Ad

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

பெங்களூர் புகழேந்தியின் வழக்கு: ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு! -புதிய சிக்கலில் ஓ.பி.எஸ்/இ.பி.எஸ்?

பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, இ.பி.எஸ்/ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, எம்.பி/எம்.எல்.ஏ க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளராகவும் ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராகவும் பதவிவகித்த பெங்களூர் புகழேந்தி, கட்சியிலிருந்து கடந்த ஜூன் 14-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை நீக்கியது தொடர்பாக, இ.பி.எஸ்/ஒ.பி.எஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், `'கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் கழகச் செய்தித் தொடர்பாளர் வ.புகழேந்தி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்படுகிறார்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புகழேந்தி

இந்தநிலையில், தன்னைக் கட்சியில் இருந்து நீக்கியது தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு, ஆகஸ்ட் 24-ம் தேதி நேரில் ஆஜராக ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஒ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர்.

அதில், 'அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும் புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம். அதற்குக் கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உண்டு. உறுப்பினர் ஒருவரைக் கட்சியில் இருந்து நீக்கிய விவரத்தை கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது அவதூறு குற்றமாகாது. இதைக் கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, தங்களுக்கு சம்மன் அனுப்பியது தவறு'' என்றும் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை

இந்த வழக்கு தொடர்பாக இன்று(24-08-2021) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதால் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகள் வெள்ளிக்கிழமை தான் பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார். அதேசமயம், ''விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம்'' என நீதிபதி அனுமதியளித்தார்.

Also Read: '12 மணி நேரமா பால் காய்ச்சினார்..?' - அ.தி.மு.க-விலிருந்து புகழேந்தி நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

இந்தநிலையில், ''அவசர அவசரமாக புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கொஞ்சம் பொறுமையாக முடிவெடுக்கலாமே என நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவதூறு வழக்கை ரத்து செய்யமுடியாது எனச் சொன்ன நீதிபதிகள், கட்சியில் இருந்து புகழேந்தியை நீக்கியதே தவறு என தீர்ப்பளித்தால் இவர்களுக்குத்தான் அசிங்கம். அவசரப்பட்டு முடிவெடுத்தால் இதுதான் நிலைமை. கட்சித் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல'' என நொந்துகொள்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள் சிலர்.

இதுகுறித்து மிகவிரிவாகப் பேசியவர்கள்,

'' அ.தி.மு.க சட்டமன்ற நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்தான் ஜூன் 14-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அன்றே புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என விடாப்பிடியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவர் விருப்பப்பட்டதுபோலவே, கட்சியை விட்டும் நீக்கினார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவர் நடந்துகொண்டார் என்றால், அவரிடம் அதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கவேண்டும். கட்சியில், ஒழுங்கு நடவடிக்குக் குழு என்று ஒன்று எதற்கு இருக்கிறது. ஐந்து பேர் உறுப்பினர்களாக எதற்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அ.தி.மு.க.

கட்சியிலிருந்து ஏன் உங்களை நீக்கக் கூடாது என புகழேந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கவேண்டும். அவர் அதற்குப் பதில் அளிக்காவிட்டால் நேரில் வந்து பதிலளிக்க அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அதையும் அவர் புறக்கணித்திருந்தால் மட்டுமே அவரக் கட்சியிலிருந்து நீக்க முடியும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக அன்று முடிவெடுத்தார். இன்று கோர்ட்டில் ஆஜராகுமளவுக்கு வந்து நிற்கிறது. தன்னைக் கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் இருவருக்கும் இல்லை எனவும் புகழேந்தி மனுவில் கூறியிருக்கிறார். அதை நீதிமன்றமும் உறுதி செய்தால் கட்சித் தலைமைகளின் பெயர் இன்னும் டேமேஜ் ஆகும். கட்சியும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடும். கட்சியை விட்டு நீக்கும்போதே, 'இடி அமீன் போல எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார், அவரைச் சும்மாவிட மாட்டேன்' என புகழேந்தி கோபமாகச் சொன்னார், தற்போது சொன்னபடியே செய்துவிட்டார்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-banglore-pugazhenthi-case-against-ops-eps

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக