Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திருவள்ளூர்: `என் கண் முன்னாலே அவனைக் கொண்டு சென்றனர்!' - ரவுடி கொலையால் கதறிய தந்தை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ரவுடி மாதவனின் தலையையும் புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தைலமரத்தோப்பில் மாதவனின் தலையில்லாத சடலத்தையும் சிப்காட் போலீஸார் கைப்பற்றினர். பின்னர் மாதவனின் சடலம், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தக் கொடூர கொலை குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

ரவுடி மாதவனின் சடலம்

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், ``கஞ்சா விற்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பழிக்கு பழியாக கொலை சம்பவங்கள் கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் பகுதியில் நடந்து வருகின்றன. கொலை செய்யப்பட்ட ரவுடி மாதவனும் கஞ்சா விற்பனை செய்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி கும்மிடிப்பூண்டி ம.பொ.சி.நகரைச் சேர்ந்த ஷாஜகான் (28) என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரின் சடலம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் புதைக்கப்பட்டது. இந்த வழக்கில் விமல் (22), சதீஷ்குமார் (21) உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய அருகே கல்லூரி மாணவர் ஆகாஷ் (18), விமல் (22), சதீஷ்குமார் (21) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல், மூன்று பேரையும் வெட்டிக் கொலை செய்தது. ஷாஜகான் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க இந்தக் கொலை நடந்தது விசாரணையில் தெரியவந்தது.

மூன்று பேர் கொலை வழக்கில் ரவுடி மாதவன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாதவன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த மாதவன், கடந்த மே மாதம் 8-ம் தேதி கும்மிடிப்பூண்டி காராமணிமேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (35) என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி ஜாமீனில் மாதவன், சிறையிலிருந்து வெளியில் வந்தார்.

தண்டவாளத்தில் ரவுடியின் தலை

இந்தநிலையில்தான் மாதவன், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் தலை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நடந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்று பேர் கொலைக்கு பழிக்குப் பழிவாங்கவே மாதவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் மாதவன் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதனால் பைக்கின் பதிவு நம்பர்கள் அடிப்படையில் விசாரித்து வருகிறோம்" என்றார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஆத்துப்பாக்கம் கிராமம், ஆண்டாள் தெருவைச் சேர்ந்த மாதவனின் தந்தை சங்கர், சிப்காட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் வசித்துக் கொண்டிருக்கிறேன். எனது மகன் மாதவன் (25). கடந்த 15-ம் தேதி மாலை 5 மணியளவில் எங்கள் ஊரில் உள்ள ஆலமரம் அருகில் விளையாடிவிட்டு வருவதாக தெரிவித்து சென்ற மாதவன், பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் 7 மணியளவில் மாதவனின் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அவர் என்னிடம் நண்பர்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

எப்ஐஆர்

அதைத் தொடர்ந்து நான் இரவு 7.45 மணியளவில் ஆத்துப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எனது வீட்டை நோக்கி சென்றபொழுது திரௌபதியம்மன் கோயில் அருகில் ரோட்டில் பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 4 பேர்கள் 2 பைக்கில் சென்றனர். ஒரு பைக்கின் நடுவில் எனது மகனை உட்கார வைத்து கொண்டு வேகமாக செல்வதை பார்த்தேன். உடனே நான், மாதவனுக்கு போன் செய்தேன். அப்போது அவர் என்னிடம், `இதோ வந்துவிடுகிறேன்’ என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாங்கள் போன் செய்து பார்த்ததில் மாதவனின் செல்போன் அனைத்து வைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பதறி போய் நாங்கள் அக்கம் பக்கம் தேடினோம். கடந்த 16-ம் தேதி காலை 8 மணியளவில் எனது மகன் மாதவனின் சடலம் கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தைலமரத்தோப்பில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தலை மட்டும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது. எனது மகனை பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மாதவனின் உடல் முழுக்க பல இடங்களில் மிகவும் கொடூரமாக துண்டு, துண்டாக கண்முடித்தனமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

ரவுடி மாதவன்

Also Read: திருவள்ளூர்: `தண்டவாளத்தில் ரவுடி தலை; தோப்பில் சடலம்' - மாணவன் கொலைக்குப் பழிக்குப் பழி?

சடலத்தை மட்டும் தைல தோப்பில் போட்டுவிட்டு தலையை வெட்டி எடுத்து ரயில்வே தண்டவாளத்தில் அருகில் வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். என் மகன் மீது இரண்டு கொலை வழக்குகள் இருப்பதால் அதன் முன்விரோத காரணமாக மாதவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். எனவே தாங்கள் என் மகனை கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சடலத்தை என்னிடம் ஒப்படைக்கும்படி பணிவுடன் கேட்டு கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஐபிசி 302-ன் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்.

கொலை செய்யப்பட்ட மாதவன்

ஊரடங்கில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. ஆந்திர எல்லைப்பகுதியான கும்மிடிப்பூண்டியில் தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடந்துவருகிறது. கஞ்சா மோதலில் தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் நடந்துவருவது திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.



source https://www.vikatan.com/news/crime/gummidipoondi-rowdy-madhavan-murdered

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக