Ad

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஈரோடு: `ராணுவத்தினர் எது சாப்பிட்டாலும் இலவசம்!’ - அசத்தும் பேக்கரி உரிமையாளர்

வெயில், மழை, பனி எனப் பலவிதமான பருவ காலங்களிலும் அர்ப்பணிப்போடு நாட்டுக்குச் சேவை செய்பவர்கள் ராணுவ வீரர்கள். நம் ராணுவ வீரர்கள் எதிரி நாட்டினரை சுட்டு வீழ்த்தினால் பேப்பரில் படித்து பெருமைப்படுகிறோம். நம்மைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு இதைவிட வேறெதுவும் நம்மால் செய்ய முடிவதில்லை. ஆனால், ராணுவத்தினருக்காக ஈரோட்டைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் அசோகன் என்பவர் செய்து வரும் செயல் நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

பேக்கரி உரிமையாளர் அசோகன்

ஈரோடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பகுதியில் ‘விஜயலக்‌ஷ்மி ஐயங்கார் பேக்கரி’ என்ற பெயரில் மூன்று பேக்கரி கடைகளை நடத்தி வருகிறார் அசோகன். இந்த மூன்று பேக்கரியிலும் `ராணுவ வீரர்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளுக்கும் பணம் பெறப்பட மாட்டாது. இலவசமாக வழங்கப்படும். நமது தாய் நாட்டுக்கு நீங்கள் செய்யும் அர்ப்பணிப்புக்கு எனது சிறிய அன்பளிப்பு’ என பேனர் வைத்து அசத்தியிருக்கிறார். அசோகனின் இந்தச் செயலுக்கு பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

பேக்கரி உரிமையாளர் அசோகன்

அசோகனை நேரில் சந்தித்துப் பேசினோம். “என் சொந்த ஊர் காரைக்குடிங்க. நான் சாதாரணமான ஏழ்மையான குடும்பத்துல தான் பிறந்தேன். செங்கப்பள்ளிக்கு வந்து செட்டிலாகி 7 வருஷம் ஆச்சு. இங்க என் பொண்டாட்டியோட தங்கச் செயினை அடகு வச்சி சின்னதா ஒரு பெட்டிக் கடை ஆரம்பிச்சேன். தினமும் 500 ரூபா கிடைக்கும். இன்னைக்கு என்னோட உழைப்பினால 3 பேக்கரிக்கு ஓனரா இருக்கேன். நம்ம குடும்பம் நல்லா இருக்கணும்னு நாம உழைக்கிறோம். ஆனால், எல்லா குடும்பங்களும் பாதுகாப்பா இருக்கணும்னு ராணுவ வீரர்கள் குளிர், மழையைத் தாங்கிகிட்டு காவலுக்கு நிக்குறாங்க. அதனால, எப்பவும் அவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சேன்” என்றார்.

பேக்கரி உரிமையாளர் அசோகன்

தொடர்ந்தவர், “புல்வமா தாக்குதல்ல நம்ம ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தது என் மனசை ரொம்ப பாதிச்சிடுச்சு. நாட்டுக்காகத் தன்னோட குடும்பத்துல இருந்து ஒரு உயிரைக் கொடுத்த அந்த 40 குடும்பங்களுக்கு நேரில் போய் ஒரு ஆறுதல்கூட சொல்ல முடியலைன்னு வருத்தப்பட்டேன். ராணுவ வீரர்கள் மாதிரி நாட்டுக்கு நம்மால முடிஞ்ச எதையும் செய்ய முடியலைன்னு ஒரு குற்ற உணர்ச்சி வேற உருவாகிடுச்சு. சரி, நாட்டை பாதுகாக்குறவங்களுக்காச்சும் எதையாவது செய்யலாமேன்னு தான் இந்த யோசனையைச் செயல்படுத்தினேன். இதுக்கு இவ்ளோ வரவேற்பு வரும்னு நான் நினைச்சுகூட பார்க்கலை.

Also Read: `வாழ்க்கைத் துணை கிடைப்பதில் சிக்கல்! - ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக மேட்ரிமோனியல் இணையதளம் #ITBP #NowAtVikatan

“கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல இதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். என் தொழில் இருக்குறவரைக்கும் இப்படி செய்யலாமுன்னு இருக்கேன். இதைப் பார்த்து என் நண்பர்கள் சிலரும், அவங்களால முடிஞ்ச உதவியை மற்றவங்களுக்கு செஞ்சுக்கிட்டு வர்றேன்னு சொல்றாங்க. அது கேக்குறப்ப ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. என் கடைக்கு வர்றவங்க மட்டுமல்லாம, போன்லயும் கூப்பிட்டு பாராட்டுறாங்க. நிறைய ராணுவ வீரர்கள் வாட்ஸப்ல பார்த்தேன்னு சொல்லி நெகிழ்ச்சியா பேசுறாங்க. மனசுக்கு அவ்ளோ திருப்திங்க” என்றார் அசோகன்!



source https://www.vikatan.com/government-and-politics/food/free-foods-for-army-peoples-in-erode-bakery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக