தெலங்கானாவைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன், நந்தினி இருவரும் காதலர்கள். பெற்றோர் எதிர்ப்பு காரணமாகக் கடந்த வருடம் தெலங்கானாவில் பதிவு திருமணம் செய்துகொண்டு, கொடைக்கானல் அட்டுவம்பட்டிக்கு வந்து வாடகை வீடு எடுத்து தங்கினர்.
மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்த கோபிகிருஷ்ணன், வீட்டில் இருந்தே வேலை பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் மனைவி நந்தினி வெளிநாடுகள் பலவற்றில் வேலைக்காக விண்ணபித்து, காத்திருந்திருக்கிறார்.
ஊரடங்கு காரணமாக ஐந்து மாதங்களாகச் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. அட்டுவம்பட்டியிலும் தெரிந்தவர்கள், நண்பர்கள் இல்லாத நிலையில், இருவரும் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதனால் அதீத மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் தங்கியிருந்த பகுதியில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் அவர்கள் நெருங்கிப் பழக முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில் நந்தினிக்கு ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால், பணம் இல்லாமல் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. பொருளாதாரப் பிரச்னை மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால் எங்கும் சென்று பணம் ஈட்ட முடியாமல் மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.
Also Read: சென்னை: `ஆசிட் பாட்டில்; கழிவறையில் வாந்தி' - தடய அறிவியல் துறை பெண் அதிகாரி தற்கொலை?
இந்நிலையில், பயிர்களுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தை காபியில் கலந்து இருவரும் குடித்து, கடந்த புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். பூட்டிய வீட்டினுள் பரிதாபமாக உயிர் விட்டுள்ளனர். இரண்டு நாள்களாக வீட்டில் இருந்து அவர்கள் வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் இருந்து எந்தச் சலனமும் இல்லாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்து, போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். போலீஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இருவரும் இறந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். அவர்களது உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.

வீட்டை சோதனையிட்டபோது, அவர்கள் வைத்திருந்த மூன்று செல்போன் நம்பர்களும் ரீசார்ஜ் செய்யாமல், அவுட்கோயிங் கட்டாகி இருந்திருக்கிறது. வீட்டில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மேலும், அவர்கள் தற்கொலை செய்வதற்கு முன்பு, இறப்புக்கான காரணத்தை அவர்கள் கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில், அவர்கள் மிகுந்த பொருளாதார சிக்கலில் இருந்து, வேலைக்கும் போகமுடியாமல் மன உளைச்சல் அதிகரித்து உயிரைவிட்டதாக மரண வாக்குமூலம் எழுதியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொரோனா ஊரடங்கு, பொருளாதார இழப்பு, தனிமை படுத்திய பாடு உள்ளிட்ட காரணங்களால் பட்டதாரி தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடைக்கானலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/death/telangana-couple-commits-suicide-in-kodaikanal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக