Ad

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஐபிஎல்:`கோவிட்-19 மாற்று வீரர்; 30% ரசிகர்கள்!’ -நிர்வாகக் குழு கூட்டத்தின் ஹைலைட்ஸ்

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தொடங்கிய பின்னர், ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் சம்மர் கொண்டாடமாக அமைந்துவிடும். புதிதாக வெளியாகும் படங்களுக்கு கூட மாலை/இரவு நேர காட்சிகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்துவிடும் அளவுக்கு இருக்கும் ஐ.பி.எல் கொண்டாட்டம். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்தியாவில் பாதுகாப்பு சிக்கல் காரணமாக சில போட்டிகள் வெளிநாட்டு மைதானங்களில் நடத்தப்பட்டிருக்கிறன. ஆனால், இந்த முறை முதல்முறையாக கொரோனா தாக்கம் காரணமாக முழுத் தொடரையும் வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யபட்டது.

ஐபிஎல் - டி20 உலகக்கோப்பை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை ஐ.சி.சி ரத்து செய்தது, ஐபிஎல் தொடருக்கு ஒரு கேட் ஓப்பனிங் ஆக அமைந்துவிட்டது. யு.ஏ.இ யில் வரும் செப்டம்பர் 19 -ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான திட்டமிடல்களும் ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஐபிஎல் நிர்வாகமும், பிசிசிஐ-யும். இங்கிலாந்தில் கடந்த மாதமே ரசிகர்கள் இல்லாமல் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிவிட்டாலும், ஐபிஎல் போட்டிகள் அதனைக் காட்டிலும் அதிக சவால் நிறைந்தவை. மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ள நிலையில், அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள், அணி நிர்வாகத்தினர் எண்ணிக்கை என பல விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கலந்து ஆலோசிக்க நேற்று ஐபிஎல் நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாய், ஷார்ஜா, அபுதாபி மைதானங்கள்!

இந்திய அரசாங்கம் வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்திக் கொள்வதற்கு அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கான அனுமதிக் கடிதத்தை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில், பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரை 57 நாள்கள் நடத்துவதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக 51 நாள்களில் முடித்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் போட்டிகள் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெறும் என்றும் இதற்கான நிர்வாகக் குழுவின் ஒப்புதலும் இந்த கூட்டத்தில் பெறப்பட்டது.

ஐபிஎல்

இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணி சார்பாக, நேரடியாக பங்கேற்பவர்கள் குறித்துதான் அதிகம் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இறுதியாக ஒரு அணிக்கு அதிகபட்சமாக 24 பேர் கொண்ட வீரர்கள் குழுவைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று இரவு போட்டிகளை இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நவம்பர் மாதம் 10-ம் தேதி இறுதிப்போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல்முறையாக வாரநாளில் (செவ்வாய்கிழமை) இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

கோவிட் 19 மாற்று வீரர்:

இந்தக் கூட்டதில் பெண்கள் ஐபிஎல் தொடரை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்துவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பெண்கள் ஐபிஎல் தொடரானது நிச்சயம் நடக்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருக்கிறார். நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரையில் இந்த தொடர் நடத்தப்படும். இந்தத் தகவல் இந்திய பெண்கள் அணியை உற்சாகம் கொள்ள செய்திருக்கிறது.

ஐ.பி.எல்

மேலும், இந்த ஐபிஎல் தொடரில் கொரோனா மாற்று வீரர் திட்டமும் அமல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. தொடரின் நடுவே ஒரு வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டாலோ, அதற்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அவருக்கு பதிலாக அணியில் மாற்று வீரரை சேர்த்துகொள்ள முடியும். எத்தனை வீரர்கள் வரையில் மாற்றி கொள்ள முடியும் என்பதை விரைவில் அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

Also Read: முதல் ரன், முதல் சிக்ஸ், முதல் சதம்... ஐபிஎல்-லில் CSK-வின் பேபி ஸ்டெப்ஸ்! #VikatanInfographics

இதனிடையே ஐபிஎல் தொடருக்கான அனைத்து ஸ்பான்சர்களையும் பிசிசிஐ தக்கவைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் சீன பொருள்களுக்கு எதிரான பிரசாரத்தின் காரணமாக ஐபிஎல் நிர்வாகம், சீன ஸ்பான்சர்களைத் தவிர்க்கும் போன்ற தகவல்கள் வெளியாகின.

ஐபிஎல் கோப்பை

இதனிடையே எமிரேட்ஸ் கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் தொடரின் போது 30% முதல் 50% வரை உள்ளூர் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் குறைந்தது 30% ரசிகர்கள் நேரடியாகப் பார்க்கும் சூழல் உருவாகும். இது தொடர்பாகவும் இந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



source https://sports.vikatan.com/cricket/highlights-of-governing-body-meeting-over-ipl-2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக