'ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?' - அவல நகைச்சுவையில் அமைந்த இந்த நாடகம் ஏறத்தாழ 25 வருடங்களுக்கும் மேலாக ஓடி சமீபத்தில்தான் நிறைவுக்கு வந்தது. இந்த வகையில் ரஜினி நடித்த மிகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று. அவரது திரைப்படங்கள் கூட நூற்றுக்கணக்கான நாள்களுக்கு மேல் மட்டும்தான் தொடர்ந்து ஓடி வெற்றி பெறும். ஆனால் இந்தக் குறிப்பிட்ட நாடகம் இத்தனை நீண்ட வருடங்களுக்கு நிற்காமல் ஓடியதை ஒரு சாதனை என்றே சொல்லலாம். ரஜினியின் 'அரசியல் பிம்பத்தின்' பயணம் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
ஒரு துறையில் பிரபலமாக உள்ளவர்களை அரசியலில் அமர்த்தி அழகு பார்ப்பது உலகமெங்கும் நடைமுறையில் இருக்கிற விஷயம்தான். சினிமாத்துறைதான் இதில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடிகர்களின் மீதுள்ள மோகம் மிக அதிகம். அதிலும் தமிழகத்தில் சொல்லவே வேண்டாம். நமக்கே தெரியும். ஒரு நடிகர் படிப்படியாகத் தாவி முன்னணி வரிசைக்குச் சென்று விட்டால் அவரின் அடுத்த படிக்கட்டு 'தேர்தல் அரசியல்' என்பது தன்னிச்சையான விதியாக மாறிவிட்டது. ஒரு நபர் அவரது துறையில் பிரபலமாக இருப்பதற்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என்று பொதுசமூகம் அவ்வளவாக யோசிப்பதில்லை. பிரபலமான முகமாக இருந்தால் போதும். நமக்கு தன்னிச்சையான நம்பிக்கை வந்துவிடுகிறது.
இந்த அபத்தமான நடைமுறையை தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோக்களில் கூட காணலாம். அது இசையோ, நடனமோ, தனித்திறமையோ... நீதிபதி நாற்காலியில் அமர்ந்து தீர்ப்பு சொல்பவர் யார் என்று பார்த்தால் சற்று பிரபலமான நடிக, நடிகையராக இருப்பார். சம்பந்தப்பட்ட துறையில் அவரது ஞானம் என்ன என்பதை நிகழ்ச்சியை நடத்துநர்களோ, பார்வையாளர்களோ சிறிது கூட யோசிப்பதில்லை. ஒரு சிக்கலான சமகாலப் பிரச்னைக்குக்கூட நடிகர்களிடம் கருத்துகேட்கும் கலாசாரம்தான் இங்கு பெருகியிருக்கிறது.
நிழல் பிம்பங்களுக்கு கண்மூடித்தனமான நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதற்காகவே இவற்றைச் சொல்கிறேன். இந்த நோக்கில் ரஜினியின் அரசியல் பிம்பம் எத்தகையதாக இருந்தது?
'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே' என்கிற வடிவேலுவின் காமெடி மாதிரி, 'ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வந்திருப்பாரா' என்கிற கேள்விக்கு 'ம்ஹூம்' என்று தலையை இடது வலதாக அசைப்பதுதான் பதிலாக இருக்கிறது. ரஜினியை மிகவும் நெருக்கமாக அறிந்த அவரின் நண்பர்களும் நலம்விரும்பிகளுமே இதைத்தான் சொல்கிறார்கள். 'இல்லைங்க... அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது.'
இங்குள்ள சூழலின்படி ஒருவர் அரசியலில் முன்னேறுவதற்கும் அதை தக்க வைப்பதற்கும் பல தகிடுதத்தங்களை செய்ய வேண்டியிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ பல பொய்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு சிறந்த நடிகனை விடவும் பல மடங்கு அதிகமாக நடிக்க வேண்டியிருக்கிறது. பல தந்திரங்களைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் ரஜினியின் அடிப்படை குணாதிசயம் என்பது இவற்றுக்கு முற்றிலும் எதிரானது. "உங்க அரசியல் கொள்கை என்னன்னு கேட்டாங்க. எனக்கு தலை சுத்திடுச்சு" என்று ஒரு மேடையில் வெள்ளந்தியாக சொல்கிறார் ரஜினி.
"உங்கள் அரசியல் கொள்கை என்ன?" என்று எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் அலட்டிக் கொள்ளவேயில்லை. 'அண்ணாயிசம்' என்று ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டார். 'அண்ணாயிசம்' என்றால் யாருக்குமே தெரியாது என்பதுதான் இதிலுள்ள விந்தை. ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னால் அதில் பொருள் இருக்கும் என்று மக்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள். இதுதான் சமயோசித உணர்வு. தவறோ, சரியோ, ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லும் துணிச்சல் வேண்டும். இதுபோன்ற அரசியல் பண்புகள், தலைமைத்துவ உணர்வு போன்றவை ரஜினியிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சினிமா என்னும் சாதனத்தின் வலிமையை திராவிட இயக்கம்தான் முதன்முதலில் நன்றாக அறிந்து கொண்டது. தங்களின் கொள்கை பரப்புரைகளுக்காகவும் அரசியல் வளர்ச்சிக்காகவும் சினிமாவை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது. தொடக்கத்தில் இதற்கு துணை நின்ற எம்.ஜி.ஆர், பிறகு இதை மிக வலிமையாக தனிநபர் கவர்ச்சியாக மாற்றிக் கொண்டார். அரசியல் அடையாளங்களைப் பின்னுக்குத் தள்ளி தன்னுடைய முகத்தை மட்டுமே முன்னணியில் கொண்டு வந்தார். அவர் தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம், கட்சியை விழுங்கிவிடுமோ என்கிற அச்சம்தான் காரணம்.
தன்னுடைய அரசியல் பாதையை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும திட்டமிட்டு வளர்த்துக் கொண்டவர் எம்.ஜி.ஆர். அதற்கேற்பவே தன் சினிமா பிம்பத்தையும் அமைத்துக் கொண்டார். ஆனால் ரஜினியின் கதை வேறு. அவர் முதலில் நடிகர் ஆவதற்கே பல சிரமங்களை தாண்ட வேண்டியிருந்தது. வில்லன் வேடங்களைத்தாண்ட வேண்டியிருந்தது. கதாநாயகனாக சற்று நிலைகொண்ட பின்னாலும் கூட எம்.ஜி.ஆரைப் போல் தன் இமேஜ் குறித்து ரஜினி கவனமாக இருக்கவில்லை. மாறாக சிகரெட்டை ஸ்டைலாகப் பிடித்தார். மது அருந்தும் காட்சிகளில் நடித்தார். எதிர்மறைப் பாத்திரங்களில் நடிக்கவும் அவர் தயங்கவில்லை.
உதாரணத்துக்கு 'நெற்றிக்கண்' என்கிற திரைப்படத்தில் வயதான வேடத்தில், பெண் பித்தனாக நடித்தார். ஆனால் அவர் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த பின்புதான் எம்.ஜி.ஆரின் பாதையை ஓரளவுக்கு பின்பற்றினார். ஆனால் அப்போதும் கூட ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை விடவில்லை. அது அவரது தனித்த அடையாளம் என்பதால் சில விஷயங்களை அவரால் விட முடியவில்லை. ஆனால், ரஜினியால் எம்.ஜி.ஆரைப் போல மாறியிருக்க முடியாது என்பதற்கான காரணங்களும் இருக்கின்றன.
எம்.ஜி.ஆர் திரையில் ஹீரோவாக செயல்பட்ட காலம் வேறு. இன்றைய தேதியில் எம்.ஜி.ஆர் போல் முற்றிலும் நல்லியல்புகளுடன் ஒரு ஹீரோ திரையில் செயல்பட்டால் 'லாஜிக்கே இல்லையேப்பா' என்று மக்கள் சிரித்து, நிராகரித்து விடுவார்கள். எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் சில உள்ள தேய்வழக்குகள் இன்று கிண்டலுக்கு ஆட்படுவதே அதற்கு உதாரணம்.
இன்றைய ஹீரோவின் பாத்திரம் என்பது சில தீய வழக்கங்களைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் நல்லவனாகவே இருக்கும். விக்ரம் நடித்த 'சாமி' படத்தின் ஹீரோ பாத்திரம் இதற்கு சிறந்த உதாரணம். மேற்பார்வைக்கு அந்தப் பாத்திரம் சில ரகசிய தீமைகளைக் கொண்டிருப்பதாக முதலில் தோன்றும். ஆனால் கடைசியில் பார்த்தால் அவை எல்லாமே பொது நன்மைக்காக என்பதாக இருக்கும்.
அவை தீய வழக்கங்கள் என்றாலும் கூட, இன்றைய சினிமா ஹீரோ மக்களின் சராசரியான பழக்கங்களோடுதான் தன்னை சித்திரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் போல் முற்றிலும் 'நல்லவனாக' தன்னை சித்திரித்துக் கொள்ள முடியாது. எம்.ஜி.ஆர் பெண்களை நோக்கி ஓட மாட்டார்; மாறாக பெண்கள்தான் அவரைத் தேடி வந்து விழுவார்கள். ஆனால் இன்றைய ஹீரோ தன் காதலைச் சம்பாதிக்க வெட்கமேயில்லாமல் நாயகியைத் துரத்த வேண்டும். எம்.ஜி.ஆர் திரையில் புகையையோ, மதுவையோ தொடமாட்டார். ஆனால் பிறகு வந்த ஹீரோக்களுக்கு சிகரெட் கொண்டுதான் ஸ்டைல் செய்ய முடியும்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். நடிகர்களின் மோகத்தில், தாக்கத்தில் சமூகத்தில் நிகழும் சிலபல தீய எதிர்வினைகளைப் பார்க்கும் போது நமக்கு மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் தேவை என்று சொல்ல முடிகிறது. அது பாவனையாகவே இருந்தாலும் முற்றிலும் நல்லியல்புகளை வெளிப்படுத்தும் நாயக பிம்பம் நமக்கு நிச்சயமாகத் தேவை. அப்போதாவது இளம் பார்வையாள மனங்களில் ஏற்படும் எதிர்மறைத்தாக்கம் குறையலாம். 'அடிடா அவளை...' என்று எம்.ஜி.ஆரின் பிம்பம் நிச்சயம் வெறித்தனம் கொள்ளாது.
**********
திரைக்குள் தோன்றும் தன் பிம்பம் குறித்து ஒரு காலகட்டம் வரைக்கும் ரஜினி அதிக அக்கறை கொள்ளாதவாறாக இருந்தார். என்றாலும் ரஜினிக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பும் செல்வாக்கும் பிரமிக்க வைக்கிறது. மக்களை ஈர்க்கும் ஏதோவொரு கவர்ச்சி அவரிடம் கணிசமாக அமைந்திருந்தது. "கோடியிலே ஒருத்தனுக்கு ராசி உச்சத்திலே,எந்த குறைகளுமே அவன்கிட்டதான் தேடி வந்ததில்லே" என்று ரஜினியே பாடுவது போல் பாடல் வரி உண்டு. (‘’என்னோட ராசி நல்ல ராசி’’). இது யாருக்குப் பொருந்துமோ... இல்லையோ... ரஜினிக்கு மிக கச்சிதமாகப் பொருந்தும்.
அவர் நிற்பது, நடப்பது, அசைவது எல்லாமே ஸ்டைலாகப் பார்க்கப்பட்டது. அவர் தமிழை குறைபட்டதாக உச்சரித்தாலும் கூட அதுவும் பிரத்யேக ஸ்டைல் அடையாளமாக மாறியது. அவர் தொடர்பான ஒவ்வொன்றுமே 'ஹாட் நியூஸ்' ஆக மாறியது. எனில் ரஜினியின் வெற்றியில் அவரது உழைப்பு என்பதே இல்லையா? எல்லாமே வெறும் அதிர்ஷ்டம்தானா என்றொரு கேள்வி எழலாம். நிச்சயம் இருந்தது. அவரது உழைப்பு பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஆக... மக்களின் இத்தனை செல்வாக்கைப் பெற்ற ஒருவரை நோக்கி 'அதிகார அரசியல்' என்னும் விஷயம் வராமலா இருக்கும்? வந்தது. எம்.ஜி.ஆர் இந்த அரசியலை நோக்கி தன்னை கவனமாகத் திட்டமிட்டுக் கொண்டார். அதை நோக்கிய பயணத்தை அவரே அமைத்துக் கொண்டார். ஆனால் ரஜினி இது குறித்த அக்கறை இல்லாமல் இருந்தார். ஆனால் சில தனிப்பட்ட சர்ச்சைகள் அவரை அரசியலின் உள்ளே இழுத்தன.
Also Read: `மூன்று முடிச்சு’ டு `கபாலி’ … ரஜினி கரியரிலேயே சிறப்பாக நடித்தது இந்த 12 படங்கள்தானா?!
'எம்.ஜி.ஆர் அரசியலை நோக்கி நகர்ந்தார். ஆனால் ரஜினியைத் தேடி அரசியலே நகர்ந்து வந்தது' என்று இதைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். இதுதான் எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்கும் உள்ள அடிப்படையான வித்தியாசம். பெயரில் காந்தத்தை வைத்துக் கொண்டிருப்பதால் மக்களை ஈர்த்தது போலவே அரசியல் என்னும் சமாசாரத்தையும் ரஜினி ஈர்த்தார் என்று 'கவித்தனமாக' இதைச் சொல்லிப் பார்க்கலாம்.
ஒரு வேளை ரஜினியும் சட்டென்று தீர்மானித்து பல வருடங்களுக்கு முன்பே அரசியலுக்குள் இறங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? ஒரு மிகப்பெரிய தோல்விப்படத்தை ரஜினி தந்ததுபோல் அது ஆகியிருக்கக்கூடும். காரணம் முன்பே சொன்னதுதான். ஒரு வழக்கமான அரசியல்வாதியின் தகிடுதத்த கல்யாண குணங்கள் ரஜினியிடம் கிடையாது. தன்னுடைய உள்ளுணர்வு வழிநடத்துவதின் படியாக பயணிப்பவர் அவர். புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் கூட அதிலிருந்து விலகியே நடக்க முயல்பவர். அவருடைய தேடலே முற்றிலும் வேறு. இதெல்லாம் அரசியலுக்கு ஒத்து வராத விஷயங்கள். அவர் 96-ல் அரசியலில் சட்டென்று குதித்திருந்தாலும் கூட அதிவிரைவில் தன் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பார். இது சார்ந்த தயக்கம்தான் அவரை 25 வருடங்களுக்கும் மேலாக தடுமாற்றத்தில் வைத்துக் கொண்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்கு நிகரான பிம்பத்தைப் பெற்றிருந்தாலும், அரசியல் என்னும் கிரிக்கெட்டில் ரஜினியால் ஒரு ரன் கூட எடுத்திருக்க முடியாது. ஏன்?
------- இன்னமும் விரிவாக அலசுவோம் -------
source https://cinema.vikatan.com/politics/naanum-neeyuma-why-rajinikanth-didnt-fare-like-mgr-in-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக