Ad

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

புதுக்கோட்டை: சொகுசுக் காரில் தொடரும் ஆடு திருட்டு!-கலக்கத்தில் ஆடு வளர்ப்போர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் ஆடுகள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சொகுசு கார்களில் ஆடுகள் திருடப்படும் சம்பவம் ஆடு வளர்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (55). விவசாயியான இவர் கடன் வாங்கி 25-க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். தினமும் வீட்டிற்கு அருகே உள்ள வயலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுகிறார்.

ஆடு

வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சாப்பாட்டுக்கு வீட்டு வந்துள்ளார். சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்குப் போன பழனிவேலுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. அந்தப் பகுதியில் சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் 10 ஆடுகளை காருக்குள் தூக்கிப் போட்டுக்கொண்டு திருடிச் சென்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பழனிவேல், ஆலங்குடி போலீஸாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர். இதேபோல், கடந்த மாதம் கறம்பக்குடியைச் சேர்ந்த விவசாயிகளின் ஆடுகள் தொடர்ச்சியாகத் திருடுபோனது.

Also Read: `சொகுசு கார்னா சந்தேகம் வராது!’ - போலீஸாருக்கு அதிர்ச்சி அளித்த ஆடு திருட்டு

அப்போது விசாரித்த போலீஸார், ஹோண்டா சிட்டி காரில் வைத்துத் தொடர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்ட கந்தர்வக்கோட்டையைச் சேர்ந்த அழகப்பன் என்பவரைக் கைது செய்தனர். ஆடு விலை எல்லாம் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தான் சொகுசு காரில் சென்று திருட்டில் ஈடுபட்டால், யாருக்கும் சந்தேகம் வராது என்ற பாணியில் பலரும் ஆடுகள் திருட்டைக் கையிலெடுத்து வருகின்றனர். இதனால், ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள் கலக்கமடைந்திருக்கின்றனர். கொரோனா நேரத்தில் வேலையில்லாதவர்கள் பலரும் ஆடு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``கடந்த சில மாதங்களாகவே காரில் வைத்து ஆடுகள் திருடப்படுவதாகத் தொடர் புகார்கள் வருகிறது. அதற்கேற்ப முக்கியமான இடங்களில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். சந்தேகத்திற்கிடமாக வரும் கார்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்துகிறோம். அதில், ஒரு சில கார்களில் ஆடு திருடும் கும்பலையும் பிடித்துள்ளோம். தொடர்ந்து, கிராமப் பகுதிகளிலும் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியுள்ளோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/goat-theft-increased-in-pudukottai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக