புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்தவர் இரும்பொறை. இவரது மகள்கள் மாட்சிமை, உவகை. மாட்சிமை கம்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கிறார். உவகை 12ம் வகுப்பு படிக்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது பள்ளிக் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான், பள்ளிக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கொரோனா விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் சகோதரிகள் இருவரும் சேர்ந்து பனை விதைகளைச் சேகரிப்பதுடன், வயல்வெளிகளிலும், பொது இடங்களிலும், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளிலும் நடவு செய்து வருகின்றனர். அதோடு, வெளியூர்களுக்கும் பனைவிதைகளையும் அனுப்புகின்றனர்.
இதுபற்றி அவர்களிடம் பேசியபோது, ``2 வருஷத்துக்கு முன்னாடி அடிச்ச கஜா புயல்ல எல்லாருக்கும் மாதிரி எங்களுக்கும் நிறையச் சேதாரம். தோப்பிலிருந்த ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்திருச்சு. ஆனா, பனை மரங்களுக்கு மட்டும் எந்த பாதிப்பும் வரலை. இதுபத்தி அப்பாக்கிட்ட கேட்கும்போது தான், "தென்னைமரத்தைச் சுத்திலும் நாம பனை மரங்களை நட்டு வச்சிருக்கலாம்.
அப்படி வச்சிருந்த இன்னைக்கு நம்மளோட பல தென்னைமரங்களைக் காப்பாத்தி இருக்கலாம்" அப்படின்னு சொன்னாரு. அப்பவே, பனை மரங்களை நாம வளர்க்கலாம்னு ஐடியா வந்திருச்சு. அதுக்கு இந்த கொரோனா காலம் ரொம்பவே உதவியாக இருக்கு. முன்னாடி எல்லாம் வரப்பு எல்லையாக, வயல்வெளிகளின் ஓரம் முழுவதும் பனைமரங்களாகத் தான் இருக்கும். நடுவுல பலரும் வெட்டி அழிச்சிட்டாங்க.
அரிதாகிக்கிட்டு வருது. நம்ம வயல் முழுவதும் பனை மரங்களை நடவு செய்யணும்னு தான் மொதல்ல பனை விதைகள் சேகரிப்பில் இறங்கினோம். பனம்பழத்திலிருந்து விதைகளைப் பிரித்து எடுத்து தற்போது நடவு செய்யும் பணியில் ஈடுபட்டோம். எங்கள் வயல்வெளிகள் எல்லாம் நட்டது போக உறவினர்கள் சிலருக்கும் கொடுத்தோம்.
ஊராட்சி உதவியோடு, நீர் நிலைகளில் பனை விதைகளை நடவு செய்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கேட்க, பனை விதை சேகரிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். தற்போது வெளியூர்களுக்கும் பனைவிதைகளை அனுப்பி வருகிறோம்" என்கின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/sisters-collecting-palm-seeds-in-pudukkottai-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக