Ad

செவ்வாய், 1 நவம்பர், 2022

ஒன் பை டூ

வழக்கறிஞர் பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க

“உண்மையைச் சொல்லியிருக்கிறார். உலகில் வேறு எந்த நாட்டிலும் அல்லது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அங்கிருக்கும் ஒரே ஒரு மீனவன் பாதிக்கப்பட்டால்கூட அந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதும், சிறைப்பிடிக்கப்படும்போதும் இந்திய அரசு எப்போதுமே மாற்றான் தாய் மனப்பான்மையோடுதான் கையாள்கிறது. இந்த வருடம் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்த சுமார் ஐந்து மாதங்களுக்குள் 11 முறை இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 12 படகுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதில் பல கைதுச் சம்பவங்கள் இந்திய எல்லைப் பகுதியிலேயே நடந்திருக்கின்றன. ஆனால், இந்திய அரசு இதுவரை ஒருமுறைகூட இலங்கையை எச்சரிக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒரு பக்கம், பொருளாதாரரீதியாகத் திண்டாடும் இலங்கைக்குப் பல உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது இந்தியா. இன்னொரு பக்கம், இந்திய மீனவர்களைக் கைதுசெய்துகொண்டிருக்கிறது இலங்கை ராணுவம். மோடி பிரதமராவதற்கு முன்பு தமிழகம் வந்திருந்த சமயத்தில், மீனவர்களைத் தொடர்ந்து சிறைப்பிடிப்பதை வேடிக்கை பார்க்கக் கூடாது என்று பேசியிருந்தார். ஆனால், இப்போதும் அது மட்டும்தானே நடந்துகொண்டிருக்கிறது.”

வழக்கறிஞர் பாலு, சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சி.டி.ஆர்.நிர்மல்குமார், ஐடி பிரிவுத் தலைவர், தமிழக பா.ஜ.க

“விவரம் தெரியாமல் பேசியிருக்கிறார். அன்புமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் தமிழக மீனவர்கள் மீது அதிகப்படியான துப்பாக்கிச்சூடு சம்பவமும், மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவமும் நடைபெற்றன. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் தமிழக மீனவர்கள் எந்தவோர் அச்ச உணர்வுமில்லாமல் கடலுக்குச் செல்வதாகப் பல மீனவ அமைப்புகளே சொல்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அனைத்து வகையான உரிமைகளையும் உறுதிசெய்து கொண்டிருக்கிறது. இலங்கைச் சிறையில் சிக்கித் தவித்துவந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய அனைத்து முன்னெடுப்புகளையும் நேரடியாகச் செய்தது பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும்தான். இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களுக்கும், இந்திய தமிழக மீனவர்களுக்குமிடையே நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்னையை, சுமுகமாகத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கடைசியாக இலங்கையிலிருந்து தமிழகம் வந்த மீனவர்களை வரவேற்க நான் நேரில் சென்றிருந்தேன். அவர்கள் அனைவருமே மத்திய அரசின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்கள். அரசியல் காரணங் களுக்காக அன்புமணி இப்படியெல்லாம் பேசியிருக்கலாம்.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-anbumani-ramadoss-statement-about-sri-lanka-atrocities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக