Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

இன்று டாஸ்மாக் திறப்பு... சிக்கலில் வாடகைக் கட்டடங்களில் உள்ள கடைகள்?

சென்னை அடுத்த மதுரவாயல் ஏரியாவில் டாஸ்மாக் கடைக்கு அருகே பகிரங்கமாகக் கூடுதல் விலைக்கு சரக்கு விற்று வந்த கோஷ்டியைப் பற்றி வீடியோ ஆதாரத்துடன் விகடன் யூ டியூப் சேனல், விகடன்.காம், ஜூனியர் விகடன்... என அனைத்திலும் செய்தி வெளியிட்டோம். அதன் பிறகும், ஃபாலோ அப் செய்தோம். ஆனால், மது தொடர்ந்து விற்பனை கனஜோராக நடந்துகொண்டிருந்தது. போலீஸிடம் சொன்னோம்; ``ஏதோ ஒன்றிரண்டு இருந்தால் ஆக்ஷன் எடுக்கலாம். தெருவுக்கு தெரு ஏகப்பட்டபேர் இந்த பிஸினஸில் ஈடுபட்டிருக்கிறார்கள். அனைவரையும் பிடிக்கமுடியுமா?" எனக் கேள்வி கேட்டு அதிர்ச்சியளித்தனர்.

மது பாட்டில்கள்

சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குள், 750 கடைகளில் 640 கடைகளை தற்போது திறக்க உத்தரவிட்டுள்ளனர். இவை அனைத்தும் கடந்த 145 நாட்களாக மூடப்பட்டுகிடந்தன. இவற்றுக்கு சராசரியாக தினம் ஒன்றுக்கு 12 கோடி; சனி, ஞாயிறு நாட்களில் 15 கோடி ரூபாய் வருமானம் வரும். அந்த வகையில், இதுவரை சுமார் 2,000 கோடி ரூபாய் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நஷ்டம். ஆனால், சென்னையைச் சேர்ந்த சிலர் கூடுதல் விலை வைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஜாக்பாட் லாபம் பார்த்துவிட்டார்கள்.

Also Read: போலீஸ் ஒத்துழைப்போடு நடக்கும் Tasmac கொள்ளை! Black market ராஜ்ஜியம்! | Tasmac Sting

சென்னையைப் பொறுத்தவரையில், சரக்கு கிடைக்கவில்லை என்கிற பிரச்னையே இல்லை. பாட்டிலுக்குக் கூடுதலாக ரூ. 200, ரூ. 300 அதிகம் கொடுத்து குடிமகன்கள் வாங்கி குடித்தனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், ரௌடிகள் அரசின் டாஸ்மாக் திறப்பு முடிவால் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. அங்கே போய் சரக்குகளை வாங்கி வந்து பாட்டிலுக்கு ரூ.200, ரூ.300 என கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். பள்ளி, கல்லூரிகள் லீவு என்பதால், போதை பழக்கம் உள்ள மாணவர்களை கொக்கி போட்டு இழுத்து கூரியர்களாக உள்ளூர் ரௌடிகள் பயன்படுத்தி வந்தனர். சரக்கு வாங்கி வருவது, டெலிவரி செய்வது... என்று திருட்டுத்தனமாக சரக்குகளை விற்று வந்தனர். இவர்கள் மத்தியில் எல்லை பிரித்து கள்ளச் சந்தையில் மதுபாட்டில்களை விற்பது தொடர்பாக சண்டைகள் நடந்து வந்தன. சென்னை தண்டையார்பேட்டை ஏரியாவில் ஒரு லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களைக் கள்ளச்சந்தையில் மதன் என்பவர் விற்றுவந்தாராம்.

டாஸ்மாக்

இதைப்பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்.கே. நகர் பகுதியின் துணைச் செயலாளர் கேசவன் என்பவர் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதனால், கோபமான மதன் கோஷ்டியினர், கேசவனை அரிவாளால் வெட்டிக் கொன்றனர். இதுமாதிரி கள்ளச்சந்தையில் விற்பனையில் கோஷ்டி மோதல் கொலை வரையில் சென்றதையெல்லாம் தொகுத்து போலீஸார் தரப்பில் அரசு மேலிடத்துக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. சென்னையை சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்க... மாநகரில் மட்டும் பூட்டியிருப்பதால் கள்ளச் சந்தையில் சமூக விரோதிகள் அட்டகாசம் செய்கின்றனர். இதைத் தடுக்க, சென்னையிலும் விநாயகர் சதுர்த்திக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளை திறந்துவிடலாம் எனறு சிபாரிசு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், அரசு தரப்பில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நேரத்தில் எக்கசக்கமாக மதுபாட்டில்கள் விற்கும் என்பதால்தான் விநாயகர் சதுர்த்திக்கு முன்பே கடைகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

சென்னையில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பரவல் சென்னையில் தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது... இதையெல்லாம் எந்த குடி நோயாளியாவது கடைபிடிப்பாரா? இந்தக் கேள்விகள் ஒரு அரசாங்கத்திற்கு ஏன் ஏழவில்லை? சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகளை சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. அரசு தடை அறிவித்துள்ள நிலையில், சுமார் 5,500 விநாயகர் சிலைகளை சென்னையில் ஊர்வலமாக கொண்டுபோய் கடலில் கரைப்பதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இப்படி ஒரு பதற்றமான சூழ்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் வேண்டுமா என்று போலீஸார் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்த பிறகு வேறு ஒருநாளில் திறக்கலாம் என்று உளவுத்துறையினர் தரப்பில் அரசு மேலிடத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டதாம். ஆனால், முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஆகஸ்டு 18-ம் தேதி திறக்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். அதைதொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் கடைகளை திறக்கும் தேதியை மீடியாக்களுக்குத் தெரிவித்தனர்.

டாஸ்மாக் | TASMAC

வாடகைக் கட்டடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுககு கல்தா வருமா?

டாஸ்மாக் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு பார் உரிமையாளர்கள்/ கட்டட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்துக்கும் முட்டல் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 2,830 பார்கள் செயல்பட்டு வந்தன. சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பார்களில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பணி செய்து வந்தனர். கடந்த ஆறு மாதங்களாக பார்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆனால், மே மாதம் முதல் சுமார் 3,000 கடைகள் திறக்கபபட்டன. தற்போது சென்னையில் 640 கடைகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவை வாடகைக் கட்டடங்களில்தான் இயங்கி வருகின்றன. மொத்தமாக, இவைகளை மார்ச் மாதமே அரசு மூடச் சொன்னது. அதையடுத்து பார்களை மூடினர். பல இடங்களில் பில்டிங் ஒனர்களுக்கு பார் உரிமையாளர்கள் வாடகை பாக்கி வைத்துள்ளனர். பிஸினஸ் நடக்காததால், இவர்களால் வாடகை தொகையைக் கட்டமுடியாத சூழ்நிலை. தமிழகம் முழுக்க மாதம் சுமார் 45 கோடி ரூபாய் வாடகைப் பணம் கட்டவேண்டும். அந்த வகையில், கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 225 கோடி ரூபாய் கட்டப்படாமல் நிலுவையில் நிற்கிறது. இங்குதான், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்னை வெடித்தது.

இதுபற்றி தமிழ்நாடு பார் உரிமையாளர்கள்/ கட்டட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் தலவைர் அன்பரசன் நம்மிடம் பேசியதாவது,

``பார்களில் ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில் சப்ளையர்கள் என்று பல்வேறு தரப்பினர் வேலை பார்த்து வந்தனர். அவர்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் பார் நடத்த வாடகைக்குப் பிடித்த பில்டிங்குகளில் எங்களுக்கும் அந்த பில்டிங் ஓனர்களுக்கும் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாங்கள் பார் நடத்தும் பில்டிங்குகளில்தான் 90% டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. நாங்கள் கொடுக்கும் வாடகைத் தொகை அதிகம். ஆனால், அதே பில்டிங்குகளில் ஒண்டிக்குடித்தனம் போல டாஸ்மாக் கடைகள் இருக்கும். ஆனால், குறைவான வாடகை. பார் மூடியிருப்பதால், எங்கள் மீது கருணை காட்டி நிலுவையில் உள்ள வாடகைத் தொகையில் கணிசமான தொகையை உதவித்தொகையாக டாஸ்மாக் நிறுவனம் தரவேண்டும் எனறு கோரிக்கை வைத்தோம். இதை இன்றுவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். எங்கள் சங்கப் பிரமுகர்கள் கூடி, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். அதற்குள் சுமுகமாக ஒரு சூழ்நிலை வரும் எனறு நினைக்கிறோம். கூடிய விரைவில் பார்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், குறைந்த வாடகையைச் செலுத்தி வரும் டாஸ்மாக் கடைகள் உள்ள இடத்தை சம்மந்தப்பட்ட பில்டிங் ஓனர்கள் காலி பண்ண சொல்ல வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

டாஸ்மாக்

டாஸ்மாக் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவரிடம் இதுபற்றி கேட்டோம்...

``தமிழகத்தில் தற்போது உள்ள கடைகளில் எண்ணிக்கை 5,338. சென்னையில் இன்று திறக்கப்பட இருக்கும் 640 கடைகளும் அதில் அடக்கம். சென்னையில் தடுப்புப் போடமுடியாத இடம், போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் உள்ள கடைகளை நாங்கள் திறக்கவில்லை. எல்லா கடை முன்னாலும், மரத்தடுப்புகளை கட்டியிருக்கிறார்கள். கடையில் ஒலிபெருக்கி வசதி செய்திருக்கிறோம். டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாஸ்க், ஃபேஸ் ஷீல்டு, க்ளவுஸ், சானிடைஸர் ஆகியவற்றை தந்திருக்கிறோம். கடைக்கு வெளியே 50 வட்டங்களைப் போட்டிருக்கிறார்கள். கடைக்குக் கொஞ்சம் தள்ளி வேறு ஒரு இடத்தில் வைத்துதான் டோக்கன் தர ஏற்பாடு செய்திருக்கிறோம். அங்கேயும் வட்டங்களைப் போட்டிருக்கிறோம். அதில், நின்றபடிதான் யாரும் மதுபானங்களை வாங்க முடியும். ஓரு மணி நேரத்துக்கு 50 டோக்கன்களை மட்டும் விநியோகிப்பார்கள். பணியாளர்களுக்கும், மதுபாட்டில் வாங்க வருகிறவர்களுக்கும் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். பார் உரிமையாளர்கள் சொல்லும் பிரச்னையில், பில்டிங் ஓனர்களுடன் பார் நடத்தும் இடத்துக்காக அவர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளனர். டாஸ்மாக் கடை நடத்த பில்டிங் ஓனர்களுடன் நாங்களே வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளோம். எனவே, பாதிப்பு ஏதும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/policies/controversy-around-tasmac-shops-which-are-operating-in-rental-buildings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக