Ad

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

வேலூர்: `சிக்கிய முதியவர்; சிதைத்த சிறுவர்கள்!’ -உறைய வைக்கும் பாலியல் குற்றங்கள்

வேலூர் காட்பாடிப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று காலை திடீரென கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். அப்பகுதி மக்கள், சிறுமியைப் பத்திரமாக மீட்டு காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், சிறுமியின் பெற்றோர் பழைய பொருள்களைச் சேகரிக்கும் தொழில் செய்கிறார்கள். இந்த சிறுமியுடன் சேர்த்து மொத்தம் 4 பெண் பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

காட்பாடி காவல் நிலையம்

இவர்தான் வீட்டுக்கு மூத்தவர். தாயும், தந்தையும் மதுவுக்கு அடிமையானதால், உடன் பிறந்த தங்கைகளையும், தம்பிகளையும் அந்தச் சிறுமிதான் பாதுகாத்துவருகிறார். இதற்காக தன்னுடைய பள்ளிப் படிப்பையும் இடையில் நிறுத்திவிட்டார். இந்நிலையில், பெற்றோர் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்துள்ளதால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி விபரீத முடிவுக்குத் தள்ளப்பட்டது தெரியவந்தது.

போலீஸார், சிறுமியின் தந்தையைக் காவல் நிலையம் வரவழைத்து அறிவுரை கூறி கடுமையாக எச்சரித்தனர். பின்னர், சிறுமியை மீட்டு சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகிகள் மூலம் அரசு காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர். இந்த சிறுமியின் தங்கை, தம்பிகளையும் அரசு காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை சமூக நலத்துறையினர் மேற்கொண்டுவருகிறார்கள்.

தாக்கப்பட்ட ஜோசப்

காட்பாடி வள்ளிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்ற 65 வயது முதியவர் டெய்லர் கடை வைத்துள்ளார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு தையல் பயிற்சி கொடுக்கிறார். நேற்று அந்தக் கடைக்கு வந்த 12 வயது சிறுமிக்கு ஜோசப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து ஜோசப்பை சரமாரியாக அடித்து உதைத்தனர். பலத்த காயமடைந்த அவரை காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் ஜோசப்பிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Also Read: ``அடிமைகள்போல் வேலை... பாலியல் தொல்லை..." - அலறும் ஊர்க்காவல் படையினர்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில், வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது. கரு வளர்ச்சியடைந்த காரணத்தினால், மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிறுமிக்குத் தொடர்ந்து மகப்பேறு சிகிச்சை கொடுக்கப்பட்டது.

Representational Image

இந்த நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர் பெண் குழந்தைப் பிறந்தது. இதுகுறித்து, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சிறுமியை ஏமாற்றி தவறான உறவு வைத்துள்ளனர்.

இதனால், சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்தது. சிறுவர்கள் இரண்டு பேரையும், இந்த கொடூர சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த 43 வயது பெண்ணையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரைத் தீவிரமாக தேடி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/sexual-harassment-complaints-raised-in-vellore-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக