கலைகளில் ஓவியத்துக்கு முக்கிய இடம் உண்டு. மொழி உண்டாவதற்கு முன்பே உருவான கலை ஓவியம் என்பது அறிஞர்கள் கருத்து. காலம் தோறும் ஆன்மிகம் சார்ந்த ஓவியங்கள் பலவும் உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆலயங்களில் மூலவரைப் புகைப்படம் எடுக்கும் வழக்கம் நம் மரபில் இல்லாத காரணத்தால் அதை ஓவியமாக வரைந்து வழிபடும் வழக்கம் உள்ளது. தத்ரூபமாக சந்நிதானத்தில் இருந்து இறைவன் இறங்கி வந்ததுபோன்ற ஓவியங்கள் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துவன. அவ்வாறு வரையப்பட்ட இறை மூர்த்தங்களின் ஓவியங்களுக்கான கண்காட்சி ஒன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றுவருகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள ஓரிக்கை மகாசுவாமி சதாப்தி மணிமண்டபத்தில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இவற்றைத் தீட்டியிருப்பவர் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் திரு. மணிவேலு. தந்தையையே குருவாகப்பெற்று சிலை வடிக்கும் முறை ஓவியம் என்று பல்வேறு கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர். தனது ஓவியங்களின் வழியாகவே ஆன்மிகத்தைக் கண்டடைந்த மணிவேல் சில்ப சாத்திரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுணர்ந்து, பக்தியைத் தனது ஓவியத்தின் வழி வெளிப்படுத்துபவர்.
டாட் ஆர்ட் கேலரி எனப்படும் கல்லூரியைத் தொடங்கி அதன் மூலம் பல்வேறு கலைஞர்களை உருவாக்கிவரும் மணிவேல் அவர்கள் வரைந்துள்ள இறை ஓவியங்கள் இங்கே காட்சிப்ப்டுத்தப்பட்டுள்ளன. 26/8/2021 தொடங்கிய இந்தக் கண்காட்சி 20/9/2021 வரை காஞ்சி ஓரிக்கையில் மகாஸ்வாமி சதாப்தி மணிமண்டபத்தில் நடைபெற உள்ளது. அதன் பின் 1/10/2021 முதல் 03/10/2021 வரை டாட் கேலரி, டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் அம்பத்தூரில் இந்தக் கண்காட்சி தொடந்து நடைபெறும். இந்தக் கண்காட்சிக்கு, 'இறை, இடம்,இவர்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். அதற்கேற்ப கண்ணைக்கவரும் தெய்வத் திருவுருவங்களின் ஓவியங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சிக்கு வந்து தரிசனம் செய்தால் நம் பழைமையான கோயில்கள் பலவற்றையும் சென்று தரிசித்த அனுபவமும் பரவசமும் கிடைக்கும். அந்த அளவுக்கு அந்த அந்த ஆலயங்களின் மூலவரின் சாந்நித்தியம் ஓவியங்களில் நிறைந்து வழிகின்றன.
இந்தக் கண்காட்சியை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா, நிகர் நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் S.V. ராகவனும் கலந்துகொண்டார்.
ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சில மாத காலம் காஞ்சி ஓரிகையில் சாதுர்மஸ்ய விரதம் காரணமாக தியானம் மற்றும் பிற ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடும் முக்கிய தருணமான இந்தக் காலகட்டத்தில் அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த இறைக் கண்காட்சியையும் கண்டு பயன்பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் இது நடத்தப்பட்டு வருகிறது. இத்தருணத்தில் பக்தர்கள் அவரைக் கண்டு ஆசீர்வாதம் பெற தரிசிப்பது வழக்கம். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் தவறாமல் இந்தக் கண்காட்சியைக் கண்டு மகிழுமாறு நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
source https://www.vikatan.com/spiritual/gods/spiritual-photo-gallaery-at-kancheepuram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக