புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்றிரவு செய்தியாளர்களுக்கு அளித்த காணொளி பேட்டியில், “புதுச்சேரியில் என்ஆர் காங்., பாஜக கூட்டணி வந்த பிறகு நிலங்கள் மற்றும் வீடுகள் அபகரிப்பு அதிகரித்திருக்கிறது. போலி பத்திரங்கள் தயார் செய்து. அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து அபகரிக்கும் வேலை நடந்து வருகிறது. அரசியல்வாதிகள் ஒத்துழைப்புடன் ஒருசிலர் போலி பத்திரங்கள் தயாரிக்கும் வேலையை செய்திருக்கிறார்கள். பிரான்ஸ் நாட்டின் குடியிரிமை பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் வீடு, மனைகளை கண்டுபிடித்து, அதற்கு போலியாக பத்திரம் தயார் செய்து சொத்துகளை அபகரித்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியிருக்கிறார்கள்.
போலி கையெழுத்திட்டு 20-க்கும் மேற்பட்ட பத்திரங்களை தயாரித்துள்ளனர். இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் உள்ளனர். சில வியாபாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். சில அரசியல்வாதிகளுக்கும் இதுபோன்ற பத்திரங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதுசம்பந்தமான விசாரணையை காவல்துறை செய்து வருகிறது. கூட்டமாக ஒருசிலர் சேர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புகாரின் அடிப்படையில் 10 போலி பத்திரங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 பத்திரங்கள் தயார் செய்து ரூ.50 கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளது. போலி பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவர்கள், போலி கையெழுத்து போட்டவர்கள், பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் நபர்களின் விவரங்கள் எங்களிடம் உள்ளன.
Also Read: `பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்!' - சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ
இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற விவரமும் எங்களுக்கு வந்துள்ளது. புதுவையில் பல கொலைகளை செய்துவிட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது மிகப்பெரிய நில அபகரிப்பு ஊழல். இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதன் மூலம்தான் உண்மையை கண்டறிந்து, சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடியும். இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் வழக்கை சி.பி.ஐ எடுத்து நடத்த கோரி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவேன்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-former-cm-narayanaswamy-press-meet-regarding-land-grabbing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக