Ad

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

செல்போனில் ஆபாசப் படம்; சைபர் கிரைம் போலீஸார் என சிறுவனிடம் பணம் பறிப்பு! - சிக்கியது எப்படி?

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மாணவனின் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட ஒருவர், ``நான் சைபர் கிரைம்ல இருந்து பேசுறேன், நீ தொடர்ந்து ஆபாசப் படம் பார்த்துக்கிட்டு இருக்க, அதை டிராக் பண்ணி கண்டுபிடிச்சிட்டோம். ஆபாசப் படம் பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் விரைவிலேயே வழக்குப்பதிவு செய்ய இருக்கோம். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் தான் சொல்லும் கூகுள் பே நம்பருக்கு ரூ.20ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும்” என பேசியுள்ளனர்.

இதனால் பயந்து போன அந்தச் சிறுவன் தந்தையிடம் வேறு காரணங்களைக் கூறி ரூ.20ஆயிரம் பணத்தை வாங்கி அந்த கூகுள் பே நம்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து இதுபற்றி துருவி விசாரித்த சிறுவனின் சித்தப்பாவிடம், நடந்த சம்பவத்தைச் சிறுவன் கூற நேரடியாக சைபர் கிரைம் போலீஸாரை நேரடியாக சந்தித்து இதுபற்றிக் கேட்டறிந்தார். அப்போது தான், சைபர் கிரைம் போலீஸார் பெயரைச் சொல்லி மர்ம நபர்கள் சிறுவனை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் சித்தப்பா கொடுத்த புகாரின் பேரில் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

சிறுவனை தொடர்பு கொண்ட நபர்களின் செல்போன் எண், கூகுள் பே எண் ஆகியவற்றை வாங்கினர். அதன்பின்பு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன்(43) அவரது உறவினர் பிரகாஷ்(24) என்ற இருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இதுபோன்றவர்கள் குறிப்பாக, மொபைல் உபயோகப்படுத்தும் சிறுவர்களைக் குறி வைத்துத் தான் பணம் பறித்தலில் ஈடுபடுகின்றனர். அதற்கு சைபர் கிரைம் போலீஸாரின் பெயரைப் பயன்படுத்தினால், பயந்து உடனே பணம் அனுப்பிவிடுவார்கள் என்று சிறுவர்களின் மொபைலை சில அப்ளிகேஷன் வழியாக ஆராய்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று சைபர் கிரைம் போலீஸாரின் பெயரைச் சொல்லி யாரேனும் போன் செய்து பணம் கேட்டால், உடனடியாக சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தகவலைத் தெரிவிக்கணும். அதே நேரத்தில் சிறுவர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பது போன்ற தவறான நடவடிக்கைகளுக்குச் செல்கிறார்களா என்பது குறித்துப் பெற்றோர்கள் சிறுவர்களை கண்காணித்துக் கண்டிக்க வேண்டும்" என்றனர்.

Also Read: நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!



source https://www.vikatan.com/news/crime/two-man-arrested-who-were-cheated-in-the-name-of-cyber-crime-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக