Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

ஸ்டெர்லைட்: `மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி!’ - தூத்துக்குடியில் கொண்டாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாளான கடந்த மே 22-ம் தேதி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் பேரணியாகச் சென்றபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மே 28-ம் தேதி தமிழக அரசால் சீல் வைத்து மூடப்பட்டது. இதை எதிர்த்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

ஸ்டெர்லைட் ஆலை

இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழு,``ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை" என தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், ``ஆலையை மீண்டும் திறக்கலாம்" என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல், ஆலையைத் திறக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

Also Read: `மூடப்பட்ட ஆலை சார்பில் நிவாரணம்; தன்னார்வலர்கள் மிரட்டல்!’- ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் புகார்

இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு வேதாந்தா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம்

இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், ``ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்ததுடன், இந்தியாவின் தாமிரச் சந்தையை சீனா கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இதற்கிடையில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, 38 நாள்கள் இருதரப்பு வாதங்களையும் கேட்டது.

பின்னர், கடந்த ஜனவரி மாதத்தில் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல், வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். இதையொட்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, மடத்தூர் விலக்கு, 3-வது மைல் மேம்பாலம் மற்றும் போராட்டம் நடைபெற்ற கிராமங்களில் சுமார் 1,100 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்

``ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது. ஆலை திறப்பதற்கான தடை தொடரும்" என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற நிதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, 815 பக்கத் தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் கைதட்டி தீர்ப்பினை வரவேற்றனர். தீர்ப்பு குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

Also Read: `தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்’ - உயர் நீதிமன்றம் #NowAtVikatan

``மண்ணையும் சுற்றுச்சூழலையும் நச்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 28 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். கடந்த 2018 மே 22-ம் தேதி 13 உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எக்காரணம் கொண்டும் ஆலை திறக்கக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் விருப்பம். தற்போது மக்களின் போராட்டங்களுக்கும் நிலைப்பாட்டிற்கும் மதிப்பளிக்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆலை தரப்பு உச்சநீதிமன்றம் சென்றாலும், தமிழக அரசு தொடர்ந்து தனது கொள்கை முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்" என்றார். தீர்ப்பை வரவேற்கும் வகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/anti-sterlite-movement-welcomes-madras-hc-verdict

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக