின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்த மோசடி கும்பல் மீண்டும் அவரை 17-ம் தேதி காலை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அப்போது உங்கள் ஏடிஎம் கார்டு எக்ஸ்ப்ரியாகிவிட்டது, அதை ரீனுவல் செய்யணும், உங்கள் ஏடிஎம் கார்டு நம்பர்ஸை சொல்லு என்று கூறியுள்ளனர். அதைக்கேட்ட சதாசிவம், ஏன்டா இப்படி ஏமாத்துறீங்க என்று செல்போனிலேயே திட்டிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். மோசடி கும்பல் நினைத்தாலும் இனிமேல் அவரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. ஏனென்றால் அவரிடம் வங்கியில் பணம் இல்லை என்பது புதியதாக போன் செய்த மோசடி கும்பலுக்கு தெரியவில்லை என்பதுதான் ஏதார்த்தம்.

இதுகுறித்து சதாசிவம் கூறுகையில், ``எனக்கு வயதாகிவிட்டதால் பேங்கிலிருந்து மேனேஜர் பேசுவதாகக் கூறியதும் ஏடிஎம் கார்டின் முழுவிவரங்களையும் நம்பிச் சொன்னேன். ஆனால் என்னை முழுசா ஏமாத்திட்டாங்க" என்று கண்ணீர்மல்க கூறினார்.

ஓரே நாளில்...

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சதாசிவத்தை ஏமாற்றிய வங்கி மோசடி கும்பல், சென்னை அயனாவரம் பங்காரு தெருவில் குடியிருக்கும் சுகன்யா (25) என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது சுகன்யாவிடமும் அதே டயலாக்கைக் கூறி ஏடிஎம் கார்டு விவரத்தைக் கேட்டுள்ளது. வங்கியிலிருந்துதான் பேசுகிறார்கள் என்று நம்பிய சுகன்யாவும் ஏடிஎம் கார்டு விவரத்தைக் கூறியுள்ளார். இந்த போன் கால் அழைப்புக்கு பிறகு சுகன்யா ஏடிஎம் சென்டருக்கு சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

ஏடிஎம்

அப்போது சுகன்யாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரியவந்தது. என்னுடைய அக்கவுன்ட்டில் 70 ஆயிரம் ரூபாய் இருந்ததே, என்று யோசித்த சுகன்யா, வங்கிக்குச் சென்று விவரத்தைக் கேட்டார். அப்போதுதான் அவரின் வங்கி கணக்கிலிருந்த பணம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனால் சுகன்யாவும் அயனாவரம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதைப்போல சென்னை தரமணியைச் சேர்ந்த டாக்டர் லீலா ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கிலிருந்து 35 ஆயிரம் ரூபாயை வங்கி மோசடி கும்பல் நூதனமுறையில் எடுத்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``வங்கி மோசடி கும்பல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து மக்கள் ஏமாந்துவருகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த ஒரு நெட்வொர்க்தான் இந்த மோசடியில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில்கூட வேலூரில் இந்த மோசடி கும்பலின் ஆளில்லாத அலுவலகம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மோசடி கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துகொண்டுதான் வருகிறது. எனவே வங்கி தொடர்பான போன் அழைப்புகளை மக்கள் நம்ப வேண்டாம்" என்றனர்.

ஒரே நாளில் சென்னையில் மூன்று பேரிடம் வங்கி மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/bank-frauds-team-cheats-3-person-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக