விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமம் கொடுக்கூர். இப்பகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் செங்கல் சூளை கற்களுக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியிருக்கிறார். அப்போது பழமையான முதுமக்கள் தாழிகள், மதுக்குடுவைகள், எலும்புகள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள், கறுப்புப் பானைகள், சிவப்பு நிற பானைகள், கறுப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த பானைகள், பெரிய செங்கற்கள் கிடைத்தன.
தகவல் அறிந்து அங்கு சென்ற விழுப்புரம் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியரும், அகழ்வாராய்ச்சி ஆய்வாளருமான ரமேஷ் கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருள்களை ஆய்வு செய்தார். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆய்வாளர் ரமேஷ், ``பழமைவாய்ந்த கறுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள மண் பானைகள், தாழிகள், எலும்புகள், மதுக் குடுவைகள் கிடைத்துள்ளது. இங்கே கிடைக்கப்பெற்ற மதுக் குடுவையைப் போன்று ஆதிச்சநல்லூரிலும் கிடைத்திருக்கிறது.
Also Read: வைகையைத் தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையிலும் அகழ்வாராய்ச்சி - களமிறங்கும் தொல்லியல் துறை!
ஜாடியின் மூடியில் ஓவியங்கள் காணப்படுகிறது. ஆனால், இங்கே முழுமையாகக் கிடைக்கவில்லை, பாதி மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், பழங்கால கட்டடங்கள் இருந்ததற்கு அடையாளமாக பெரிய செங்கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கிடைத்துள்ளன. சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சங்ககாலப் பொருள்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எலும்புகள் கிடைத்திருப்பதால் இங்கு மனிதர்கள் வசித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, கறுப்பு மற்றும் சிவப்பு வடிவிலான பானைகள் கிடைத்திருப்பதின் மூலம் இவைகள் 2,000 ஆண்டுகள் முற்பட்ட சங்ககாலத்தைச் சார்ந்தது என்பது தெரிகிறது. இதில் மேற்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால் எழுத்து பொறிக்கப்பட்ட அல்லது குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இதுகுறித்து தொல்லியல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அங்கேயே பாதுக்காக்கப்பட்டுள்ளது. இதனை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தால், விழுப்புரம் அரசு கல்லூரியில் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தகவலறிந்து நேரில் சென்று தொல்லியல் பொருள்களை ஆய்வு செய்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ``கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கப் பெற்ற மண் குடுவைகள் இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக்கூடும்.
கீழடியில் கிடைக்கப்பெற்றதை போல் பெரிய செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால், இங்கே அகழாய்வு நடத்த வேண்டும். மேலும், கிடைத்த தொல்லியல் பொருட்கள் தொடர்பாக தமிழக தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்திருக்கிறேன்.
Also Read: `தாழிகள், பானைகள், சுடுமண் குடுவைகள்' - கீழடி 6ம் கட்ட ஆய்வில் கிடைக்கும் பொக்கிஷங்கள்!
ஒரு வார காலத்தில் தொல்லியல் பொருட்கள் கிடைத்த இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்திருக்கிறார்'' என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/variuos-objects-dated-2000-years-ago-retrieved-from-land-in-villupuram-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக