Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

பெரம்பலூர்:`கல்பனா சாவ்லா விருது; கிராம மக்களின் உற்சாக வரவேற்பு!’ - நெகிழ்ந்த வீரமங்கைகள்

கல்பனா சாவ்லா விருது பெற்றுவந்த மூன்று பெண்மணிகளுக்குக் கிராம மக்கள் ஒன்றிணைந்து மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

உயிரிழந்த இளைஞர்கள்

என்ன செய்தார்கள் இந்த பெண்மணிகள்?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ளது கொட்டரை நீர்த்தேக்கம். இப்பகுதியிலுள்ள மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்காக அப்பகுதியில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், அந்தப் பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற ரஞ்சித், செந்தில்வேலன் கார்த்திக், பவித்ரன் நால்வரும் அந்த நீர்த்தேக்கத்துக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால், நீர்த்தேக்கத்தில் குளிக்காமல், சுமார் 10 அடி ஆழத்துக்கும் மேற்பட்ட பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

மேள தாளங்களுடன் வரவேற்பு

அப்போது அந்த ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்குப் போராடினர். அங்குத் துணி துவைத்துக்கொண்டிருந்த, ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவல்லி ஆகிய மூன்று பெண்களும் அந்தக் காட்சியைக் கண்டதும் ஓடிவந்து, ஆற்றில் இறங்கி எதையும் யோசிக்காமல் புடவையை கயிறாக்கி தண்ணீரில் வீசினர். இதில், செந்தில்வேலனும் கார்த்திக்கும் உயிர் பிழைத்தனர்.

கிராம மக்கள்

பவித்ரன், ரஞ்சித் தண்ணீரினுள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்ட இந்த மூன்று பெண்களுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்ததோடு மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்தியதோடு அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருதுக்கும் பரிந்துரை செய்தார்.

இவர்களது வீரதீரச் செயலைப் பாராட்டி (ஆக.15) சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த பெண்மணிகளுக்கு `கல்பனா சாவ்லா’ விருதை வழங்கி கவுரவித்தார்.

விருது பெற்ற பெண்கள்

இதையடுத்து விருது பெற்று சொந்த ஊர் திரும்பிய மூவருக்கும், ஆதனூர் கிராம மக்கள் மேளதாளம் முழங்க, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கவுரவித்தனர்.

கல்பனா சாவ்லா விருது பெற்ற செந்தமிழ் செல்வியிடம் பேசினோம். ``இவ்விருதிணை பெறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் சாதாரணமாகத் துணி துவைத்துக்கொண்டிருந்த நேரத்தில் இளைஞர்கள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த போது எங்களால் எப்படிக் காப்பாற்றாமல் இருக்கமுடியும். நாங்களும் ஒரு தாய் தானே. இதே எங்களது பிள்ளைகள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தால் நாங்கள் காப்பாற்றாமல் சும்மா இருந்திருப்போமா. எங்களது பிள்ளைகளாக நினைத்துத் தான் காப்பாற்றினோம்.

கொட்டரை நீர்த்தேக்கம்

நாங்கள் சாதாரணமாக நினைத்துத் தான் காப்பாற்றினோம்.எங்களது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் பேஸ்புக், வாட்ஸ்அப்ல இந்த செய்தியைப் போட்ட பிறகு தான் எல்லோருக்கும் தெரியவந்தது. எங்களை இந்த அளவிற்குக் கொண்டு வந்த ஊர்மக்களுக்கும் மீடியாக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்களை உயர்வாகப் போற்றும் இந்த சமுகத்தில் எங்களைப் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். என்பதனை நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது முக மலர்ச்சியோடு” பேசினார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/kalpana-chawla-award-winning-women-was-welcomed-by-the-village-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக