சென்னை, விருகம்பாக்கம், பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஹோட்டலில் கஞ்சா விற்பனை நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் ஹரிகிரணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் அந்த ஹோட்டலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வளசரவாக்கத்தை சேர்ந்த பிரித்திவிராஜ் ( 22), மதுரவாயலைச் சேர்ந்த எழிலரசன் (22), ராகுல் (22), உபயதுல்லா (22), டேவிட் பிராங்க்ளின் (21) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா, எடை போடும் மிஷின், செல்போன்கள், பைக் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல், சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் எனத் தெரிந்ததும் காவல்துறையினருக்கு கடும் அதிர்ச்சி.
கஞ்சா கும்பல் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களுக்கு ஆந்திராவிலிருந்து கஞ்சா சப்ளை செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. கஞ்சா விற்பனைக்காக கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய செல்போன், வாட்ஸ்அப் குரூப் மூலம் கஞ்சா கும்பலின் தலைவன் குறித்த தகவல் போலீஸாருக்குத் தெரியவந்தது. ஊரடங்கு காலக்கட்டத்தில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு எப்படி கஞ்சா கடத்தப்பட்டது என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து ஆந்திராவில் பதுங்கியிருந்த கஞ்சா கும்பலின் தாதாவான நூதாக்கி ஐசக் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் கூறுகையில், ``சென்னை தி.நகர் காவல் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் கைதான கஞ்சா கும்பலின் தாதா ஐசக் மூலம்தான் சென்னையில் சில பகுதிகளில் கஞ்சா சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 பேரைக் கைது செய்துள்ளோம். 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, 9 செல்போன்கள், டூவிலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். ஊரடங்கு என்பதால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
கல்லூரி மாணவர்கள்தான் ஐசக்கின் டார்க்கெட். கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு, மாணவர்கள் மூலமே கஞ்சா விற்பனை நடந்துள்ளது. இதற்காக ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறிகள் கொண்டு வரும் லாரிகள் மூலம் கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. அது கல்லூரி மாணவர்கள் மூலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கிய கல்லூரி மாணவர்கள் அங்கு கஞ்சாவை பாதுகாத்து வந்துள்ளனர். மேலும், அவைகளை 50 கிராம், 100 கிராம் என எடை போட்டுள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம். வாகனச் சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றார்.
Also Read: சென்னை: சாவு வீட்டில் கஞ்சா போதை, தகராறு! - கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஐ.சி.எஃப் ரெளடி
தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். ``சென்னையைச் சேர்ந்த பிரித்திவிராஜ், சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலம் சென்று நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது, அங்கு வந்த ஐசக்குடன் பிரித்திவிராஜுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐசக்கும், பிரித்திவிராஜிம் கஞ்சா பிசினஸ் தொடர்பாக பேசியுள்ளனர். ஒரு கிலோ கஞ்சா விற்றால் கமிஷனாக 8,000 ரூபாய் வரை கிடைக்கும் என ஐசக் ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதற்கு பிரித்திவிராஜ் சம்மதித்துள்ளார். தன்னுடைய நண்பர்கள் மூலம் பிரித்திவிராஜ் கஞ்சா பிசினஸில் ஈடுபட்டு வந்துள்ளார்.
Also Read: சென்னை: `பெட்ஷீட்டுக்கு ரூ.12 லட்சம், சொகுசு கார்!’ - ஆசையைத் தூண்டி வலைவிரித்த கும்பல்
ஆந்திராவைச் சேர்ந்த ஐசக், தினமும் சென்னைக்கு காய்கறிகளை லாரியில் கொண்டு வரும் அரிபாபு என்பவர் மூலம் கஞ்சாவை அனுப்பி வைத்துள்ளார். அதை பிரித்திவிராஜ் போல ஐசக்கின் கூட்டாளிகள் சென்னை முழுவதும் சப்ளை செய்துவந்துள்ளனர். குறிப்பாகக் கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து இந்தக் கஞ்சா விற்பனை நடந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஐசக் பின்னணி குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.
சென்னையில் கஞ்சா விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை முழுவதும் கஞ்சா விற்பனையைத் தடுக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள முக்கியபுள்ளிகள் தப்பிவருவதாக ரகசியத் தகவல் வெளியாகியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-andhra-gangster-over-ganja-sales-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக