Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

வெற்றிமாறனை புரிந்துக் கொள்ள அந்த ஒரு நிகழ்வு போதும்! - வாசகர் பகிர்வு

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் முப்பது ரூபாய் டிக்கெட்டில் தியேட்டரில் நண்பர்களுடன் சேர்ந்து இரவுக்காட்சி பார்த்த படம் விசாரணை. அன்றிரவு முழுக்க தூக்கமே வரவில்லை. ஒரு உன்னதமான படைப்பு அட்லீஸ்ட் ஒருநாள் இரவாவது நம் மனதை பாதிக்க வேண்டும். அந்த வகையில் விசாரணை என் மனதை பாதித்தது. அதேபோல என் நண்பனையும் மிகவும் பாதித்தது. அவனும் நானும் "விசாரணை" படத்தை பற்றி பேசத் தொடங்கி விடிய விடிய பேசிக்கொண்டிருந்தோம். அப்படிபட்ட உரையாடலில் என் நண்பன் சொன்ன வார்த்தைகள் இன்னமும் நினைவில் இருக்கிறது. "மச்சா... இந்த மாதிரி படம்லா எடுக்கறதுக்கு ஒரு தனி "கட்ஸ்" வேணும்டா..." என்ற வார்த்தைகள் தான் அவை. அவன் சொன்ன அந்த "கட்ஸ்" என்ற வார்த்தை தான் வெற்றிமாறனை எப்போது பார்த்தாலும் என் நினைவுக்கு வருகிறது.

விசாரணை

ஈரோடு புத்தக திருவிழாவிற்கு ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் வெற்றிமாறன். அவருடன் இன்னொரு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் ஆட்சியர் உதயசந்திரன். இருவரும் கலந்துகொண்ட அந்த நிகழ்வில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் வெற்றிமாறன். அப்போது "பொதுவா நம்ம பள்ளி பாடபுத்தகங்கள் சரியான விஷயங்களை மாணவர்களுக்கு சொல்லித் தருவது இல்லை..." என்று சொன்னார் வெற்றிமாறன். அந்த வார்த்தைகள் சொல்வதற்கு தனி தைரியம் வேண்டும். அவர் உதயச்சந்திரன் முன் அந்த வார்த்தைகளை சொல்ல... ஆட்சியர் உதயச்சந்திரனை தமிழக பாடநூல் புத்தகங்களில் புதுவிதமான பாடதிட்டங்களை இடம்பெற செய்யும் பொறுப்பாளராக மாற்றியது காலம். அவர் வந்த பிறகு தமிழக பள்ளிப்பாட புத்தகங்களில் நிறைய முற்போக்கான பாடங்கள்/ கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை கவனிக்க முடிந்தது.

அதேபோல 2016ம் ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் என்ற பிரிவில் சிறந்த மனிதருக்கான "நம்பிக்கை விகடன்" விருதை அற்புதம்மாள் அவர்களின் கையில் வாங்கியிருப்பார் வெற்றி. கடந்த ஓராண்டுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்றிற்குப் பேட்டி அளிக்கும்போது "யாருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்புகிறீர்கள்?" என்ற கேள்விக்கு... முதலில் சற்று தயங்கியவர் அடுத்த சில நொடிகளில் துணிச்சலாக "அற்புதம்மாளின் போராட்டங்களை படமாக்க விரும்புகிறேன்...!" என்று பதில் சொன்னார். அவருடைய துணிச்சல் வியக்க வைத்தது.

தனுஷ், வெற்றிமாறன்

பா. ரஞ்சித்தின் "கூகை" நூலகத்திற்கு சிறப்பு விருந்தினராக உரையாட வந்திருந்த வெற்றிமாறன்... "வடசென்னை" படம் அந்தப் பகுதி மக்களின் முழுமையான வாழ்வியலை பதிவு செய்யும் படமில்லை என்று சொன்னார். அதை எழுத்தாளர் கரன் கார்க்கி "வெற்றிமாறன் தந்திரமாக வடசென்னை மக்களிடமிருந்து தப்பிக்க பார்க்கிறார்" என்பது போல் சொல்ல... அதற்கு வெற்றிமாறன், "அது தந்திரம் இல்லை... நேர்மை..." என்று பதிலளித்தார். உண்மையில் வெற்றிமாறனின் அந்த பதில் ரசிக்க வைத்தது. அந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதல்முறையாக ஒரு கட்சியின் பெயரை அதன் உறுப்பினர்களை செயல்பாடுகளை அந்தக் கட்சி எளிய மக்களை ஏமாற்றும் விதத்தை வெளிப்படையாக திரையில் சொன்னவர் வெற்றிமாறன் தான்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் "ஒரு நாளைக்கு ஒரு ஜிபி" என்ற ஒரு குறும்படத்தை பார்த்த வெற்றிமாறன் அவ்வளவு அறச்சீற்றத்துடன் கமெண்ட் தந்தார்.`` குடிசைப் பகுதியில் வாழும் ஒரு இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி நெட் இலவசமாக கிடைப்பதால் தினமும் ஆபாச படம் பார்த்து சீரழிந்து, ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்கிறான், பிறகு நண்பனால் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்படுக்கிறான்’’ என்பதுதான் அந்தக் குறும்படத்தின் கரு.

இயக்குநர் வெற்றிமாறன்

அப்படிப்பட்ட படம் குடிசைப்பகுதியில் வாழும் எளிய மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கிறது என்று தொடங்கி, எளிய மக்களின் பிரச்னைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார் வெற்றி. அந்த கமெண்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமுக வலைதளங்களில் ஹார்ட்டீன்களை அள்ளியது. மேலும் இரண்டு தினங்களுக்கு அவரின் பிறந்த நாளன்று அந்த வீடியோவை பலர் பகிர்ந்து பாராட்டிக் கொண்டிருந்தனர்.

உண்மைக்கு உண்டான மதிப்பு என்றைக்கும் குறையாது, உண்மையை உரக்க சொல்வதில் யாருக்கும் அஞ்சக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வெற்றிமாறன் இன்னும் நிறைய ஆண்டுகள் பல இதயங்களை வென்று வாழ வாழ்த்துக்கள்!

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-vetrimaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக