Ad

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் - 'எங்களுக்குக் கிடைத்த வெற்றி...அது பழைய கோரிக்கை' - பாமக Vs திமுக!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிதியாண்டுக்கான, பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் வேளாண்துறைக்கான தனி பட்ஜெட்டை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர்

தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் என்கிற வாக்குறுதியைக் கொடுத்திருந்தது. கடந்த ஜூன் 21-ம் தேதி, சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அதை உறுதி செய்தார். தொடர்ந்து, விவசாயிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் அறிந்துகொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நடைபெற்றது. அந்தக் கூட்டங்களில், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கடந்த நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், ''தமிழ்நாடு பட்ஜெட் வரும் 13-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது'' என்று பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அதேபோல, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் என்கிற தகவலும் வெளியானது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு பல தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. இந்தநிலையில் தனி பட்ஜெட்டுக்கான அவசியம் குறித்து, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசும்போது,

'' இதற்கு முன்பாக ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலாகவே வேளாண்துறைக்கு தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். வேளாண்துறையை, வேளாண் மற்றும் உழவர் நலன் துறை எனப் பெயர் மாற்றம் செய்தார்கள். பொதுப்பணித்துறையின் ஒரு பகுதியாக இருந்த நீர்வளர்ச்சிக்கென தனித்துறை ஆக்கியிருக்கிறார்கள். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கவேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது. அதனால்தான், பத்தாண்டுகளுக்கான நீண்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள்.

ப்ரியன்

தனி பட்ஜெட் போடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, மத்திய அரசின், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு, மாநில அரசு தற்போது அதிகமாக பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல, பயிர் சாகுபடியில் புதிய நவீன வேளாண் முறைகளை புகுத்த வேண்டியிருக்கிறது. உழவர்கள் குழுக்களை உருவாக்கும் திட்டமும் அரசிடம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டும் வேலைகளையும் (Value added forming ) செய்யவேண்டியிருக்கிறது. உதாரணமாக, மாம்பழத்தை, ஜூஸாக மாற்றி விற்பனை செய்வது போன்ற பல திட்டங்கள் இருக்கின்றன. இயற்கை விவசாயம், தோட்டக்கலை சார்ந்த விஷயங்களைஊக்கப்படுத்த வேண்டியிருக்கிறது. அதேபோல, உழவர் சந்தைகளை அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. உழவர் நலன் சார்ந்த விஷயங்களுக்கும் அதிக பணம் தேவைப்படுகிறது. மண் சார்ந்த ஆராய்ச்சிகளையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆக, மொத்தத்தில் வேளாண்துறைக்கே பெரிய ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது. அதற்கு இந்த தனி பட்ஜெட் நிச்சயம் உதவும் என நான் நினைக்கிறேன்'' என்கிறார் அவர்.

இந்தநிலையில், ''பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தது எங்கள் கட்சிதான். இதற்கான கிரெடிட் எங்களுக்குத்தான்'' என்கிறார்கள் பா.ம.கவினர்.

Also Read: `தேர்தல் அறிக்கை டு பட்ஜெட்’ - பொது, வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ள திட்டங்கள் என்னென்ன?

இதுகுறித்து பா.ம.கவின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் பாலு பேசும்போது,

''கடந்த 14 ஆண்டுகளாக, வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க வெளியிட்டு வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மற்ற விஷயங்களைக் காட்டிலும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகிய மூன்று விஷயங்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதிலும், விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனி பட்ஜெட் வெளியிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வந்தோம். அந்த வகையில், தேர்தல் அறிக்கையில் தி.மு.க கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற இருக்கிறது.

வழக்கறிஞர் பாலு

இதுமட்டுமல்ல, வேளாண்துறை சார்ந்து ஆக்கப்பூர்வமான பல ஆலோசனைகளை தொடர்ந்து நாங்கள் சொல்லி வருகிறோம். அந்தவகையில், நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் வேண்டும் என்கிற கோரிக்கையையும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்தோம். இந்தமுறை, அது உருவாக்கப்பட்டு துரைமுருகன் அந்தத் துறையின் அமைச்சராக இருக்கிறார். இந்த விஷயங்களை செயல்படுத்தியதற்கான கிரெடிட் தி.மு.க எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், அதற்கான சிந்தனை பா.ம.கவுக்குச் சொந்தமானது. அதேபோல, தமிழக சட்டமன்ற வரலாற்றில், வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கும், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்த மருத்துவர் ஐயா ராமதாஸை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கவேண்டும்'' என்றார் அவர்.

தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டைன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

'' ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு திட்டங்களும் துறைகளும் அதற்கான தேவை உருவாகும்போது, கொண்டு வரப்படுவது இயல்பான ஒரு விஷயம். அந்தவகையில், இன்றைய காலகட்டத்தில் விவசாயிகளின் பிரச்னை முதன்மையானதாக இருப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் 35 சதவிகித ஜி.டி.பி விவசாயத்தில் இருந்துதான் வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கான கட்டுபடியான வருமானம் இல்லை. அவர்களின் பிரச்னைகளைச் சரிசெய்யவேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அவர்களின் வாழ்வை மேம்படுத்த, தனி பட்ஜெட் அவசியமாக இருக்கிறது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பா.ம.க இந்தக் கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்ததை நான் மறுக்கவில்லை. அதற்கான கிரெடிட்டை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், செயல்படுத்துகிற இடத்தில் தி.மு.கதான் இருக்கிறது. அதுமட்டுமல்ல, முதல் பட்ஜெட்டை நேரு தாக்கல் செய்தபோதே, ரயில்வேக்கு தனி பட்ஜெட் இருப்பதுபோல, வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் வேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. அதனால், பா.ம.கதான் முதன்முதலாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தது என்று சொல்லமுடியாது'' என்கிறார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/detailed-story-about-separate-budget-for-agriculture-dmk-vs-pmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக