பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 900 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டங்களுக்கு பின் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, `தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதில் மக்கள் சிறப்படுகிறார்களே...? என்ற கேள்விக்கு ,``இ-பாஸ் வழங்க இன்னொரு குழு அமைக்கப்படும். இனி கூடுதலாக பாஸ் வழங்கப்படும். மக்கள் தேவையில்லாமால் வெளியூர் செல்லக்கூடாது என்பதற்குத்தான் கட்டுப்பாடுகள் விடுத்துள்ளோம். அதில், ஊழலுக்கு வழி ஏற்ப்படக்கூடாது என்பதற்காகத்தான் இன்னொரு குழு அமைக்கவுள்ளோம்'' என்று பதிலளித்தார்.
மேலும்,''தமிழகத்தில் அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் பாதிப்பு குறைந்துள்ளது'' என்றும் அவர் கூறினார்.
அவரிடம், `தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதாக கூறுகிறீர்கள், ஆனால், கொரோனா பாதிப்புகளையும், மரணங்களையும் அரசு குறைத்து சொல்வதாக எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளதே?'' என்று கேள்வி எழுப்பினோம்.
அதற்கு, ``எதிர்க்கட்சிகள் எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. எத்தனை பேர் பாதிப்பு, எத்தனை பேர் மரணம் என்பதை தினமும் அறிவிக்கிறோம். இதில், மறைக்கவேண்டிய அவசியமில்லை. இதனால் அரசுக்கு என்ன லாபம்? வேறு நோய்களால் இறந்தவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால், அவர்களின் மரணங்கள் பின்பு சேர்த்து அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் குறை சொல்லத்தான் செய்வார்கள். இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்வது தமிழகத்தில்தான். அதனால்தான் பாதிப்புகளைக் கண்டறிந்து உடனே சிகிச்சை அளிக்கிறோம். இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் பாராட்டமாட்டார்கள்'' என்றார் ஆவேசமாக.
கொரோனா பாதிப்பு குறைத்து சொல்லப்படுகிறதா என்பது தொடர்பான கேள்விகளையே செய்தியாளர்கள் தொடர்ந்து எழுப்பியதால், சிறிது நேரத்திலயே செய்தியாளர் சந்திப்பை, நன்றி கூறி முடித்துவிட்டு அவர் கிளம்பினார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-speaks-about-corona-deaths-in-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக