Ad

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

கொரோனா:`வெளியே வந்து சாப்பிடுறாங்க; டீ குடிச்சுட்டு போறாங்க!' - நோயாளிகளால் பதறும் திருச்சி

``கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்கள் மருத்துவமனையின் எதிரே உள்ள கடையில் சுதந்திரமாக டீ குடித்துவிட்டும் சாப்பிட்டுவிட்டும் செல்கிறார்கள். இதனை மருத்துவமனை தரப்பில் பலமுறை அறிவுறுத்தினாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை’’ என்று பொதுமக்கள் நிர்வாகத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையை எதிர்த்து போராட்டம்

திருச்சி திருவானைக்கோவில் அருகே வெங்கடேஸ்வரா என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகள், மருத்துவமனையை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள கடைகளில் அமர்ந்து சாவகாசமாக டீ குடித்துவிட்டு மற்றும் சாப்பாடு சாப்பிட்டுவிட்டுச் செல்வதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகிறார்கள். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பிடம் பலமுறை அறிவுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆகியோர் சேர்ந்து மருத்துவமனையில் பொறுப்பற்ற தனத்தைக் கண்டித்து முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்.

Also Read: கொரோனா: `என்னையே உதாரணமாகக் காட்டுகிறேன்!’ இளம் பெண் மருத்துவரின் நம்பிக்கை வரிகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தரப்பில் பேசினோம்.``திருச்சி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை இந்த மருத்துவமனையில்தான் அனுமதிக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்காமல் மாலை மற்றும் இரவு நேரங்களில் சுதந்திரமாக மருத்துவமனையின் எதிரே உள்ள டீ கடையில் டீ குடிக்க வருகிறார்கள்.

கொரோனா நோயாளிகள்

சுதந்திரமாக வெளியில் உலாவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களால், எங்கள் குடும்பத்திற்குப் பாதிக்கும் என்று மருத்துவமனை தரப்பில் சொன்னால், அவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்வதில்லை. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்.

Also Read: தஞ்சை: `கொரோனா வார்டில் பிறந்தநாள் கேக்; மறக்க முடியாத நாள்!’ - நெகிழ வைத்த கலெக்டர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதை மருத்துவமனையில் உள்ள சிசிடிவி புட்டேஜ் பார்த்துவிட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சென்றால் போலீஸார் வழக்கு பதிவு செய்வார்கள் என்று பயப்படுவார்கள். இவர்கள் நடவடிக்கையைப் பார்த்து மற்ற மாவட்டத்து போலீஸாரும் நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றனர்.

மருத்துவமனையில் போலீஸார்

தகவலறிந்த போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். `நோயாளிகளை வெளியேற்றி வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவோ, புதிய அட்மிஷன் அனுமதிக்கக் கூடாது என்று காவல்துறையாகிய நாங்கள் உத்தரவிட முடியாது. உங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் சொல்லுங்கள். அவர் நடவடிக்கை எடுப்பார்’ என்று அவர்களிடம் சமரசம் பேசி போராட்டத்தைக் கலைத்தனர்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/corona-patients-freely-surfing-outside-hospital-allges-trichy-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக